இன்றைய காலத்தில் தாந்திரா என்ற வார்த்தை மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மந்திர தந்திரம் என்பவற்றோடு சேர்த்து தாந்திரீகம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு புறத்தில் மேற்கத்தையவர்கள் தாந்திரீக யோகத்தினை காமம், உடலுறவுடன் தொடர்புடைய ஒரு யோகம் ஆக பிரச்சாரப்படுத்தி வருகின்றன. உண்மையில் தாந்திரீகம் மற்றைய வழிகள் போலல்லாது மனிதவாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு அடையும் நிலையினை போதிப்பது. ஆகவே தாந்திரீகத்தில் காமமும் ஒரு பகுதி, ஆனால் காமம்தான் தாந்திரீகம் இல்லை.
தாந்திரீகம் கொள்கைகளை நம்பிக்கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கற்பனை செய்யும் மதம் அல்ல, மாறாக எந்த நிலையில் உள்ளவரையும் சுய அனுபவத்தின் மூலம் உயர் நிலையினை அனுபவிக்க செய்கிறது. அந்த அடிப்படையில் மனித உடலின் ஒரு அத்தியாவசிய தேவையான உடலுறவு மூலமும் இறைவனை அடையும் வழியினையும் காட்டுகிறது. காதல் செய்வது ஒரு பூஜையாகவும் வழிபாடாகவும் ஆக்கும் செய்முறையினை சொல்லித்தருகிறது. அது வாழ்வை ஒரு இன்பமான பரிசாக பார்க்கிறது. தாந்திராவின் படி வாழ்க்கையின் அனைத்துமே உங்களுக்கு ஞானத்தினை கற்பிக்கக்கூடியது. வாழ்வின் எந்த ஒரு பகுதியினையும் விட்டுவிட்டு ஓடத்தேவையில்லை. தாந்திரா மூலம் மெதுமெதுவாக தெய்வீக ஒளியினை நம்முள் காணும் தன்மையினை பக்குவத்தினை பெறுவோம். தாந்திரீக சாதகன் தன்னுடைய புலன்களை, மனதை, ஆன்மாவினை மெது மெதுவாக உயர்த்தி பேரின்பத்தில் ஒன்றும் தன்மையினை பெறுவான்.
தாந்திரீகத்தின் படி ஆணும் பெண்ணும் ஒரே வெளிப்பாட்டின் விம்பங்கள் போன்றவர்கள், பிரபஞ்ச ஆற்றலில் ஆண் தன்மையினை சிவம் என்றும் பெண் தன்மையினை சக்தி என்றும் அழைப்பர். இதனை தாவோயிசத்தில் யிங் - பெண், யங் - ஆண் சக்தி. இந்த சக்தி ஒருவனில் எப்போது குறையாகவே காணப்படும். இது பூரணப்படும் போது ஒருவனுக்கு பிறப்பு இறப்பாகிய சுழற்சியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. இந்த விடுதலை நடைபெறும் போது அவனே இறைவன் ஆகிறான். ஆக தாந்திரீக சாதனை மூலம் ஒருவன் தனது உடலில் உள்ள பிரபஞ்ச சக்திகளை பூரணப்படுத்த முயல்கிறான், அதற்கு உடலுறவும் ஒரு சாதனமாக பயன்படுத்தலாம். இதுவும் தாந்திரீகத்தில் ஒரு வழியே அல்லாமல், இதுதான் ஒரு வழி அல்ல என்பதனை கவனியுங்கள்.
தாந்திரா மனித உடலில் ஏற்படக்கூடிய அடிப்படை உந்தலை உயர்ந்த நோக்கத்தினை அடைவதற்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதனுடன் சண்டை பிடிக்காமல் ஒத்துப்போய் அதனை வைத்தே அதை வெல்லும் சூட்சுமத்தினை சொல்லிக்கொடுக்கிறது. ஏனெனில் மனித மனத்தை ஆட்டுவிக்கும் உணர்ச்சிகளில் மிகவும் சக்தி வாய்ந்ததும் வெல்லுவதற்கு கஷ்டமானதும் காமம் ஆகும். அத்தகையவனுடன் சண்டை போடாமல், நட்புடன் அவனது உதவியை பெற்றுக்கொண்டு எமது வேலையை முடிப்பது இலகுவான வழி அல்லவா? அதே போல் இந்த வழியில் கவனமும் தேவை, பெரும் அதிகாரத்தில் உள்ள பலமானவருடன் நட்புக்கொண்டுவிட்டு எமது பக்குவமின்மையால் பகைத்துக்கொண்டால் ஏற்படும் நிலையும் உண்டு என்பதனை மனதில் கொள்ளவேண்டும். பலர் இதற்கு பயந்துதான் இதனை செய்யக்கூடாது ஆபத்தான வழி என்று ஒதுக்கி விட்டார்கள். இது ஆபத்தான வழி இல்லை, நாம் பக்குவம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் ஆபத்துதான், உதாரணமாக இன்றைய வாகன நெரிசலில் வீதியில் நாம் சற்று கவனம் தப்பினாலும் உயிராபத்திலோ அல்லது உடல் ஊனத்திலோ கொண்டு போய் விட்டுவிடும். இதில் நாம் கவனமாக நடப்பது போன்றே இந்த வழியும். அதுபோல் தனது செய்கைகளால் ஏற்படும் விளைவுகளுக்கு தான்தான் காரணம் என்று மனவலிமையுடன் பொறுப்பினை ஏற்கமுடியாத கோழைகளும் இந்த வழியில் ஈடுபடமுடியாது. இவை எல்லாம் குருவருளாலே சாதகனுக்கு கைகூடும். தாந்திராவில் குரு சிஷ்ய உறவு மிக முக்கியமானது.
முக்தியின் இலக்கு பரப்பிரம்மத்துடன் இணைதல், சாதாரண நிலையில் இதனை அனுபவிக்கும் ஒரு மாதிரியினை தாந்திரா சொல்லிக்கொடுக்கிறது. விண்வெளிக்கு செல்பவர் செல்வதற்கு முன்னர் பூமியிலேயே அதற்குரிய சூழலை உருவாக்கி அவரை தயார்படுத்துவது போல் பிரம்மத்துடன் இணையும் நிலையினை உடலில் இருக்கும் போது உடலுறவின் போதே அனுபவிக்கச் சொல்லிக்கொடுக்கிறது. இதனை விளங்கிக்கொள்வதற்கு காமத்தின் மீதான மனப்பாங்கு முக்கியமான ஒன்றாகும்.
முதலாவது தாந்திரீகத்தினை மறுக்கும் ஆன்மீகர்களின் கூற்று "உடலுறவு காமம் என்பது மனித சந்ததி விருத்திக்காக மட்டுமே" இதில் மட்டுமே என்பதனை தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு யதார்த்த உண்மைகள் சில காணப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருப்பதில்லை, அப்படியானால் வாழ்க்கையில் இரண்டு தடவைதான் உடலுறவு கொள்ளவேண்டும் என்றல்லவா அர்த்தப்படுகிறது. இப்படியான கருத்தால் பெரும்பாலானவர்கள் தாம் ஆன்மீகத்திற்கு தகுதியற்றவர்கள் என்ற தாழ்வுமனப்பான்மையில் தமது ஆத்ம சக்தியினை அழித்துக்கொள்கிறார்கள். பலர் பூர்வ ஜென்ம விளைவாக ஆன்மீக தாகம் இருக்கும், ஆனால் இந்தப்பிறப்பில் இப்படியான கருத்துக்களை மனதில் போட்டுக்கொண்டு அதே நேரம் அவர்கள் விதிப்பயனாக அமைந்த மனைவி, மக்களுடன் சந்தோஷமாக வாழ இயலாமல், இப்படியான தாழ்வு மனப்பான்மைகளுக்குள் சென்று வாழ்வை துன்பமாக்கிக்கொண்டிருப்பார்கள்.
அப்படியானால் இந்தக்கூற்று உண்மையா இல்லை? உண்மை அதேவேளை முற்றும் உண்மை இல்லை, இதற்கு பதிலாக தாந்திரீகம் சொல்கிறது, ஆமாம் உனது சந்ததி விருத்திக்கு உடலுறவை பயன்படுத்திக்கொள், அதன் பின்னரும் உனது மனம் அதில் நாட்டம் பெற்றால் அதனை மிருக இச்சையாக இல்லாமல் ஒரு வழிபாடாக்கி உயர்ந்த பண்பு மாற்றத்தினை உண்டு பண்ணிகொள்ளலாம் என்று கூறுகிறது. இதன் படி சாதாரணமானவனும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் தன்னை உயர்த்திக்கொள்ளும் வழிமுறையினை போதிக்கிறது.
இதுவரை இந்த கட்டுரைகளை பொருமையாக படித்தமைக்கு நன்றி மேலும் இதில் புரியாத வார்த்தைகள் இருப்பின் ஒருமுறைக்கு இரண்டு முறைக்கு மேல் வாசித்து பாருங்கள் புரியும் நன்றி வாழ்க வளமுடன்.
காம ரகசியம் முற்றும்