1 ஆக., 2020

காம ரகசியம் 11 - உடலுறவையே பிரம்மச்சரியமாக்கும் தாந்திரீக பயிற்சி



தாந்திரீகம் பிரம்மச்சரியத்தை அணுகுவதில் நேரடியான வழியினை காட்டுகிறது, மற்றைய யோகங்கள், ஆன்மீக வழிகள் சுற்றுப்பாதையினைதான் காட்டுகின்றன. அந்த வகையில் தற்கால உலகில் யோகம் என்பது உடலினை நன்றாக வைத்திருக்க உதவும் ஒருவித உடற்பயிற்சி என்ற வகையில் நின்றுவிடுகிறது. இன்று யோகம் படிப்பிக்கிறேன், யோகாசனம் செய்கிறேன் என்பவர்களுக்கு தமது உடல் நலம் நன்றாக இருப்பதற்கும், நீரிழிவு இல்லாமல் போவதற்கும் என கூறுகின்றார்கள். இதன் ஆழத்தில் எமது சித்தர்கள் வகுத்து வைத்ததன் தேவை மனிதன் தனது நிலையில் இருந்து மேலான நிலை ஒன்றினை அடைவதற்கான வழிமுறையினை காட்டுவதற்கே! ஆனால் அவை என்னவென்பதனை அறியும் சாவிகளை நாம் இழந்துவிட்டோம்.

இந்தப்பதிவில் காம எழுச்சியினையும் விந்து சக்தியினை உயர்ந்த சக்தியாக்கும் செயல் முறையினையினதும் அடிப்படையினை பார்ப்போம். இந்த பதிவின் நோக்கம் இப்படியொரு அரிய அறிவு இருக்கின்றது என்பது மட்டுமே. செய்முறை முயற்சிகள் இதன் மூலம் விளக்க இயலாது என்பதனை அன்பர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். மேலும் ஆணின் உடல் சக்தியியக்கவியல் பார்வையே இதில் தரப்பட்டுள்ளது. இந்த விடயம் ஒரு ஆழமான சமுத்திரம் போன்றது விரிவாக விளக்கி எழுத முயன்றால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத வேண்டி இருக்கும், இந்த பதிவின் நோக்கம் இது பற்றிய அடிப்படையினை சுருங்க கூறுவதே!

காம எழுச்சி பொங்குதலும் அதனை கட்டுப்படுத்தி உயர்ந்த சக்தியாக்குதலும் சீரான மூச்சின் மூலமும், மனதின் எண்ண செய்முறை மூலமும் நடைபெறுகிறது. விந்தினை செயலூக்கம் உடைய சக்தியாக மாற்றும் செய்முறைக்கு சரியான உணவுப்பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பன அவசியமான ஒன்றாகும். ஒரு ஆண் தன்னுணர்வுடன் மூச்சினை அல்லது மனதினை அவதானிக்கும் ஆற்றல் பெற்றவன் உடலுறவின் போது தனது இச்சைபடி விந்தினை வெளியேற்றும் ஆற்றல் பெறுவான். இப்படிபெறும் ஆற்றல் மூலம் அந்த விந்தின் ஆற்றலை உயர்ந்த சக்தியுடைய ஆற்றலாக உருமாற்றம் செய்துகொள்ளலாம்.

காலச்சக்கர தந்திரத்தின் படி "மூச்சு, எண்ணம், விந்து ஆகிய மூன்றும் மனிதனிடமுள்ள தெய்வீக பொக்கிஷங்களாகும். இந்த மூன்றும் இணக்கமாய் ஒருவனில் செயற்படவேண்டும். உணர்வுடன் கட்டுப்படுத்தப்படவேண்டும். யோகியானவன் உண்மையில் இந்த மூன்று விடயங்களையும் ஒரே அதிர்வில் நிர்வகிக்ககூடிய ஆற்றலைப்பெறும் போதே உண்மையான யோகி ஆகிறான். இந்த மூன்றினதும் ஐக்கியம் ஏற்படும்போது அவன் உணர்வு கடந்த பேரின்ப நிலையினை அடைகிறான்" எனக்கூறப்பட்டுள்ளது.

கோரக்க சம்ஹிதையில் "ஒருவனுடைய மூச்சு ஒழுங்கற்று இருக்குமானால் அவனது விந்தும் கலங்கி ஒழுங்கற்று இருக்கும்,மூச்சு அமைதியாகும் போது விந்தும் அமைதியாக வலிமையாகும், மூச்சும் விந்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது" எனக்கூறப்பட்டுள்ளது.

உடலில் உள்ள பஞ்ச பிராணன்கள் எனப்படும் உயிர்த்தன்மைகளில் பிராணன் என்பதும் அபானன் என்பதும் முக்கியமானவை. பிராணனின் பிரதான செய்முறை உடலினுள் உயிர் சக்தியினை இழுப்பது. அபானனின் பிரதான செய்முறை சுரப்புகளை, உயிர் சக்திகளை, கழிவுகளை வெளித்தள்ளுவது. அபானன் உடலில் இருந்து கழிவுகளை மட்டும் வெளியேற்றுவதில்லை, உயிர் சக்தியினையும் வெளியேற்றுகிறது. அது உயிர்சக்தியினை வெளியேற்றும் செய்முறை விந்து வெளியேறல் மூலம் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்தி உயர்ந்த சக்தியாக்கிக்கொள்வது எப்படி என்பதினைப்பற்றியே சித்தர்களும், தாந்திரீகரகளும் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

விந்து வெளியாதலை கட்டுப்படுத்தி அபானனின் செய்முறையினை எதிர்திசையில் செலுத்துவதே தாந்திரிக உத்திகள் ஆகும். பழைய தந்திர நூற்களிலும், சித்தர்களுடைய நூற்களிலும் விந்து மேல் நோக்கி சென்று மூளையினை அடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை நம்பிய பலர் விந்தினை வலுக்கட்டாயமாக அடக்கி விந்து மேலே போகும் என்று பலவித உபத்திரவங்களை அடைந்திருக்கிறார்கள். விந்து மேலே செல்வதுற்கு பௌதீகமாக எந்த குழாய்களே, நரம்புகளோ, சுற்றோட்ட தொகுதிகளோ இல்லை. அப்படியானால் இது எப்படி சாத்தியம்? இதனை விளங்கப்படுத்துவதற்கு பதங்கமாதல் என்ற பதம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இரசாயனவியலில் பதங்கமாதல் என்றால் திண்ம நிலையில் உள்ள பொருள் குறித்த வெப்ப அழுத்த நிலையில் திண்மமாக உள்ள பொருள் ஆவியாகும் நிலையினை அடைதலை குறிக்கும். இதைப்போன்ற ஒரு செய்முறைதான் தந்திரீக யோக பயிற்சிகளில் விந்திற்கு நடைபெறுகிறது. அதாவது ஆரம்பத்தில் சூஷ்ம உடலில் உருவாகும் விந்து ஸ்தூல உடலில் சேர்கிறது, இதனை தாந்திரீக பயிற்சிகள் மூலம் மீண்டும் அவற்றை சூஷ்ம உடலின் வேறான உயர்ந்த பகுதிகளுக்கு மனதினதும் உணர்வினதும் உதவி மூலம் செலுத்தி பயனைப்பெறலாம். இதனை இன்னும் விரிவாக விளங்கிகொள்வோம்.

இயற்கையின் படைப்பில் மனித உடலில் விந்து இன்னொரு உயிரினை படைப்பதற்கும், புலன்களீனூடான உச்ச இன்பத்தினை அனுபவிக்கும் இடங்களில் (மூலாதாரம், சுவாதிஷ்டானத்தில்) மட்டுமே உருவாக்கம் பெறுகிறது, அந்த சக்தியினை சரியான முறையில் பயன்படுத்தி எமக்கு வேண்டிய மற்றைய சக்தியாக உயர் ஆதாரங்களுக்கு செலுத்து அவற்றின் பலன்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவே தாந்திரீக பயிற்சிகளில் பிரம்மச்சரியத்தின் குறிக்கோள். இதனை பௌதீகமாகவே சாதிக்க இயலாது, அதாவது விதைப்பையில் இருக்கு ஸ்தூல விந்தினை அப்படியே இரத்தம் ஒடுவது போல் நாடி நாளங்களுக்குளூடாக மூளைக்கு செலுத்தி மூளையினை வலுப்படுத்த இயலாது. இதனை பதங்கமாக்கி அதாவது சூஷ்ஷுமப்படுத்தி சூஷ்ம உடலில் செலுத்தி பின்னர் உடலின் குறித்த பகுதிக்குள் சேர்ப்பதன் மூலம் பல ஆற்றல்களை பெறலாம். இதற்காக அமைந்த உத்திகளே ஆதாரங்கள் எனப்படும் சக்கரங்கள்.

இனி இதனை உடலுறவில் சாதிப்பது எப்படி என்பதினைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம். மேலே உயிர்சக்தியினை ஆகர்ஷிப்பது பிராணன் என்றும் வெளித்தள்ளுவது அபானன் என்றும் பார்த்தோம். இதற்கும் உடலுக்குமான தொடர்பு மூச்சின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. உள்மூச்சு பிராணனால் கட்டுப்படுத்தப்படுகிறது, வெளிமூச்சு அபானனால் கட்டுப்படுத்தப்படுகிறது. நன்றாக அவதானியுங்கள் அபானன் விந்தின் வெளியேற்றத்துடனும் வெளிமூச்சுடனும் தொடர்புடையது என்பதினை சித்தர்கள் அறிந்துள்ளார்கள். வெளிமூச்சினை கட்டுப்படுத்த மனிதனால் முடியும், அதன் மூலம் அபானனைக் கட்டுப்படுத்தி விந்தினை கட்டுப்படுத்த முடியும். இதுதான் பிரணாயாமத்திற்கும் விந்தினை உயர் சக்தியாக்கும் செய்முறைக்குமான தொடர்பு. பிரணாயாமத்திற்கும் இதற்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. அதனை வேறொரு பதிவில் விளக்குவோம். தற்போது பிரணாயாமத்தில் என்ன நடைபெறுகிறது என்று விளங்கி இருக்கும் என நம்புகிறோம்.

தற்போது உடலுறவின் போது எப்படி மூச்சின் உதவி கொண்டு விந்தினை உயர்ந்த சக்தி ஆக்குவது என்பது பற்றி பார்ப்போம். உடலுறவின் போது மூச்சின் அசைவு சீரானதாக இருக்க வேண்டும். அத்துடன் மனதில் சக்தி உயர்ந்த நிலைக்கு செல்வதாக பாவிக்க வேண்டும். இதன் மூலம் விந்தில் உள்ள உயர்ந்த சக்தி பதங்கமாகி மனம் செலுத்தும் இடத்திற்கு செல்வதுடன் ஸ்தூல விந்து வெளியேறினாலும் சக்தி சூஷ்ம உடலினுள் உறிஞ்சப்பட்டிருக்கும், இதனால் சக்தி இழப்பு ஏற்படாது. இந்த சக்தி சாதகனில் வேறொரு உயர்ந்த சக்தியாக பாவிக்கப்படலாம். இதன் மூலமே காமமும் யோகமாகும். இதை பயிற்சிக்கும் குடும்பஸ்தனும் பிரம்மச்சாரியே ஆவான்.

இதன் செயல்முறையினை விரிவாக நாம் இங்கு விளக்குவதற்கு இயலாது விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

காம ரகசியம் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக