22 ஆக., 2025

மாயை என்றால் என்ன? மாயையின் தோற்றம் மற்றும் அதன் முக்கிய குணங்கல் யாது? மாயையில் இருந்து விடுபடுவது எப்படி? என்பதைப் பற்றிய விளக்கம்:

மாயை என்பதன் விளக்கம்:


மனம் உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி அறுகுணங்களாகச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும், பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும் போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம் ஏற்படுகிறது. இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின் மயக்க நிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம். அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி.

மாயை என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் (சொல்) ஒன்று. இது

  1. சங்கர வேதாந்தம்
  2. சைவ சித்தாந்தம் என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்

சங்கர வேதாந்தம்

சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். சங்கரர் மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.

சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்:

பிரம்மத்தின் ஒரு சிறு அம்சமே(பகுதி) மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் முக்குணங்களுடன் விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட)) ஐந்து பூதங்களைத் தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில் அழிவுக்கு உட்பட்டதுதான். ஊழிக்காலத்தில் இவையெல்லாம் பிரம்மத்திடம் ஒன்றித்துவிடும். பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.

மாயையின் முக்கிய குணங்கள்

அத்வைதிகளின் கருத்துப்படிபிரம்மத்தை மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.


மா = ஒடுங்குதல்
யா = விரிதல்

மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும். (தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பல பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.)

பிரபஞ்சத்தின் மறைமுகமான, மாறக்கூடிய தன்மையே மாயை. இது நிலையானதாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். மாயை அறியாமையை உருவாக்குகிறது. நான் என்ற ஈகோ போகும் வரை, இறை சக்தியுடன் ஒன்றுபட விடாமல் தடுப்பது மாயையின் அறியாமைதான்.

𝟬𝟭) சத்வ குணம்: (சத்துவ குணம்)

இக்குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்: நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.

𝟬𝟮) ரஜோ குணம்: (இராட்சத குணம்)

இக்குண இயல்புகள்: ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.

𝟬𝟯) தமோ குணம் (தாமச குணம்)

தமோ குண இயல்புகள்: காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.

இதில் முதல் குணம் விழிப்பு நிலை பண்புகளையும் (Awareness), இரண்டாவது அறிவார்ந்த பண்புகளையும் (Intelligent), மூன்றாவது அறியாமை பண்புகளையும் (Ignorance) கொண்டுள்ளது.

தாயுமானவரின் பாடலில்:

சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க

சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா - திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்.

என்னை வெளிப்படுத்திக்கொள்ளாத பிரம்மமாக இருக்கையில், நானே மாயையாக இருக்கிறேன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணன் தெளிவாகவே குறிப்பிடுகிறான்.



மாயையில் இருந்து விடுபடுவது எப்படி?

நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாயை இரு வகை படும் அவை

அசுத்த மாயை

சுத்த மாயை

அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை பற்றியது. மனம் வழி, புலன் வழி நடக்க வைப்பது.

சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி இருக்கும் ஞானிகளை பற்றியது. அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை. சிவம் மட்டுமே மாயை இல்லாதது.

உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால் மனம் வழியும் புலன் வழியும் நடந்து வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள். வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும். ஆக பிறப்பிற்கு காரணம் நல்வினை மற்றும் தீவினை வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை, அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம் சுத்த மாயை கொண்ட ஆன்மா  தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.

அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால் சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா மீண்டும் பிறவாத நிலையை அதாவது சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து விடும். ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க பழக்கப்படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.

அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு ஒரு சுலபமான பயிற்சி உள்ளது. அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு நமது அறிவால் மனதை பின் தொடர்வது. எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல் நாம் பின் தொடர்கிறோம் என்றால் அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார். அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று அவருக்கு தெரிந்து விட்டது என்றால் அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும். அதை போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து அறிவின் வழி நடக்க தொடங்கும்.

அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால் புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும் அறிவின் வழி நடக்க தொடங்கும் போது நாம் மாயையின் வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை அறிவு நமக்கு அளித்து கொண்டிருக்கும். இதன் காரணமாக நமது செயல்கள் யாவும் தானாகவே தூய்மை பெறும்.

அடுத்து ஒரு சுலபமான பயிற்சி நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து பின்பு அந்த செயலை செய்வதன் மூலம் தவறான செயல்களை செய்வதிலிருந்து நாம் மிக சுலபமாக விடுபடலாம். அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல் விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள் நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும். சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும். சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.

இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் நாம் நமது மனதை அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால் நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.


செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.

15 ஆக., 2025

ஆன்மீகம் என்பதன் விளக்கம்? ஆன்மீகப் பாதையின் முதல் அடி எது? என்னென்ன வழிகளில் கருமையத்தைத் தூய்மை செய்யலாம், ஆன்மீகப் பயணத்தி நிறைவு எது விளக்கம்:

கருமையத்தைத் தூய்மை



இரண்டொழுக்கப் பண்பாட்டிலேயே எல்லாம் அடங்கி உள்ளன. இதை எப்படி எல்லாம் கடைபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம். ‘யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் என்ற முதல் ஒழுக்கத்தை எடுத்துக் கொண்டு முதலில் உங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் உடலுக்கு, மனதிற்கு நீங்கள் துன்பம் தராமலிருக்க என்னென்ன பண்ணவேண்டும்?

தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி மற்றும் தவம் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள வெப்பம், ரத்தம், காற்று, ஜீவகாந்தம் மற்றும் உயிர் ஓட்டங்கள் சீரமைக்கப்பட்டு உடல் துன்பங்கள் நீங்குகின்றன. நோய் வராமலும் தடுக்கின்றோம். தவப் பயிற்சிகள் அடிக்கடி செய்வதால் மனஒர்மை ஏற்படுகின்றது. இன்னும் நீங்கள் இறைநிலை தவம் அடிக்கடி செய்து இறைநிலையோடு ஒன்றி நிற்க பழக வேண்டும். யாரிடமும் சண்டை போடாமல், மனதில் பகை, வஞ்சம் வைத்துக் கொள்ளாமல் மன்னித்து கருணை உள்ளத்தோடும் இன்முகத்தோடும் இருக்கவேண்டும். 

மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் விளக்கம்:

சாதி, மத, நாடு, இன, மொழி வேறுபாடின்றி எல்லோருமே நம் சகோதர, சகோதரிகள் – இறைநிலையின் வடிவங்கள், அவர்களுக்குள்ளும் அறிவே தெய்வமாக விளங்குகின்றது என்ற உணர்வில் எல்லோரையுமே தெய்வங்களாகப் பார்க்கவேண்டும், மதிக்க வேண்டும்.

மகரிஷி அவர்களின் கனவுகளை நனவாக்கும் அருட்தொண்டில் ஈடுபடப்போகும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. நீங்கள் எப்போதும் ஒழுக்கம், கடமை, ஈகை இவை மூன்றுமினைந்த அறநெறிப் படிகளை பின்பற்றி வாழ வேண்டும். நம்மை சார்ந்த பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர் மற்றும் நம் குழந்தைகளுக்கு நம் பொறுப்புணர்ந்து அக்கறையோடு காத்து உதவ வேண்டும். தாய், தந்தை, குரு, ஆட்சி தலைவர் மற்றும் தெய்வம் (இறைநிலை) இவர்களை மதித்து வணங்கி வாழ வேண்டும்.

இயற்கை வளத்தை காக்க வேண்டும். ஆம். இயற்கையை அழிக்காமல் அதனோடு இயைந்த வாழ்க்கை வாழவேண்டும். அது மட்டுமல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட பொருட்களை வீணாக்காமலும், செதப்படுத்தாமலும் காத்து வாழவேண்டும். இரண்டோழுக்கப் பண்பாட்டில் இவ்வளவு இருக்கின்றது. இப்படி நீங்கள் வாழ பழகிக்கொண்டால் நீங்கள் ஆன்மீக வாழ்க்கை வாழ்கின்றீர்கள் என அர்த்தம்.

ஆன்மீகம் என்பதன் விளக்கம் என்ன:

ஆன்மீகத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளத்தான் நாம் பலபல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். இன்றைக்கு மக்கள் ஆன்மீகம் என்ற சொல்லை மட்டும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ஆன்மீகத்தைப் பற்றி புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்பது சந்தேகமே!    பொதுவாக   ஆன்மீகம் என்றால் வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது, புனித பயணங்கள் மேற்கொள்வது, புனித நூல்களைப் படிப்பது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆன்மீகம் என்றால் என்ன

தவம் மாத்திரம் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் ஆகிவிட மாட்டார்கள். நம் புராணங்களில் வரும் இராவணன், சூரபத்மன் மற்றும் ஹிரண்யன் போன்றவர்கள் கடும் தவம் செய்தார்கள், இறைவனிடம் வரங்கள் வாங்கினார்கள். ஆனால் அவர்களை ஆன்மீகவாதிகள் என்று சொல்லமுடியுமா? உண்மையான ஆன்மீகவாதிகள் ஆன்மாவைப் பற்றி தெளிவாக அறிந்து கருமையத்தூய்மைக்கான நெறிமுறைகளுடன் வாழ்வதாகும். ஆன்மீகத்தின் அடிப்படை எப்போதும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதுதான், ஆன்மீகவாதிகள் அன்புமயமானவர்கள். நமது மகரிஷி அவர்கள்

ஆன்மாவைப் பற்றி, அதாவது கருமையத்தைப் பற்றியும் அதனை தூய்மை செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்து அதன்படி நடப்பதுதான் ஆன்மீக வாழ்வு.

அனைத்துயிரும் ஒன்றென்று
    அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமைகளெல்லாம்
    அன்பின் செயலாகும்

என்று நமக்கு பிரம்மஞானம் தந்து இறையுணர்வையூட்டி ‘அன்பே இறைவன் என்ற உயர்நிலைக்கு நம்மை அழைத்து செல்கிறார்கள். நம் மனவளக்கலைப் பயிற்சிகள் அனைத்தும் ஆன்மீகப் பயிற்சிகளாகும்.

ஆன்மீகம் என்ற சொல்லுக்கு சரியான பொருள் என்ன?

ஆன்மாவைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம். ஏற்கனவே நாம் இறைவனை வழிபடும்போது உண்மையில் அவரவர் எண்ணங்களைத்தான் வணங்குகின்றோம் என்றும் எண்ணங்கள் மனதிலிருந்து எழுகின்றன. மனமோ உயிரின் படர்கை நிலை. உயிரின் மூலமோ கருமையம். இந்த கருமையத் தூய்மைக்குத்தான் இரண்டொழுக்கப் பண்பாடு கடைபிடிக்கின்றோம். ஆன்மாவை உணர்வது என்றால் ‘தன்னை உணர்வது’ என கொள்ளலாம்.

நான் உண்மையிலேயே ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேனா என்பதை எப்படி அறிவது?

மிகவும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். யாரெல்லாம் தங்கள் துன்பங்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள் இவற்றிற்கு மற்றவர்களையும், சூழ்நிலைகளையும் காரணமாகச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் இன்னும் ஆன்மீகப்பக்கம் அடியெடுத்து வைக்கவில்லை என்று அர்த்தம்.
 

ஆன்மீகப் பாதையில் எடுத்து வைக்கப்போகும் முதல் அடி பற்றி விளக்கம்:

நமது பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் நாம்தான் காரணம் என்று எப்போது நாம் உணர்கின்றோமோ அப்போது நாம் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்து விட்டோம் என்று நிச்சயமாக சொல்லலாம்.  பொதுவாக மக்கள் தங்கள் கஷ்டங்களுக்கு மற்றவர்களை குறை சொல்லி அவர்கள் திருந்த அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள். தன்னிடத்தில் உள்ள குறைகளை உணரவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் சிறிதும் முயல மாட்டார்கள்.  மற்றவர்கள் மீதே பழி சொல்லி, மற்றவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் எப்படி?

நீங்கள்தான் ஆன்மீகப் பாதையை காட்டிவிட்டீர்களே, எங்கள் குறைகளை உணரத் தொடங்கிவிட்டோம்.

உணர்ந்தால் மட்டும் போதாது. மனம் பண்பட பயிற்சிகள் வேண்டும். உதாரணமாக ஒருவர் உங்களை திட்டிவிட்டார் என வைத்துக்கொள்வோம். உங்கள் மனம் உடனே துன்பப்படுகின்றது. உணர்ச்சி வசப்பட்ட மனோநிலையில் நீங்கள் இருந்தால் உங்களை திட்டியவரிடம் சண்டை போட்டிருப்பீர்கள் அல்லது மேலும் உணர்ச்சி வசப்பட்டு வேண்டாத செயல்களை செய்திருப்பீர்கள். நீங்கள் அமைதியாக சிந்தித்தால் திட்டியவரின் சொல்லா நம்மை புண்படுத்தியது….. இல்லையில்லை என் மனம்தான் அந்த சொல்லை துன்பமாக மாற்றியது என்பதை உணரலாம். இப்படி அமைதியாக, விழிப்புணர்வுடன் ஒவ்வொன்றையும் சிந்தித்து, சிந்தித்து செயல் படுபவன் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கின்றான் என்பது அர்த்தம். பக்குவப்படும் மனம் பண்பட்டு, பண்பட்டு ஆன்மீக சாதனைகளுக்குத் தயாராகின்றது.

எப்போதுதான் ஆன்மீகப் பயணம் நிறைவு பெறும் விளக்கம்:

கருமையத்தூய்மைக்கான வழிமுறைகள் பார்த்தோமல்லவா, அவற்றை விழிப்புணர்வோடு கடைப்பிடித்து வரும்போது மனதில் எப்போது இன்பமும், துன்பமும் அற்ற ஒரு மனோநிலை வருகின்றதோ இன்னும் சொல்லப்போனால் எப்போது மனம் சலிப்பில்லா ஆனந்தத்தை அனுபவிக்கின்றதோ அப்போது ஆன்மீகப் பயணம் நிறைவு பெறுவதாகக் கொள்ளலாம்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்

பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் மற்றவர்களும் அல்ல, நாமும் அல்ல என்ற மனோநிலை அடையும்போது ஆன்மீகத்தில் முழுமை பெறுகின்றோம். இந்த நிலை அடையும்போது  ஆன்மீகப் பயிற்சிகள் நிறைவு பெற்றிருக்கும்.  மனம் அன்பும், கருணையும் நிறைந்து பார்க்கும் தோற்றங்களெல்லாம் இறைதோற்றமாகக் கொள்ளும். புற சூழ்நிலைகள் எதுவும் மனதைப் பாதிக்காது. மனம் தன்னையும் நொந்து கொள்ளாது. உடலாலும், மனதாலும் யாருக்கும் உதவ, மற்றவர் துன்பம் தீர்க்க எப்போதும் தயாராக இருப்பார்கள். செய்துகொண்டும் இருப்பார்கள்.

ஆன்மிகம் என்பது இவ்வளவுதானா?

மேலும் இருக்கின்றது நம் மகரிஷி அவர்கள் விளக்கியுள்ள நான் யார் தத்துவத்தையும் பிரம்ம ஞானத்தையும் பழக, பழக எல்லா உயிர்களும் ஒன்று, எல்லா தோற்றங்களும் ஒன்று, எல்லாமே இறைநிலையின் வெளிப்பாடு என்ற உணர்நிலையில் வாழலாம். நம்மை அறியலாம். பிறரை அறியலாம். இயற்கையை அறியலாம்.இறைநிலையின் பிரதிபிம்பம் நாம்தான் என்ற உணர்நிலையில் அன்பும், கருணையுடன் தொண்டாற்றி இன்பம் காண்போம்.


செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.

5 ஆக., 2025

கருமையம் என்றால் என்ன? ஆன்மா என்பதும் கருமையம் என்பதும் ஒன்றா அதன் விளக்கம் யாது? இதைப்பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று மற்றும் விளக்கம்:

 கருமையம் என்பது விளக்கம்:


அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள் இப்போது கருமையம் என்ற ஒரு புதிய விஷயத்தை உங்களுக்குச் சொல்லப் போகின்றேன். அதற்கு அடித்தளமாக செல்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து தெரிந்து கொள்வது சிறப்பு. இதோ இங்கிருக்கின்றதே இந்த மாமரத்தின் ஆதாரம் என்ன? அதாவது மரம் எப்படி தோன்றியது?

ஒரு மாங்கொட்டையிலிருந்து, செடியாகி, மரமாகியுள்ளது

இந்த மாங்கொட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்டால் இன்னொரு மாமரத்தின் வித்து என்பீர்கள். இதுபோலே உங்கள் உருவம், குணங்களுக்கு எது ஆதாரம்?

எனது அம்மா, அப்பா

மிக சரி நீங்கள் உன் அம்மா வயிற்றில் கருவாக உருவானபோதே உன் அம்மா வழி மற்றும் உன் அப்பா வழி பரம்பரை குணங்கள் எல்லாம் கருவில் பதிந்துவிட்டது அல்லவா இன்னும் சொல்லப்போனால் ஆதி இறைநிலை முதற்கொண்டு இன்றைய நீ வரை பரம்பரை சரித்திரம் அத்தனையும் உன்னில் அடங்கியிருக்கின்றது.

அப்படியானால் இறைவனின் குணங்களும் என்னிடம் இருக்கும்தானே?

இங்குள்ள எல்லோருமே இறைநிலையின் சொரூபங்களே! இறைநிலை தன்மாற்றம் அடைந்து, இறைத்துகளாகி, விண் முதல் பஞ்ச பூதங்களாகி, ஓரறிவு தாவரம் முதல் ஐந்தறிவு விலங்குகளாகி பின் ஆறாவது அறிவு பெற்ற மனிதன் வரை வந்த பயணத்தில் இறைநிலை குணங்கள் களங்கப்பட்டு போய் விட்டன. இந்த களங்கங்களைப் போக்கினால் நாம் இறைவனாகி நிற்கலாம்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என டார்வின் கொள்கைகள் பற்றி படித்திருப்பீர்கள். ஒரு சிம்மத்திற்கும், குரங்கிற்கும் பிறந்தவன்தான் மனிதன் என்பார்கள் மகரிஷி அவர்கள். ஐந்தறிவு வரை வந்த விலங்கினங்களுக்கு தனக்குத் தேவையான உணவைத் தயாரித்துக் கொள்ளத்தெரியாது. இயற்கையில் கிடைப்பதை அப்படியே சாப்பிடும். குரங்கு சைவ விலங்காக இருந்தாலும், தனக்கு தேவையானதை தன் இனக் குரங்குகளிடமிருந்தே பிடுங்கி சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். சிங்கமோ தன் உணவிற்காக இன்னொரு விலங்கினை அடித்துக் கொன்று சாப்பிடும். இந்த இரண்டு விலங்குகளின் கலப்பாகத் தோன்றிய மனிதன் பிறவியிலேயே பிறர் வளம் பறித்தல் மற்றும் பிறர் வாழும் சுதந்திரத்தை அழித்தல் என்ற களங்கங்களோடுதான் தோன்றியிருக்கின்றான். பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு தன் எதிர்காலம் பற்றி, தேவைகள் பற்றி சிந்தித்து செயல்பட தெரிந்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் விலங்குகளைவிட மோசமாக வாழ்ந்து களங்கங்களைப் பெருக்கிக்கொண்டே போகின்றார்கள். இன்றைய சமுதாயத்தில் நாம் காணும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் மனிதர்களிடம் காணப்படும் களங்கங்களே. வித்துத் தொடராக வரும் இவற்றைப் போக்கிக்கொண்டால் மனிதன் இன்பமாக வாழ முடியும். இந்த கருமையக் களங்கங்களைப் போக்க மகரிஷி அவர்கள் எளிமையானப் பயிற்சிகள் தந்துள்ளார்கள்.

கருமையம் என்றீர்களே, அதுபற்றி மேலும் சொல்லுங்கள்

புவிஈர்ப்பு மையம் பற்றி படித்திருப்பீர்கள். ஒரு பொருளின் எடை அனைத்தும் அப்பொருளின் வடிவத்திற்கு ஏற்ப ஒரு புள்ளியில் இருப்பதாக கணிக்கின்றோம். நம் பரு உடலின் மையம் எங்குள்ளது?”

நம் அடிவயிற்றுப் பகுதி

சரி உடல் முழுதும் ரத்தம் ஓடினாலும் ரத்த ஓட்டத்தின் மையம் இதயம்தானே இதுபோல உடல் முழுதும் காந்த ஒட்டம் ஓடினாலும், அதற்கு ஒரு மையம் உண்டு. அதுபோல உயிர் உடல் முழுதும் ஓடினாலும் அதன் மையம் உயிரின் மூலமான ஜீவவித்துக் குழம்பு இருக்குமிடமான வித்தகம் இருக்கும் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கின்றது. பருவுடலின் மையம், காந்த ஓட்டத்தின் மையம் மற்றும் உயிர் மையம் எல்லாமே ஓரிடத்தில் அடிவயிற்றில் முதுகுத் தண்டு நுனியில் மூலாதாரம் என்று சொல்வார்களே அங்கே இருக்கின்றது. இந்த இடத்தை மகரிஷி அவர்கள் கருமையம்’ (Genetic Center) என சிறப்பாக பெயரிட்டிருக்கின்றார்கள். நம் ஒவ்வொருவரின் கருமையத்தில் ஆதி முதல் இன்றுவரை மனித சரித்திரத்தின் களங்கங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன. இந்த கருமையத்தைத் தூய்மை செய்ய முடியும். அதைத்தான் மகரிஷி அவர்கள் எளியமுறை மனவளக்கலைப் பயிற்சிகளாகத் தந்திருக்கின்றார்கள்.


மருத்துவத்தின் மூலமாக கருமையத் தூய்மை செய்யலாமா விளக்கம்:

மகரிஷி சொல்லும் கருமையம் மருத்துவத் துறைக்கே புதுமையானது. இப்போதுதான் இதுபற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர். நாம் கருமையம் பற்றி மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவார்கள் மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்தும் அடங்கிய “சூப்பர் கம்ப்யூட்டர் சிப்என்று கொள்ளலாம். கருமையம் தான் மனிதனின் அறிவுக்கும், மனதுக்கும் இருப்பிடமாகவும், இயக்கக்களமாகவும் இருக்கின்றது.


ஆன்மா என்பதன் விளக்கம் என்ன:

கருமையம் பற்றி சொன்னீர்களே, இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு?

மகரிஷி அவர்கள் ஒரு கவிதையில்

காந்தநிலை அறியாமல் கடவுள்நிலை அறிவதோ

    கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
    மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!
காந்தஆற்றல் உட்பொருள், கருமையத்துட் பொருள்,
    கடவுளெனும் இறைவெளியே! இயக்க ஆற்ற லும்இதே!
காந்தமெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்,
    கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளது வெளியோடு
.

என்கிறார். அதனால்தான் நான் உங்களுக்கு காந்தம் பற்றியும், கருமையம் பற்றியும் முடிந்தவரை எளிமையாக விளக்கி வருகின்றேன்.

காந்த அலைகளின் திணிவுதான் நம் உடலில் கருமையமாக இருக்கின்றது. இறைநிலை பற்றி ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன் – அது காந்த ஆற்றலாக இருப்பதினால் இறைத்தன்மைகள் அத்தனையும் கருமையத்திற்கு உண்டு. இறைநிலை போலவே இதற்கு தன்னிருக்க ஆற்றலும் உண்டு, விளக்கும் ஆற்றலும் உண்டு. மகரிஷி இதனை எளிமையான உதாரணத்தால் விளக்குவார்கள் – ஒரு பசுவைக் கண்களால் பார்க்கிறோம். பசு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதன் பிரதிபலிப்பு நம் கண்களில் சிறியதாக ஒரு கொசு அளவிலே தெரிகின்றது. ஜீவகாந்தத்தின் மூலம் அந்த கொசு அளவுள்ள பசு உருவம் மேலும் சுருங்கி ஒரு புள்ளி அளவில் மூளையில் பதிவாகின்றது. மேலும் ஜீவகாந்தம் திணிவு பெற்ற இடமான கருமையத்திலும் இந்த பசு காட்சியும் பதிவாகின்றது. சில நாட்கள் கழித்து நாம் என்ன பார்த்தோம் என்று சிந்திக்கும்போது கருமையத்தில் பதிவான பசு உருவம் ஜீவகாந்தமான மன அலைகள் மூலம் மூளை செல்களில் மோதி பசுவின் உருவத்தை எண்ணமாக மனத்தால் பார்க்கின்றோம். நீங்கள் எத்தனை தடவை பசுவை நினைத்தாலும் கருமையம் பசுவின் உருவத்தை விரித்துக் காட்டும்.

நாங்கள் இதுவரை இது மூளையின் செயல் என்று நினைத்து கொண்டிருந்தோம். அப்ப மூளையின் வேலை என்ன?

மூளை பற்றி உங்கள் பாடத்தில் நிறைய சொல்லியிருக்கின்றார்கள். சொல்லாத கருமையம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். எனினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். இறந்த உடலில் மூளை இருக்கின்றது. அந்த மூளையில் பதிவான எல்லாவற்றையும் விரித்துப் பார்க்க முடியுமா? அது எப்படி முடியும்? உயிர்தான் இல்லையே? ரொம்ப சரி. உயிர்தான் ஜீவகாந்தமாக, மனமாக செயல்படுகின்றது என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டீர்கள். உயிர் பிரிந்துவிட்டதால் காந்தத் திணிவான கருமையமும் உடலை விட்டு பிரிந்து விடுகின்றது. அழிவு என்பது பரு உடலுக்குத்தான். கருமையம் அழிவதில்லை.


அப்போது அந்த அழியாத கருமையம் என்ன ஆகும்? விளக்கம்:

இதுபற்றி ‘பிறப்புக்கு முன் மற்றும் இறப்புக்குப் பின் உயிரின் நிலைபற்றி பேசும்போது தெரிந்து கொள்ளலாம். கருமையம் என்பது எல்லாவற்றையும் சுருக்கிப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது. தேவைப்படும்போது பதிவுகளை விரித்து எண்ணங்களாக மலர்த்திக் காட்டுகின்றது. இன்னும் சொல்லப் போனால் சிற்றுயிரிலிருந்து ஆறாம் அறிவு பெற்ற மனிதன் வரையில் மாற்றமடைந்த ஜீவ இனச் சரித்திரக் குறிப்புப் பெட்டகமே கருமையமாகும்.

புரிகிற மாதிரி தெரியுது. ஓர் உதாரணத்தோடு விளக்கினால் நன்றாக இருக்கும்.

இன்று நாம் எல்லோருமே செல்போன் பயன்படுத்துகின்றோம். அதில் உள்ள சிப் (சிம் மற்றும் மெமரி கார்ட்) போன்று நம் உடலில் கருமையம்.  பேட்டரியில் சார்ஜ் உள்ளவரை போன் வேலை செய்யும். நமக்கு போனில் யாருடன் பேசவேண்டும் என்பதை அதில் உள்ள பதிவுகளைப் பார்த்து தேர்ந்தெடுக்கின்றோம் அல்லவா அந்த வேலையை நம்மிடம் மனம் செய்கின்றது. மெமரி கார்ட்தான் நம் மூளை. பேட்டரிதான் உயிர்.

 

அப்படியானால் இந்த கருமையத்திற்கு உள்ள வேறு பெயர்:

நம்மிடம் திணிவு பெற்று விளங்கும் கருமையமான காந்தம் ‘ஆன்மா’ எனவும் அழைக்கப் படுகின்றது. இந்த ஆன்மா என்ற காந்தத்திற்கு என்றுமே அழிவு என்பதில்லை.


காந்த ஆற்றல் உட்பொருள்
கருமையத்துட்பொருள்
கடவுள் எனும் இறைவெளியே
மகரிஷி

 

கருமையத்தூய்மை விளக்கம்:

ஆன்மா என்றால் நாங்கள் வேறு ஏதோ ஒன்று என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆன்மா என்ற சொல்லுக்குத்தான் ஒவ்வொரு மதத்திலும் எத்தனை, எத்தனை விளக்கங்கள்! இவை நமக்கு மிகுந்த குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றது. மகரிஷி அவர்கள்தான் கருமையம் என்ற சொல்லின் மூலம் விஞ்ஞான ரீதியாக ஆன்மாவை எளிதாக விளக்குகின்றார்கள்.

இன்றைக்கு நீங்கள் பாடங்களில் ஜீன் என மரபு பதிவுகள் பற்றி படித்திருப்பீர்கள் இதுமாதிரிதான் நம் கடந்தகால வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள், நம் முன்னோர்கள் பதிவுகள் என எல்லாம் காந்தப்பதிவுகளாக   ஆன்மாவில் அல்லது கருமையத்தில் சேர்ந்துவிடுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஆன்மா என்பது காந்த அலைப்பதிவுகள் கொண்ட கருமையம் எனலாம்.

மகரிஷி சொல்கிறார்கள்:

ஒருவர் பிறந்து மூன்று வயது முதல் இன்றுவரை எண்ணிய எண்ணங்கள், சொல்லிய சொற்கள், செய்த செயல்கள் அத்தனையும் கருமையத்தில் மேலடுக்கு பதிவுகளாக உள்ளன. இவைகளை வினைப்பதிவுகள் எனவும் சொல்லலாம். மேலும் பின்னோக்கிச் சென்றால், அவரது பெற்றோர்கள், அவர்களது முன்னோர்கள், விலங்கினம், நான்கறிவு ஜீவன்கள், மூன்றறிவு உயிரினங்கள், இரண்டறிவு புழு வரை வந்த, செய்த செயல்கள் எல்லாமே கருத்தொடரால் கருவமைப்புப் பதிவுகளாக மனிதனிடம் கருமையத்தில் பதிந்துள்ளன. சிற்றுயிரிலிருந்து சிறப்பு நிலையிலான மனிதன் வரையில் தன்மாற்றம் அடைந்த ஜீவ இனச் சரித்திரக் குறிப்பு பெட்டகம்தான் கருமையம் ஆகும். கருமையம் என்பது பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அடங்கிய தெய்வீக நீதி மன்றம் எனவும் சொல்லலாம்.

நாம் எந்த செயலையும் நம் உடலில் உள்ள பத்து இந்திரியங்கள் மூலமாகத்தான் செய்கிறோம். நாம் செய்யும் செயலினால் ஏற்படும் அதிர்வுகளும். இன்ப, துன்ப உணர்வுகளும் கருமையத்தின் தன்மையாக மாறிவிடும்.

பத்து இந்திரியங்கள் என்று சொன்னீர்களே, அவற்றைச் சொல்லுங்கள்

நாம் உணர்வாகப் பெறும் தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்க்கும் உணர்வு மற்றும் கேட்கும் உணர்வுகளுக்கான ஐம்புலன் கருவிகள் தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவை ஐந்தும், தொழில் கருவிகளான கைகள், கால்கள், வாய், குதம் மற்றும் பால்குறி மொத்தம் பத்தும் பத்து இந்திரியங்களாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு கருவியும் கருமையத்தில் பதிவுகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. கருமையத்தின் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கின்றது.

அப்ப மூளையில் உள்ள பதிவுகள் என்ன வேலை செய்கின்றன?

நம் செல்போனில் உள்ள மெமரிகார்டுதான் மூளை எனச் சொன்னேன் அல்லவா கருமையத்திற்கும், மூளைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. இன்னும் சொல்லப்போனால் மூளையின் மூலமாகத்தான் கருமையத்தில் அனைத்தும் பதிவாகின்றன. உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் மூளை செயல்படாது. மூளையை இயக்கும் ஜீவகாந்தம்தான் (மனம்தான்) இப்போது இல்லையே!


கருமையப் பதிவுகள் என்ன செய்கின்றன? விளக்கம்:

வீட்டில் அம்மா குழம்பு செய்யும்போது அதில் பல பொருட்களைச் சேர்க்கின்றார்கள். சேர்க்கப்படும் போருட்களுக்கேற்ப அது புளிகுழம்பாகவோ, காரக் குழம்பாகவோ, சாம்பாராகவோ அல்லது மோர்க்குழம்பாகவோ மாறுகிறது அல்லவா! அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் கருமையமும் அவன் செய்த, செய்யும் செயல்களுக்கு ஏற்ப பதிவுகள் பெற்று அதற்கான விளைவுகளைத் தருகின்றன. இதைதான் செயலிலே விளைவை இணைத்த இறைவனின் திருவிளையாடல் என்கிறார்கள். இந்த உண்மைகளை மகரிஷி அவர்கள் பயிற்சிகளாகக் கொடுத்து, உள்ளதை உணர வைத்து, நல்லதை செய்ய வைத்து, அல்லதை விடுவதற்கு நம்மைத் தயார் செய்கின்றார்கள். இவற்றை நீங்கள் தெளிவாக உணர்ந்தால் யாருக்கும், எந்த ஜீவனுக்கும் எவ்விதமான துன்பமும் அளிக்கக்கூடாது என்கின்ற தெய்வீக அற வுணர்வு உண்டாகும். இதுவே உங்களின் அறிவு அடையப்போகும் முழுமைப்பேற்றுக்கு  முதல் படியாகும்.

எனது கருமையப் பதிவுகள் எப்படிப்பட்டது? நான் எப்படி நல்ல பதிவுகளை மாத்திரம் வைத்துக்கொள்வது? உலகில் உள்ள அனைவரும் இந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டால் இன்பமய உலகத்தை உருவாக்கிவிடலாம்! இதற்குத்தான் கருமையத்தூய்மை என்ற தலைப்பில் மகரிஷி விரிவாக விளக்கியிருக்கின்றார்கள். அவற்றை அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

                                                செந்தில்குமார்
                                                செல்: 9655472931
                                               புதுக்கோட்டை மாவட்டம்.
                                                நச்சாந்துபட்டி,