25 ஜூன், 2025

தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்பவை எவை? சைவ சித்தாந்தத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அமைப்பு மேலும் இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவை சிவதத்துவம், வித்தியாதத்துவம் மற்றும் ஆன்ம தத்துவம் விளக்கம்:

 தத்துவநிலை-96 விளக்கம்:



தத்துவா தீதத் தனிப்பொருள் வெளியெனும்
    அத்திரு வம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
    அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித் தனித் திரையால்
    அத்திற மறைக்கும்
அருட்பெருஞ்ஜோதி
                                            அகவல்

தத்துவங்கள் அனைத்தையும் கடந்து, தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறச் சிவநிலையில் ’தான்’ என்ற நிலையும் கரைந்து அம்பலத்தே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி என்றும் தத்துவ சேட்டைகளைக் கடந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண இயலும் என்பதையும், அந்த தத்துவச் சேட்டைகள் ஒவ்வொரு திரையாக இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணரவிடாமல் தடுக்கிறது என்றும் இவையனைத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னுடைய அருள் வல்லபத்தால் செய்கிறார் என்றும் பொருள் விளங்கும் அகவல் வரிகள்.


ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுவென்பர்
ஆகின்ற வாறா றருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே.
                                            திருமந்திரம்


முப்பது முப்பது முப்பதறுவருஞ் செப்ப
மதிளுடை கோவிலுள் வாழ்பவர் செப்பு
மதிளுடைக் கோவிற் சிதைந்தபின்
ஒப்ப வனைவரு மோட்டெடுத்தாரே
                                    திருமந்திரம்

இந்த தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்ன?


தத்துவங்கள் 36-ல்
ஆன்ம தத்துவம் - 24
வித்தியா தத்துவம் - 7
சிவதத்துவம் - 5.

இவற்றின் மற்ற உட்பிரிவு 60 ஆக மொத்தம் 96 இவற்றை விரிவாக காண்போம்.

சிவ தத்துவம் (சுத்த மாயை): நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை ஆக 5

வித்யா தத்துவம் (அசுத்த மாயை): மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆக 7

ஆன்மதத்துவம்: பஞ்ச பூதம் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பிராணாதி வாயுக்கள் 5, அந்த கரணங்கள் 4 ஆக மொத்தம்: 24

ஆன்மதத்துவம் விளக்கம்:

1. பஞ்ச பூதம் – 5: மண், நீர், தீ, காற்று, ஆகாயம்.

2. தன்மாத்திரை -5: சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம்

3. கன்மேந்திரியம்- 5: வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய்

4. ஞானேந்திரியம் -5: செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்

5. அந்தக்கரணம் -4: மனம், சித்தம், புத்தி, அகங்காரம்

6. வித்தியா தத்துவம் -7: புருடன், அராகம், வித்தை, கலை, நியதி, காலம், மாயை

இவற்றில் காலம்: சென்றது, நடப்பது, வருவது

நியதி: அவரவர் வினையை அவரவர்களை அநுபவிப்பது

கலை: ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்

அராகம்: ஆசையை எழுப்பும்

புருடன்: விஷயங்களில் மயங்கும்

7. சிவதத்துவம் -5: சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம்

புறக்கருவிகள் 60 விளக்கம்:

1. பிருதிவியின் காரியம்: மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை

2. அப்புவின் காரியம்:  நீர், உதிரம், மூளை, மச்சை, சுக்கிலம்

3. தேயுவின் காரியம்:  ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சோம்பல்

4. வாயுவின் காரியம்:  ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல்

5. ஆகாயத்தின் காரியம்:  குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம்

6. வசனாதி -5: வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்

7. வாயு -10: பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன், தனஞ்சயன்

உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்பன. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பர். வாயு எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பலப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்).

புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்கும் அதுவே காரணம். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5-ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள்.

பிரதான வாயுக்கள் பற்றிய விளக்கங்கள்:

1.பிராணவாயு: இது இரு உதய தானத்திலிருந்து நாசி வழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களை உண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.

2.மலக்காற்று: இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது. 3.தொழில்காற்று: இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.

4.ஒலிக்காற்று: இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.

5.நிரவுக்காற்று: இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும். இவ்வாறே மற்றவையும். 

ஆயினும், இவ்வாயு எங்கிருந்து வருகிறது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கர்ப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுதும், வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். ஆனால், கர்ப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையை விட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து (மருமம்) பிச்சு அடிக்கும் ஆவி தான் சுவாசம். இதுவே மூல வாயு. கூர்மன்தான் இமைக்காற்று. இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முகச் சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்.

8. நாடி -10: இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், சங்கினி,  குகு

(நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை தெரியும். காந்தாரி – இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்), அத்தி – வலது காது நரம்பு, சிகுவை – உள்நாக்கு நரம்பு, அலம்புடை – இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்), புருடன் – வலக்கண் நரம்பு, சங்கினி – மருமத்தான நாடி, குகு – மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்த வியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)

9. வாக்கு -4: 1. சூக்குமை - சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது 2. பைசந்தி -சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது 3. மத்திமை - உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை  4. வைகரி - சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை.

வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே

                                    இடைக்காடர் சித்தர்

10. ஏடணை(விருப்பம்)-3: தாரவேடணை, புத்திரவேடணை, அர்த்தவேடணை

11. குணம் -3: சாத்துவீகம், இராசதம், தாமதம்


செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

14 ஜூன், 2025

உண்மையில் துன்பங்ளுக்கான காரணம் தான் என்ன? மனிதன் நான்கு விதமான குறைபாடுகளால் துன்பமடைகிறான். அதனால் அமைதியிழந்து அல்லலுறுகிறான். இதற்கு தீர்வு என்ன முழு விளக்கம்:

சமுதாய பிரச்சனைகளை தீர்க்க மனவளம் காட்டும் தீர்வு:



சமுதாய கேடு எங்கிருந்து வருகிறது என்றால் தனி மனித ஒழுக்க கேட்டில் இருந்து தான் வருகிறது. இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஒழுங்கீனம், திமிர், ஆணவம் அனைத்திற்கும் ஒரு வகையான மூலக்கூறுகள் ஆன்மீகம் அற்ற சமுதாய வாழ்க்கை முறைகள் தான். அதற்காக மூடத்தனமான மதக்கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை. அவ்வாறான பிற்போக்கு தனமான கொள்கைகளை களைந்து அறிவான விஞ்ஞானம் கொண்ட மெய் ஞானத்தை ஆன்மீக சாரத்தை வாழ்க்கை நெறியாக கொண்டால் அமைதியான, அன்பான, பண்பான, பகுத்தறிவான மனிதர்களை இந்த சமுதாயம் வழங்கும். தனி மனித அமைதி - ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதி - ஒர் இனத்தின் அமைதி, ஒர் இனத்தின் அமைதி - ஒரு நாட்டின். அமைதிதான் இந்த உலகத்தின் அமைதியாக மாறும்.

1) இயற்கை விதி
2)
சமுதாய அமைப்பு
3)
இன்ப துன்ப உணர்ச்சிகள்

ஆகிய மூன்று கோணங்களின் இணைப்பிலே இந்த வாழ்வு நடைபெறுகிறது. இந்த மூன்று துறைகளிலே தெளிவு உண்டானால் அறிவு சார்ந்த வாழ்வு புலப்படும். நமக்கும் சமுதாய சிக்கலுக்கும் வழி தெரியும்.

துன்பம், என்பது சமுதாய துன்பம் மட்டும் அல்ல. தனி மனித துன்பமும்தான் இந்த சமுதாயத்திற்கான துன்பமாக மாறிவிடுகிறது. தனி மனித துன்பங்கள் சங்கிலி தொடர் போல சமுதாய துன்பமாக வீக்கம் பெருகிறது. தனி மனிதனுக்கு வேலை இல்லை என்றால் சமூதாய பிரச்சனைகள் உருவெடுக்க காரணமாகிவிடுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இங்கிருந்து தான் உற்பதியாகிறது. தனி ஒரு மனிதன் தன் நிலையை உணர்ந்தால் சமுதாய பிரச்சனைகள் களையப்படும். ஒட்டு மொத்த சமுதாயத்தை நாம் திருத்த முடியாது, ஆனால் தனி ஒரு மனிதனின் வளமான வாழ்வு அவனின் அறிவு சார்ந்த உழைப்பு மட்டும் போதுமானதல்ல, அவனின் மன நலமும் உடல் நலமும் வாழ்க்கை நலமும் சிறப்பாக இருக்கவேண்டும்.


உண்மையில் துன்பங்ளுக்கான காரணம் தான் என்ன? 


  1. கடவுளை தேடிக்கொண்டேயிருந்தும் காண முடியாத குறை
  2. வறுமை என்னும் பற்றாக்குறை
  3. விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலச்சியம் செய்தோ, அவமதித்தோ செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
  4. மனிதனின் சிறப்பறியாமல், பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைப்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டன. வாழ்க்கை பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல் அவற்றுக்கு வழி காணாமல் மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும், பிறரையும் வருத்தியும் வாழ்கிறான்.


அறிவின் நிலைகளை மனிதன் அனுபவமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முறையான அக நோக்கும் பயிற்சி அவசியம். மனிதன் மன வளத்தை சரியான முறையில் இயக்க தெரிந்தால் போதும், பெரும்பாலான சமூக பிரச்சனைகள் தீர்ந்த மாதிரிதான். அறிவு புத்தி நிலையிலும், சித்த நிலையிலும், பேரறிவு நிலையிலும், சமாதி நிலையான பிரம்ம நிலையிலும் நின்று பயில வேண்டும். பிறகு வேண்டும் போது வேண்டிய படி அறிவை பயன்படுத்தி இனிது வாழ முடியும்.

மனிதனின் பிரச்சனையே மனப் பிரச்சனைதான். மனதை கட்டுப்படுத்தாமல் மனதிற்கு அடிமை ஆவது தான். மனச்சிக்களில் மாட்டிக் கொண்டு மன அமைதி இழந்து வாழ்ந்து கொண்டிருப்பது தான் இன்றைய நடைமுறையாகிப் போனது. பெருபாலான நமது முக பாவங்களை பாருங்கள், ஒரு விகாரம் தெரியும், ஒரு திமிர் தெரியும், தான் என்ற ஆணவம் தெரியும். இவை எல்லாம் எங்கிருந்து வருகிறது? எல்லாம் அகத்தின் அழகு தானே. அகத்தை சீர் செய்தால் மனதில் தெளிவு உண்டாகும், முகத்திலே அறிவின் ஒளியும் அன்பின் நிலையும் தெரியும்.

பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கின்றான். துன்பமில்லா இன்ப வாழ்வை மட்டு மனிதன் நாடுகிறான். வாழ்வின் நோக்கதிற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால் அது துன்பம் தரும். இயற்கையாக கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையும் அவ்வாழ்க்கையின் நோக்கத்திற்கேற்ற வாழுகின்ற முறை யாது என்று அறிந்து கொள்வதுதான் அறிவு என்னும் ஞானம்.

தவறிழைப்பது மனம் இனி தவறு செய்து விடக் கூடாது என தீர்மானிப்பது அதே மனம், தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனம். மனதை பழைய நிலையில் வைத்துக் கொண்டு புதிய பாதையில் செல்ல அதற்கு எப்படி முடியும்? கட்டுப்படாத மனம் காட்டு யானைக்கு ஒப்பானது.கட்டுப்பட்ட மனமோ ஆக்க வேலைகளுக்கு உதவும்.


எப்படி இந்த மனதிற்கு பயிற்சி தருவது?

  • நமது பதிவுகளில்
  • பேராசை
  • சினம்
  • கடும்பற்றும்
  • முறையற்ற பால் கவர்ச்சி
  • உயர்வு தாழ்வு மனப்பான்மை
  • வஞ்சகம்

என்னும் ஆறு குணங்கள் கூட பழிச்செயல்கள் மூலம் பதிவு பெற்றவைகளே. இவற்றை நாம் மெய்விளக்கத் தவமுறையில் அறுகுணச் சீரமைப்பு என்னும் பயிற்சி மூலம் நமக்கு இருக்கும் பதிவுகளை மாற்றமுடியும்.


உணர்ச்சி நிலையில் உணர்ந்த நிலை 

1. பேராசை - நிறைமனம்
2.
சினம் - பொருமை
3.
கடும்பற்று - ஈகை
4.
முறையற்ற பால் கவர்ச்சி - கற்பு நெறியாக
5.
உயர்வு தாழ்வு - சமநோக்கு
6.
வஞ்சகம் - மன்னிப்பு

அகநோக்கும் பயிற்சியின் மூலம் மனதை உயிரில் ஒடுக்கி உயிர் நிலையறிந்து ஆன்ம உணர்வு முதலில் பெற வேண்டும். இந்த நிலையில் இன்ப துன்ப உணர்வுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் உண்மையை அறிந்த மனிதனுக்கு இந்த உணர்வு பெற்றபின் மனம் உடல் நிலை கடந்து உயிர் நிலையில் நிலைத்துப் பின் உயிர் நிலையும் தாண்டி, தெய்வ நிலையில் லயித்து நிற்கின்ற உயர்பேறு கிட்டுகிறது. செய்கின்ற செயல் எல்லாம் கடமை உணர்வின் கீழ் எல்லோருக்கும் பயனாகும். அறிவே தூய்மையான மெய்பொருளோடு ஒன்றி நிற்கும். இங்கு பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முறிந்து போகும். இந்த உண்மையை தான்


இருள்சேர் இருவினையும்சேரா இறைவனபொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு

                                      என்றார் வள்ளுவர்


மனித இனத்தின் மேல் ஆதிக்கத்தை திணிப்பதுதான் மதம் விளக்கம்:


ஆன்மீகம் என்றவுடன் ஏதோ மதப்போதனை என்று நினைத்துக் கொள்வது எவ்வளவு அறியாமை! எந்த மதமும் ஆன்மீகதோடு தொடர்புடையதுதான்.ஆனால் மதம் மனித சிந்தனைகளை ஏற்று சில கட்டுப்பாடுகளையும் மனித இனத்தின் மேல் தனது ஆதிக்கத்தை திணிப்பதுதான் மனித சமுதாயத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது. தன்னை சார்ந்த மதத்தினரையும் தனக்கு எதிரான மதத்தினரையும் தனது கட்டுக்குல் கொண்டு வருவதற்கு முயர்ச்சிப்பதுதான் மதம். எந்த மதத்தில் இல்லை பஞ்சமா பாதகங்கள்? தனது மதக்கொள்கைகளுக்கு எதிரானது என்றால் கலுவேற்றுவது, அவர்களை உயிருடன் எரிப்பது, போர் புரிந்து கொல்வது மற்ற மதத்தினரின் செத்துக்களை கொள்ளை அடிப்பது, கற்பழிப்பது என்று எது முடியுமோ அதை எல்லாம் இறைவன் பெயரில் செயல் படுத்துவது மதம். மனதை பக்குவபடுத்தி மனித நேயத்தை வளர்க்க வேண்டிய மதம் மனிதருக்குள் பிளவை எற்படுத்தி எனது மதம் பெரியது உனது மதம் சிறியது என்று கோட்பாடுகளில் காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறது மதம்.

சில அற்புதமான மஹான்களில் ஆன்ம நேயத்தில் உருவான மதக்கோட்பாடுகள் காலவோட்டத்தில் ஆன்மீகத்தை மறந்து உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு பல விஷயங்கள் வெரும் சடங்காகி போனதுதான் வேதனை. மதம் தனது பல வேசங்களை களைந்தால் அற்புதமான ஆன்மீகம் கண்ணுக்கு தெரியும். அற்புதமான மனித நேயம் மிகுந்த வாழ்க்கையும் புரியும்.

உயிருள்ள எந்த மனிதனுக்கும் மனம் என்ற உணர்வு இருக்கும் குரங்கு போன்று திரிந்துக் கொண்டிருந்த ஆன்மாவை உணர்ந்துக் கொள்வதுதான் ஆன்மீகம். ஒவ்வொரு மனிதனும் தன் உயிரும் மனமும் உணர்ந்து தெளிந்து பக்குவபடுத்துவது தான் ஆன்மீகம். ஆன்மீக தேடல் என்பது ஏதோ பிற்போக்கு சிந்தனை என்பது எல்லாம் ஒரு மாயை. மனம் அறிவின் நிலைப்பட்டால், அதுவே பெரிய சீர்திருத்தம் தான். மனம் அன்பு நிலைப்பட்டால் மகாத்மா என்று பொருள். மனித மனம் ஒரு நிலைப்பட்டால் மகாசக்தி மிக்கது. அன்பு மயமான மனதிற்கு எப்படி வரும் வன்முறை? மனம் அமைதி கொள்பவன் எப்படி பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுவான்? தனி மனித சீர்திருத்தம் மனதின் அடிப்படையில் இருந்தால் இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாக மிளிரும் என்றால் அது மிகையல்ல.

ஒரு நபியை, ஒரு ஏசுவை, புத்தர் பிரானை, வள்ளுவரை, திருமூலரை, வள்ளாலரை, தாயுமானவரை, வேதாத்திரியை போன்று இன்னும் எண்ணற்ற சித்தர்களையும் யோகர்களையும் தந்தது இந்த ஆன்மீக நெறிதான். அந்த ஆன்மீக நெறி ஏன் நமது வாழ்க்கை நெறியாக கூடாது?

சமுதாயத்திலே முதலில் அனைவருக்கும் மன வளத்தை போதிப்போம். மனதை பண்படுத்துவோம். மனம் சீர்ப்பெற்றாலே மாண்புடன் வாழும் மனிதனை நாம் கண்டு கொள்ளலாம்.


செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"