25 ஜூன், 2025

தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்பவை எவை? சைவ சித்தாந்தத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அமைப்பு மேலும் இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவை சிவதத்துவம், வித்தியாதத்துவம் மற்றும் ஆன்ம தத்துவம் விளக்கம்:

 தத்துவநிலை-96 விளக்கம்:



தத்துவா தீதத் தனிப்பொருள் வெளியெனும்
    அத்திரு வம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
    அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித் தனித் திரையால்
    அத்திற மறைக்கும்
அருட்பெருஞ்ஜோதி
                                            அகவல்

தத்துவங்கள் அனைத்தையும் கடந்து, தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறச் சிவநிலையில் ’தான்’ என்ற நிலையும் கரைந்து அம்பலத்தே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி என்றும் தத்துவ சேட்டைகளைக் கடந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண இயலும் என்பதையும், அந்த தத்துவச் சேட்டைகள் ஒவ்வொரு திரையாக இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணரவிடாமல் தடுக்கிறது என்றும் இவையனைத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னுடைய அருள் வல்லபத்தால் செய்கிறார் என்றும் பொருள் விளங்கும் அகவல் வரிகள்.


ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுவென்பர்
ஆகின்ற வாறா றருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே.
                                            திருமந்திரம்


முப்பது முப்பது முப்பதறுவருஞ் செப்ப
மதிளுடை கோவிலுள் வாழ்பவர் செப்பு
மதிளுடைக் கோவிற் சிதைந்தபின்
ஒப்ப வனைவரு மோட்டெடுத்தாரே
                                    திருமந்திரம்

இந்த தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்ன?


தத்துவங்கள் 36-ல்
ஆன்ம தத்துவம் - 24
வித்தியா தத்துவம் - 7
சிவதத்துவம் - 5.

இவற்றின் மற்ற உட்பிரிவு 60 ஆக மொத்தம் 96 இவற்றை விரிவாக காண்போம்.

சிவ தத்துவம் (சுத்த மாயை): நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை ஆக 5

வித்யா தத்துவம் (அசுத்த மாயை): மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆக 7

ஆன்மதத்துவம்: பஞ்ச பூதம் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பிராணாதி வாயுக்கள் 5, அந்த கரணங்கள் 4 ஆக மொத்தம்: 24

ஆன்மதத்துவம் விளக்கம்:

1. பஞ்ச பூதம் – 5: மண், நீர், தீ, காற்று, ஆகாயம்.

2. தன்மாத்திரை -5: சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம்

3. கன்மேந்திரியம்- 5: வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய்

4. ஞானேந்திரியம் -5: செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்

5. அந்தக்கரணம் -4: மனம், சித்தம், புத்தி, அகங்காரம்

6. வித்தியா தத்துவம் -7: புருடன், அராகம், வித்தை, கலை, நியதி, காலம், மாயை

இவற்றில் காலம்: சென்றது, நடப்பது, வருவது

நியதி: அவரவர் வினையை அவரவர்களை அநுபவிப்பது

கலை: ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்

அராகம்: ஆசையை எழுப்பும்

புருடன்: விஷயங்களில் மயங்கும்

7. சிவதத்துவம் -5: சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம்

புறக்கருவிகள் 60 விளக்கம்:

1. பிருதிவியின் காரியம்: மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை

2. அப்புவின் காரியம்:  நீர், உதிரம், மூளை, மச்சை, சுக்கிலம்

3. தேயுவின் காரியம்:  ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சோம்பல்

4. வாயுவின் காரியம்:  ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல்

5. ஆகாயத்தின் காரியம்:  குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம்

6. வசனாதி -5: வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்

7. வாயு -10: பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன், தனஞ்சயன்

உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்பன. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பர். வாயு எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பலப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்).

புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்கும் அதுவே காரணம். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5-ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள்.

பிரதான வாயுக்கள் பற்றிய விளக்கங்கள்:

1.பிராணவாயு: இது இரு உதய தானத்திலிருந்து நாசி வழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களை உண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.

2.மலக்காற்று: இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது. 3.தொழில்காற்று: இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.

4.ஒலிக்காற்று: இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.

5.நிரவுக்காற்று: இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும். இவ்வாறே மற்றவையும். 

ஆயினும், இவ்வாயு எங்கிருந்து வருகிறது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கர்ப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுதும், வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். ஆனால், கர்ப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையை விட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து (மருமம்) பிச்சு அடிக்கும் ஆவி தான் சுவாசம். இதுவே மூல வாயு. கூர்மன்தான் இமைக்காற்று. இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முகச் சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்.

8. நாடி -10: இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், சங்கினி,  குகு

(நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை தெரியும். காந்தாரி – இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்), அத்தி – வலது காது நரம்பு, சிகுவை – உள்நாக்கு நரம்பு, அலம்புடை – இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்), புருடன் – வலக்கண் நரம்பு, சங்கினி – மருமத்தான நாடி, குகு – மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்த வியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)

9. வாக்கு -4: 1. சூக்குமை - சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது 2. பைசந்தி -சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது 3. மத்திமை - உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை  4. வைகரி - சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை.

வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே

                                    இடைக்காடர் சித்தர்

10. ஏடணை(விருப்பம்)-3: தாரவேடணை, புத்திரவேடணை, அர்த்தவேடணை

11. குணம் -3: சாத்துவீகம், இராசதம், தாமதம்


செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக