8 ஜூலை, 2025

ஊழ்வினை என்றால் என்ன? நமது மூல நூல்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்ட விளக்கங்கள் என்ன? ஊழ்வினையில் இருந்து தீர்வு பெற என்ன வழி?

 ஊழ்வினை என்பது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?



ஊழ்வினை என்றால், ஒருவரின் முந்தைய பிறப்புகளில் செய்த செயல்களின் விளைவாக இப்பிறவியில் ஏற்படும் நல்வினை அல்லது தீவினைப் பயன் என்று பொருள். இது தலையெழுத்து அல்லது விதிக்கப்பட்ட விதி என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

ஊழ்வினை என்பதை விதி அல்லது கர்மா என்கிறோம். நம்மால் தடுக்கமுடியாத சில அசம்பாவிதங்கள், கெடுதல்கள் நம் வாழ்வில் திடீரென்று நமக்கு நடப்பதை ஊழ்வினை என்கிறோம்.முன்னர் நாம் செய்த சில பாவங்களே இதற்கு காரணம் என்று கருதப்படுவதால் ‘ஊழ்' என்ற அடைமொழி உருவாயிற்று. கோவலன் மதுரையில் கொல்லப்பட்டதும், கண்ணகி கைம்பெண் ஆனதும் ஊழ்வினை. இதையே இளங்கோ அடிகள் “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று குறிப்பிடுகிறார்.


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.
                                        திருக்குறள்

இதன் பொருள் என்னவென்றால், ஊழ்வினையிலிருந்து தப்ப நாம் மாற்று வழியில் சென்றாலும் அது எப்படியாவது நம் முன்னேவந்து நிற்கும் என்பதாகும்.

நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை "ஊழ்" என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.


ஊழ்வினை பற்றிய மூல நூல்களில் விளக்கங்கள்:


அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும்,
            பாதாளம் அதில் சென்றாலும்,
பட்டம் என வானூடு பறந்தாலும்,
            என்ன அதில் பயன் உண்டாமோ,
பிட்டுவர மண்சுமந்த தண்டலையா
            ரே,முன்நாள் பெரியோர் கையில்
இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின்
            வருவது இல்லை தானே".      
                                தண்டலையார் சதகம்.

பிட்டு வர மண்சுமந்த தண்டலையாரே --- பிட்டை விரும்பி மண்ணைச் சுமந்த தண்டலை நீள்நெறி இறைவரே!,  முன்நாள் பெரியோர் கையில் இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின் வருவது இல்லை --- முற்காலத்திற் பெரியோர்களின் கையிலே கொடுத்தவாறே தவிர மற்று அரு வகையாக ஆசைப்பட்டால் வருவது ஏதும் இல்லை.எனவே, அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும் --- எட்டுத் திசைகளிலும் எங்கும் சென்று திரிந்து உழைத்தாலும், பாதாளம் அதில் சென்றாலும் ---- பாதாள லோகத்திலே சென்று தேடினாலும்வான் ஊடு பட்டம் எனப் பறந்தாலும் --- வானத்திலே காற்றாடி போலப் பறந்து திரிந்தாலும்என்ன --- என்ன கிடைக்கும்அதில் பயன்தான் உண்டோ ---- அவ்வாறு அலைவதனால் பயன் ஏதும் உண்டாகாது. விதிப்படியே எல்லாம் ஆகுமே அன்றி, பேராசை கொண்டு அலைவதனால் பயன் இல்லை.


செங்காவி மலர்த்தடஞ் சூழ் தண்டலைநீள்
            நெறியே,நின் செயல் உண் டாகில்
எங்கு ஆகிலென் அவரவர் எண்ணியது எல்--
            லாமுடியும், இல்லை யாகில்
பொங்கு ஆழி சூழுலகில் உள்ளங்கால்
            வெள்ளெலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
            தன்னுடனே ஆகுந் தானே".   
                                                                         தண்டலையார் சதகம்.

விளக்கம்: இறைவன் அருளானது நமது ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால், "நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்றார். ‘உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போகஎன்பது பழமொழி. ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனேஎன்பதும் பழமொழி.


ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்,
    அன்றி அதுவரினும் வந்து எய்தும், --- ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்,
    எனை ஆளும் ஈசன் செயல்.
                                            நல்வழி.

இதன் பொருள்

ஒரு பொருளைப் பெற நினைத்தால், அப்பொருள் கிடைக்காமல் வேறொரு பொருள் கிடைத்தாலும கிடைக்கும். அப்படி யல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும். இன்னும்,ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்.இவைகள் எல்லாம் என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும். இருவினைகளுக்கு ஈடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே அன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது.


வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,
    தாழ் வினை அது வர, சீரை சாத்தினான்;
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,
    ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ!
                            கம்பராமாயணம், நகர்நீங்கு படலம்.

இதன் பொருள்:

விதிக்கடவுளாகிய பிரமதேவனாலேயே ஊழ்வினையைத் தடுக்க இயலாதாயின், வேறு ஒருவரலாலும் இயலாது. திருமாலின் அவதாரமாகிய இராமனுக்கு வினை என்பது ஒன்று இல்லை. ஆயினும், தேவர் வேண்டச் செய்துகொண்ட சங்கற்பம் தானே இம்மனித வடிவ நிகழ்ச்சியில் வினை ஆனது என்று உய்த்து உணர்ந்து கொள்ளவேண்டும்.


அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்
விதி வயம்" என்பதை மேற்கொளாவிடின்,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ
                        கம்பராமாயணம், சடாயு உயிர்நீத்த படலம்.

 

இதன் பொருள்:

நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் தான்,நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப துன்பங்களை வெல்ல முடியாது. வருவன வந்தே தீரும்,அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதி வசம் என எண்ணி ஆறுதல் அடைந்து மதி வலியால் அதனைப் போக்கலாம் என்று சடாயுஆறுதல் கூறுகிறான். 'விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி'என்று சன்னத்தனாகிக் கொக்கரித்த இலக்குவன் கூண்ட, "வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ" என்று கூறுதல் காண்க.


வீதலும் பிழைத்தல் தானும்
     விதிவழி அன்றி, நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ?
     நின்னில் வேறு அறிஞர் உண்டோ?
பூதலம் தன்னில் யாவர்
     புதல்வரோடு இறந்தார்,ஐயா!
சாதல் இங்கு இயற்கை அன்று என்று
     அருளுடன் தடுத்த காலை.    
                        வில்லிபாரதம், 13-ஆம் போர்ச் சருக்கம்.

இதன் பொருள்:

கண்ணன் ஏவ, இந்திரன் முனிவர் வடிவில் வந்து, தீயில் பாய இருக்கின்ற தனது மகனோடு தீயில் பாயத் தலப்படுகின்றான். அவனைத் தடுக்குமாறு, கண்ணன் அருச்சுனனை ஏவுகின்றான். அருச்சுனன் முனிவருக்கு உலக இயற்கையைச் சொல்லித் தடுக்கின்றான். உனது மகன் இறந்தாலும், எனது வார்த்தையை மறுக்க மாட்டாய் அல்லவா? என்று, "என் மகன் இறக்க, என்னை இருத்தினை ஆயின்,அம்ம! நின் மகன் இறந்தால், என்சொல் மறாது ஒழி, நீயும்!' என்று முனிவனாக வந்த இந்திரன் சொன்னான்.

ஊழ் வலிமை மிக்கது என்று கூறிய நாயனார், அதனை வெல்லும் உபாயத்தையும், "ஆள்வினை உடைமை" என்னும் அதிகாரத்தில், "உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர், ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்று கூறி அருளினார்.


ஊழை வெல்லுதற்கு உரிய உபாயம்:


“சிவாயநம" என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை --- உபாயம்
இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.        
                                        நல்வழி.

இதன் பொருள்:

சிவாயநம என்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒருபொழுதும் துன்பம்உண்டாகாதுஇதுவே துன்பமில்லாமல் இருப்பதற்கு உரிய உபாயம். விதியை வெல்லுதற்கு ஏற்ற உபாயமும் இதுவே ஆகும். இது அல்லாத எல்லா அறிவுகளும், விதியின்படியே ஆகிவிடும்.

சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து கொண்டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை. ஏனையர்க்கு உண்டு. சிவபெருமானுடைய திருவைந்தெழுத்து என்று ஔவைப் பாட்டியார் சொன்னதால், அது ஒன்றுதான் என்று கொள்ளவேண்டாம். அருள்நெறியில் நிற்போர்க்கு, அவர் நினைந்த வடிவில் வந்து தெய்வம் அருள்புரியும். எனவே, எத் தெய்வம் கொண்டோமோ, அத் தெய்வத்திற்கு உரிய மந்திரம் என்று கொள்வது பொருந்தும். சமயச் சாயம் தேவை இல்லை.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை,- நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல்,நெஞ்சே!மெய்
விண்ணுறுவார்க்கு இல்லை விதி".    
                                                நல்வழி.

இதன் பொருள்

இருவினைப் பயனை வெல்வதற்கு உரிய உபாயமானது, வேதம் முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதால் உண்டாவதில்லை. எனினும்,நெஞ்சே! --- மனமே, கவலைப் படாதே. மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, அவர் நினைப்பது போலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை.

முத்தி நெறியாகிய தியான சமாதிகளினால் அன்றி, நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க ஒண்ணாது.


செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.

                                    

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக