29 நவ., 2025

உடலைப் பேனி பாதுகாப்பதின் அவசியம் என்ன? உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனிதன் தன் கடமையை செய்ய முடியும் மனிதனின் தலையாய கடமை எது?

 

மனிதனின் தலையாய கடமை எது?

நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்காக நாம் சமுதாயத்தில் கடன்பட்டிருக்கிறோம். மற்றும் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனைத் திருப்பித் தரும் வழியே கடமை எனப்படுகிறது.

அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை. உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.

உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மைக் கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வரவேண்டிய வரவும் நின்றுபோய் மருந்தென்றும் உபசரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான் கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று உடல் கடமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப்பட்டது.

ஊனுடலே வாகனம் என்று கூறுவதன் நோக்கம் என்ன?

இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும். உடலை எடுத்தால் தான் அந்தப் பாவப் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத் தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. ஆகவே உடலை உயர்வாகக் கருதி, சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.

 

"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப்படுபவன்
    பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான்
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
    அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".

 

"அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை".

பழிச்சுமை கழி:

 

"ஐயுணர்வின் வயம் ஏற்ற
    ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
    மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
    சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
    உடனே என் தொடர்பு கொள்வீர்!"

                                    வேதாத்திரி மகரிஷி.

மனம் எப்போது செயல்படாமல் நிற்கும்:

மனம் நிற்க வேண்டும் அதாவது மற்ற எண்ணங்கள் எழாமல் நிற்க வேண்டும் என்று பலர் நினைப்பது போல் மனம் சும்மா நிற்கவே நிற்காது. நிற்கவே முடியாது. எப்போது நிற்கும் என்றால், இந்த உயிர்ச்சக்தி ஓட முடியாமல் திணறி அதிலிருந்து இயங்காமல் உடல் என்ற இயந்திரமே கெட்டுப் போய்விட்டது என்றால் மன இயக்க அலையே நின்று போய்விடுகிறது. அதோடு மரணம் தான் அல்லது உயிர்ச்சக்தி பலகீனமாக இருக்கிறபோது அதற்குப் போதிய அளவுக்கு ஆற்றலைப் புதுப்பிப்பதற்காக ஓய்வு எடுத்துக் கொள்கிறபோது தூக்கம் வருகிறது. தூக்கம் அல்லது மரணம், இந்த இரண்டு சூழ்நிலைகளில் தான் மனம் (Mind) செயல்படாது நிற்கும்.

 எண்ணம் எழாமல் இருக்குமா? உதாரண விளக்கங்கள்:

எண்ணமே வரக்கூடாது.. மனம் நிற்க வேண்டும் என்று அடிக்கடி பலர் நினைக்கிறீர்கள். உதாரணமாக - உங்களது ஸ்டோர் ரூமில் நூறு பொருட்களை வைத்திருக்கிறீர்கள் ஒரு பொருள் தேவையாக இருக்கிறது ஆனால் நீங்கள் அந்த ஒரு பொருளைத் தேடி எடுக்கப் போகும்போதும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மற்ற நூறு பொருட்களும் கண்ணுக்குப்படுகிறது நாம் தேடி எடுக்கப் போகும் பொருள் போக மீதி எல்லாமும் சேர்ந்து தென்படுகிறதே என்று ஏன் சிரமப்படுகிறீர்கள்?. உங்களுக்கு வேண்டிய பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மிச்சப் பொருட்களை விட்டுவிடுங்கள் தேடும் பொருள் போக மற்றப்பொருள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியவே கூடாது என்று சொல்கிற மாதிரி - அப்படி மற்ற எண்ணமெல்லாம் வரவே கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்போது எந்த எண்ணம் வரும்? இன்றைக்கு நான் எண்ணுகிற எண்ணம் மட்டும் தான் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? ஏற்கனவே எண்ணி இருப்பு வைத்த எண்ணங்களும் சேர்ந்தே தான் வரும். ஏனென்றால் அது கருமையத்தில் இருப்பாகி உள்ளது. அதனால் எண்ணமே அடியோடு நின்று போக வேண்டும் என்று நினைப்பதே தவறு.

நீங்கள் உங்களது எண்ணம் நிற்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் கடைசியாக அது ஒரு நாளைக்கு உடலைவிட்டு உயிர் பிரியும் போது எண்ணம் நிற்கத்தான் போகிறது!. இன்று மனதில் எழும் மற்ற எண்ணமெல்லாம் நின்றுவிட வேண்டும் என்று நாமாக ஏன் நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பதும் தவறு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.

மனதை எவ்வாறு சீரமைப்பு  செய்வது :

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் எண்ண ஓட்டத்தைச் சீர்படுத்த வேண்டியது தான் (You have to Streamline) நாம் செய்ய வேண்டிய வேலை. முறையான அகநோக்குப் பயிற்சியும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்வு (Introspection) பயிற்சியில்எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், தத்துவ விளக்கங்கள்” போன்ற சிந்தனையை தூண்டும் பயிற்சிகளின் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டால் எண்ணத்தின் ஆற்றல் வளரும். மனோபலம் உண்டாகும். அதோடு மட்டுமல்லாது, அதனுடைய பயன் வாழ்நாள் முழுவதும் நம்மை எல்லாத் துறைகளிலும் சிறப்படையச் செய்யும்.

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 

28 நவ., 2025

எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அந்த அலையை நம் மனமானது தானாகவே இழுத்துக்கொள்ளும் அதைப் பற்றிய விளக்கம்:

 

அலை இயக்கம் என்பதைப் பற்றிய விளக்கம்:

தியானத்தின் மூலம் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வந்து "வாழ்க வளமுடன்" என்று ஒருவரை வாழ்த்துவது என்றால் அந்த வாழ்த்துதலினுடைய பலன் இந்த "அலை இயக்கத்தில்" ஒரு தன்மையுடையதாகிறது. முதலில் நம்மை வாழ்த்திக் கொள்கிறோம். பிறகு வாழ்த்தானது அது போகும் இடமெல்லாம் அதே அலைத்தன்மையை ஏற்படுத்துகிறது. அவருடைய தன்மையை மாற்றி வாழ்வை வளப்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலை முடிப்பதற்கு அறிவை உயர்த்துகிறது. எனவே நல்ல எண்ணம், நல்ல செயல் இரண்டும் வேண்டும். நல்ல எண்ணம் உற்பத்தி செய்து கொள்ள மனதிற்கு முறையான உளப்பயிற்சி (Systematic psychic practice) - அதாவது "அகத்தவம்" (Simplified Kundalini Yoga) வேண்டும். நல்ல செயல் செய்ய "அறநெறி வாழ்வு" வேண்டும்.

மனிதன் வாழ்வாங்கு வாழ எந்த இரண்டு வேண்டும்:

அகத்தவம், அறநெறி வாழ்வு இந்த இரண்டின் வழியே தான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும். எல்லாம் வல்ல இறைநிலை (Almighty), எந்த செயலுக்கும் ஒரு விளைவைத் தருவது என்றால் அது ஊடுருவி நின்று செயல்படுவது. எதுவும் தவறு செய்யாது. யார் என்ன நினைத்தாலும் நம் வினைப்பதிவிற்கு ஏற்றவாறு அதற்குத் தக்கவாறு எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அதை நம் மனமானது தானாக இழுத்துக் கொள்ளும். நம்மை தயார் செய்து கொள்ள நல்ல தன்மை, ஏற்பு சக்தி (Receptivity) மட்டும் தான் நமக்கு வேண்டும். அதற்கு நம்மை நம் சிந்தனை ஆற்றல் துணை கொண்டு மனதை தயார் படுத்தி அவ்வுயர்ந்த நிலைக்குத் தகுதியாக்கிக் கொள்ள குருவின் மூலம் முறையாக கற்றுக்கொள்ளப்படும் உளப்பயிற்சியாகிய தியானப் பயிற்சியின் (Sky Kundalini Yoga) மூலம் தான் சாத்தியமாகும். அவ்வளவு தான்".


"உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்
    உட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை
உயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்
    ஒரு தொகுப்பில் கோடானகோடி கூடி
உயிராற்றல் தற்சுழலோடு இயங்கும்போது
    உண்டாகும் விரிவுஅலை சீவகாந்தம்
உயிர்அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை
    உண்மைசிவம் உணர்வதுவே மனம்ஆம் காணீர்."

                                            வேதாத்திரி மகரிஷி.

அலை இயக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதன் விளக்கம்:

ஒரு வானொலி நிலையத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். அது பாடல் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாடல் வெளியிலே போகும்போது அலையாகத்தான் போகும். அந்த அலையில் அந்தக் கருத்து வாசகம் எல்லாம் அடங்கியிருக்கும். வழியில் இதை யாராவது கண்டு பிடிக்க முடியுமா? முடியாது. இல்லை அலையில் இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது. ஆனால் இங்கே உள்ள கருவியில் மோதும்பொழுது மோதிப் பிரதிபலிக்கும்பொழுது அங்கே எந்தெந்த உச்சரிப்பு எந்தக் கருத்து அங்கே சொன்னார்களோ அவையனைத்தும் வெளிப்படும். இன்னொரு பாடல்; அதை ஒருவர் தாளம் போட்டுப் பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாள ஓசையோடு கேட்கிறது; அதுபோல இன்னும் வேறு பல கருவிகளை வைத்துப் பாடினாலும் கூட அவ்வளவும் இந்த அலையில் போகும். வெறும் பேசும் அலைக்கும் இந்த அலைக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது அங்கே. ஆனால் அது மோதிப் பிரதிபலிக்கக்கூடிய இடத்தில் அத்தனையும் வரும்.

அதேபோல் எந்தப் பொருளும் உலகத்தில் அதன் அதன் இடத்திலிருந்து ஒரு அலை வீசிக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்றால் சக்தியின் துகளினால். ஒவ்வொரு ஆகாசத்துகளும் தன் வேகத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. ஆகையினால் அலை வீசிக் கொண்டே தான் இருக்கும். எந்த அலைக்கும் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றுடன் ஒன்று திருப்பி திருப்பி இணைந்து பாய்தல் என்று ஐவகையான இயக்கங்கள் உண்டு. எத்தனையோ அலைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றையெல்லாம் நல்லவையாக ஆக்கிக் கொண்டு நாம் நல்ல அலையை இயக்க வேண்டும்; நலம் செய்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மையேதான் செய்வேன் என்ற எண்ணத்தை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெட்டவெளி என்ற இறைநிலையின் சக்தி:

 

"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
    வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
    தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
    பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
    இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."

                                            வேதாத்திரி மகரிஷி

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 

27 நவ., 2025

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன்செய்த வினைதான் (செயல்) காரணம் என்றால், நான் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? அந்த முதல் பிறப்பில் நான் செய்த செயல் என்ன?

 

மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான் விளக்கம்:

வேதாத்திரி மகரிஷியின் பதில் முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது? என்பதே முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன. எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன. ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை. பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன் வந்தான். இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றிய ரகசியங்கள் எங்கு பதிவாகியுள்ளது:

மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான். அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.

இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான். இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான். இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் வினைப்பதிவை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.

மனிதனின் வாழ்க்கை நெறி :

உலகில் பிறந்து வாழ்ந்த எந்த உயிரும், எக்காலத்தும் அழிவுறுவதில்லை. வினைப்பயனாக ஏற்படும் பழிச்சுமைப் பதிவுகள், வாழ்வில் கண்ட விளக்கம், அல்லது உலக இன்பம் துய்க்கும் வேட்பு இவற்றிற்கு ஏற்ப இயங்குவதில் இடமாற்றம் பெறுகின்றன. வாழும் உயிர்களுக்கு நலமோ, கேடோ தருவனவாக அமைகின்றன.

ஆழ்ந்து மனித சமுதாயத்தின் வாழ்க்கை நிலையை அறிவு நிலையைச் சிந்தித்தோமானால் ஒவ்வொரு மனிதனுடைய உயிரும் இன்று வாழும் மக்களுடைய உயிரில் மலர்ந்து வீசிக் கொண்டிருக்கும் நினைவலைகளோடும், இது வரையில் வாழ்ந்து இறந்து போன உயிர்களில் அடங்கியுள்ள ஆற்றலோடும் தொடர்பு கொண்டு தான் இயங்குகிறது என்ற உண்மை தெளிவாகும். அறிவில் விளக்கம் பெற்ற மகான்கள் உலக மக்கள் அறிவை தெளிவு வழியிலும், மற்றவர்கள் மக்களை மயக்க வழியிலும் செலுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இந்த இரண்டு பக்கங்களின் இழுப்புகள் எங்கெங்கு எந்த அளவு வெற்றி பெறுகின்றனவோ, அதற்கேற்ற செயல்களும் விளைவுகளும் மனித சமுதாயத்தில் காணுகின்றன. ஆயினும் விஞ்ஞான அறிவு பெற்ற பலர் மெய்ஞானம் பெருங்காலம் அண்மையில் உள்ளது. அப்போது எல்லா மக்களும் விடுதலை வழியில் வாழ்ந்து அமைதிபெற ஏற்ற சமுதாய வாழ்க்கை நெறி உருவாகிவிடும்.

மறு பிறவி :


"மரம் வளர்ந்தால் வித்து இடும்
    மரத்தினது தன்மையெல்லாம் வித்தில் உண்டு.
மரம் வித்து வித்து மரம்
    மாறி மாறித்தோன்றும் எல்லை இல்லை;
மரம் செத்தால் அது பிறவா,
    மற்றுமதன் வித்துக்கள் மரங்களாகும்.
மரம் வித்து நிலைபோல்தான்
    மனிதருக்கும் மற்றுயிர்க்கும் மறு பிறப்பு".

வாழ்க்கை நெறியே யோகம் :

 

"தீயவினைப் பதிவுகளைத் திருத்திப் போக்கித்
    தெளிந்த அறிவின் விழிப்பில் நிலைத்து என்றும்
தூயவினை, தேர்ந்தாற்றித் துன்பம் நீக்கும்
    தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து
மாயமெனும் மறைபொருளாம் அறிவறிந்து
    மண்ணுலகில் உயிர்கட்குத் துன்பம் நீக்க
நேயமுடன் தொண்டாற்றி இன்பம் துய்க்கும்
    நிறைவாழ்வாம் நெறியதுவே யோகமாகும்."
                                        வேதாத்திரி மகரிஷி

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 

26 நவ., 2025

துறவு என்பது யாது? உண்மையான துறவு என்பது எல்லாவற்றையும் விடுவதா? ஞானம் பெறுவதற்கு துறவு அவசியமா? என்பதைப் பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று யாது?

 

துறவு என்பதன் விளக்கம்:

துறவு என்பது ஆசை, பற்று, பாசம் போன்றவற்றிலிருந்து மனதை விடுவித்து, உலக இன்பங்களைத் துறந்து ஆன்மீக வாழ்க்கையை நாடும் நிலை ஆகும். இது மனதளவில் உலக பந்தங்களில் பற்று இல்லாமல் வாழ்வதைக் குறிக்கும். துறவிகள் பெரும்பாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, ஆன்ம ஞானம் அடைவதை நோக்கமாகக் கொள்வர்.

அளவு முறை அறிந்து ஒழுகும் வாழ்க்கைக்கு துறவு விளக்கம்:

ஒரு அன்பர் கேட்டார்; ''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கின்றார்களே'' என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே போவீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான் இருக்கப் போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? உணவைத் தானே நாட வேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்ததாக அர்த்தம்? இருக்கின்ற இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ, விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு கேட்டதை விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று. அளவு முறை அறிந்து ஒழுகும் போது துறவு தானாக அமைந்து விடும்.

போதும் என்ற மனநிறைவே துறவு:

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது. ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் தான் உங்களால் ஜீரணிக்கச் செய்ய முடியும் என்று நன்றாக தெரிகிறது. அதைத் தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கயே அதோடு நிறுத்தக் கூடிய அறிவும், செயலும் வந்து விட்டன என்றால் அதாவது அறிந்த அறிவுக்கு செயல் ஒன்றுபட்டால் அதுதான் துறவு. '' அடுப்பிலே சாதம் வைக்கின்றீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள், வெந்து போன பிறகு ஏன் இறக்குகின்றீர்கள்?'' என்று என்று கேட்டேன். ''சட்டியில் உள்ளது அடிப்பிடித்துவிடும்''. வேக வைக்கின்றவரை உறவு, இறக்குவது துறவு. இதற்கு மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும்போது உடனே விடுதலை செய்துவிட வேண்டும்; அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு, அனுபவிக்கக்கூடிய முறை இந்த இரண்டும் தெரிந்தால் அது தான் துறவு.

நம்மைத் திருத்துவோம்:


"உறவிலே காணுகின்ற உண்மைநிலை தெளிவே
    துறவாகும், துன்பமிலா இன்பம் நல்கும்
அறவோர்கள் கண்டநெறி அன்புநெறி அதைவளர்ப்போம்,
    திறமான வாழ்வுபெற நம்மைநாம் திருத்திடுவோம்".

 

"அணுவில் அமைந்துள்ள சட்டங்கள் விதியாகும்.
    அறிவாய் அனுபவிக்கும் ஆற்றலே மதியாகும்".

 இல்லறமும் துறவறமும் :


 "இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்
    இதுவரையில் கருதிவந்தார் உலகமக்கள்,
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
    எண்ணத்தைப் பண்படுத்தி எனையறிந்தேன்;
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
    இன்பதுன்பம், உடலுயிர் தத்துவம் உணர்ந்து
இல்லறத்தைத் திறமையுடன் நடத்த ஏற்ற
    எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன்."

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.