14 நவ., 2025

மெய்ப்பொருள் என்றால் என்ன? அந்த மெய்ப்பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள் என்று வேதாத்திரி மகரிஷியின் வேண்டுகோளின் கூற்று யாது? என்பதைப் பற்றிய விளக்கம்:

 

மெய்ப்பொருள் என்பது மகரிஷியின் விளக்கம்:

வேதாத்திரி மகரிஷிக்கு, மெய்ப்பொருள் என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரு முழுமையான, உண்மையான சக்தியாக அல்லது கடவுளாக உள்ளது. இது அறிவின் உச்சகட்டமாக, அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. மேலும், மெய்ப்பொருள்தான் "நான்" என்று நாம் அழைக்கும் மனம் மற்றும் "கடவுள்" என்று அழைக்கப்படும் ஆற்றலும் ஆகும். மனம், தன்னுடைய மூலமான இந்த மெய்ப்பொருளை கண்டறிவதன் மூலம் "உன்னை நீ அறிவாய்" என்ற நிலையை அடைய முடியும்.

மெய்ப்பொருளை எல்லோரராலும் உணர முடியாததின் காரணம்:

வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும் அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது. அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்பம் துன்பம் உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும் மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும். இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?

மெய்ப்பொருளை உணர்வதற்கு தடையாக இருப்பது மூட பழக்க வழக்கங்கள்:

வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும். மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக்கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்கவிட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும்.

ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப்பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.


கடவுள் சொல் விளக்கம்:

கட- உள் என்ற இரு சொல்...

கட- உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை,
கட- உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி
கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்
கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி
கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு
கட- உள் என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்
கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்.!

பேரறிவுக்குப் பத்து படிகள் :

பேரியக்க மண்டலத்தை, தத்துவங்கள்

பத்தாக விளங்கிக் கொள்வோம்
பெரியசுமை மனதிலிருந்திறங்கி விடும்
மனம் அறிவாம் சிவமுமாகும்;
ஓரியக்கமற்றநிலை வெட்டவெளி
இருப்பு அதுவே ஆதியாகும்,
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்
விண்ணாகும், அதிலெழுந்த
நேரியக்க விரிவு அலை நெடுவெளியில்
கலப்புற வான் காந்தமாச்சு
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம் ஒலி ஒளி
சுவையாம் மணம், மனம் ஆம்,
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை
உள்ளுணர்ந்தால் அது மெய்ஞ்ஞானம்.
சிந்திப்போம் உணர்ந்திடுவோம் சேர்ந்திருப்போம்
இறைநிலையோ டென்றும் எங்கும்".
                                        வேதாத்திரி மகரிஷி.

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக