28 நவ., 2025

எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அந்த அலையை நம் மனமானது தானாகவே இழுத்துக்கொள்ளும் அதைப் பற்றிய விளக்கம்:

 

அலை இயக்கம் என்பதைப் பற்றிய விளக்கம்:

தியானத்தின் மூலம் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வந்து "வாழ்க வளமுடன்" என்று ஒருவரை வாழ்த்துவது என்றால் அந்த வாழ்த்துதலினுடைய பலன் இந்த "அலை இயக்கத்தில்" ஒரு தன்மையுடையதாகிறது. முதலில் நம்மை வாழ்த்திக் கொள்கிறோம். பிறகு வாழ்த்தானது அது போகும் இடமெல்லாம் அதே அலைத்தன்மையை ஏற்படுத்துகிறது. அவருடைய தன்மையை மாற்றி வாழ்வை வளப்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலை முடிப்பதற்கு அறிவை உயர்த்துகிறது. எனவே நல்ல எண்ணம், நல்ல செயல் இரண்டும் வேண்டும். நல்ல எண்ணம் உற்பத்தி செய்து கொள்ள மனதிற்கு முறையான உளப்பயிற்சி (Systematic psychic practice) - அதாவது "அகத்தவம்" (Simplified Kundalini Yoga) வேண்டும். நல்ல செயல் செய்ய "அறநெறி வாழ்வு" வேண்டும்.

மனிதன் வாழ்வாங்கு வாழ எந்த இரண்டு வேண்டும்:

அகத்தவம், அறநெறி வாழ்வு இந்த இரண்டின் வழியே தான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும். எல்லாம் வல்ல இறைநிலை (Almighty), எந்த செயலுக்கும் ஒரு விளைவைத் தருவது என்றால் அது ஊடுருவி நின்று செயல்படுவது. எதுவும் தவறு செய்யாது. யார் என்ன நினைத்தாலும் நம் வினைப்பதிவிற்கு ஏற்றவாறு அதற்குத் தக்கவாறு எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அதை நம் மனமானது தானாக இழுத்துக் கொள்ளும். நம்மை தயார் செய்து கொள்ள நல்ல தன்மை, ஏற்பு சக்தி (Receptivity) மட்டும் தான் நமக்கு வேண்டும். அதற்கு நம்மை நம் சிந்தனை ஆற்றல் துணை கொண்டு மனதை தயார் படுத்தி அவ்வுயர்ந்த நிலைக்குத் தகுதியாக்கிக் கொள்ள குருவின் மூலம் முறையாக கற்றுக்கொள்ளப்படும் உளப்பயிற்சியாகிய தியானப் பயிற்சியின் (Sky Kundalini Yoga) மூலம் தான் சாத்தியமாகும். அவ்வளவு தான்".


"உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்
    உட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை
உயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்
    ஒரு தொகுப்பில் கோடானகோடி கூடி
உயிராற்றல் தற்சுழலோடு இயங்கும்போது
    உண்டாகும் விரிவுஅலை சீவகாந்தம்
உயிர்அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை
    உண்மைசிவம் உணர்வதுவே மனம்ஆம் காணீர்."

                                            வேதாத்திரி மகரிஷி.

அலை இயக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதன் விளக்கம்:

ஒரு வானொலி நிலையத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். அது பாடல் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாடல் வெளியிலே போகும்போது அலையாகத்தான் போகும். அந்த அலையில் அந்தக் கருத்து வாசகம் எல்லாம் அடங்கியிருக்கும். வழியில் இதை யாராவது கண்டு பிடிக்க முடியுமா? முடியாது. இல்லை அலையில் இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது. ஆனால் இங்கே உள்ள கருவியில் மோதும்பொழுது மோதிப் பிரதிபலிக்கும்பொழுது அங்கே எந்தெந்த உச்சரிப்பு எந்தக் கருத்து அங்கே சொன்னார்களோ அவையனைத்தும் வெளிப்படும். இன்னொரு பாடல்; அதை ஒருவர் தாளம் போட்டுப் பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாள ஓசையோடு கேட்கிறது; அதுபோல இன்னும் வேறு பல கருவிகளை வைத்துப் பாடினாலும் கூட அவ்வளவும் இந்த அலையில் போகும். வெறும் பேசும் அலைக்கும் இந்த அலைக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது அங்கே. ஆனால் அது மோதிப் பிரதிபலிக்கக்கூடிய இடத்தில் அத்தனையும் வரும்.

அதேபோல் எந்தப் பொருளும் உலகத்தில் அதன் அதன் இடத்திலிருந்து ஒரு அலை வீசிக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்றால் சக்தியின் துகளினால். ஒவ்வொரு ஆகாசத்துகளும் தன் வேகத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. ஆகையினால் அலை வீசிக் கொண்டே தான் இருக்கும். எந்த அலைக்கும் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றுடன் ஒன்று திருப்பி திருப்பி இணைந்து பாய்தல் என்று ஐவகையான இயக்கங்கள் உண்டு. எத்தனையோ அலைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றையெல்லாம் நல்லவையாக ஆக்கிக் கொண்டு நாம் நல்ல அலையை இயக்க வேண்டும்; நலம் செய்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மையேதான் செய்வேன் என்ற எண்ணத்தை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெட்டவெளி என்ற இறைநிலையின் சக்தி:

 

"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
    வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
    தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
    பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
    இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."

                                            வேதாத்திரி மகரிஷி

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக