15 நவ., 2025

இயற்கை என்றும் இயற்கைச் சட்டம் என்பதும் என்ன? இயற்கையின் பேராற்றல் எவ்வாறு இருக்கும் பஞ்சபூத அறிவு என்பதும் என்ன? அதன் செயல்பாடு பற்றிய விளக்கம்:

 

இயற்கைச் சட்டம் என்பது:

இயற்கை அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைச் செய்தால் அதற்கு விளைவாகத் தக்க பயன் வரும். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம்  (It is the Law of Nature). இறைவனுடைய திருவிளையாடலை உணர்ந்து கொள்வோமேயானால், நாம் இரண்டு வகையிலே விழிப்போடு இருந்து பெற வேண்டியதைப் பெறலாம். ஒன்று, இயற்கையின் நியதியை உணர்ந்த மாத்திரத்திலேயே இயற்கையைச் சார்ந்து விடுகிறோம். எல்லா இயக்கங்களும் எல்லா விளைவுகளும் ஒரு நியதிக்கு உட்பட்டுத் தான் நடந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்கின்ற போது, அந்த நியதிக்கு அடிப்படையாக உள்ள ஒரு பேராற்றலோடு ஒன்றி நிற்கின்றபோது அந்த நியதியை நன்றாக உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு மனநிலையும் உண்டாகும். அறிந்து கொள்வது என்பது வேறு. மறவாது இருப்பது என்பது இரண்டாவது. மூன்றாவதாக உணர்ந்ததைச் செயல்படுத்தித் தான் அதனுடைய நலனைப் பெறுவது என்பது. இந்த மூன்று வகையிலே மனிதன் முயற்சி எடுத்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ, அதை அவனாலே நிச்சயமாகப் பெற முடியும். என்ன பெற முடியாது என்று நினைக்கிறானோ அதை விட்டு விட வேண்டியது தான்.


தப்புக் கணக்கு:

"தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்

    ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு,
    எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்".

 

இயற்கையின் பேராற்றல்:

 

"இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
    எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;
    பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?"

 இயற்கை நீதி:


 "ஊழ்வினையாம் கருவமைப்புப் பதிவும் பின்னும்
    உருவெடுத்த பின்விளையும் பதிவும் கூடி
வாழ்வினிலே ஒவ்வொருவர் தன்மையாக
    வளம்பெற்றுத் தேவை சூழ்நிலைகட் கேற்பத்
தாழ்வு உயர்வு எனும் எண்ணம் செய்கையாகத்
    தழைக்கும் புகுவினையென்ற எழுச்சி ஈதே
ஏழ்பிறப்பும் எவ்வினையும் தொடரும் ஒத்து
    எழும் அமைதி இன்பதுன்பம் இயற்கை நீதி".
                                            வேதாத்திரி மகரிஷி

பஞ்சபூத அறிவு பற்றிய விளக்கம்:

பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு என்று சொன்னால், அது பஞ்சபூதங்களின் தன்மையை உணர்ந்து கொள்வது தான். ஏனென்றால், எப்படிப் போனாலும், பஞ்ச பூதங்களையும் அதிலிருந்து வரக்கூடிய விளைவுகளையும் தவிர வேறொன்றையும் மனிதன் அறிவது இல்லை. ஆகையினாலே, இவைகளையெல்லாம் அறிந்து கொள்வதற்கு வேண்டிய சங்கற்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். காப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே நமது மனத்தை ஏற்புச் சக்தி வாய்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஐந்து பெளதீகப் பிரிவுகளிடையேயும் நமது அறிவையும், மனத்தையும், ஜீவகாந்த சக்தியையும் செலுத்தி நமக்கு வலுவைத் தேடிக் கொள்கின்ற தவமே பஞ்சபூத தவம்.

எனவே, நமது மனத்தை ஒழுங்குபடுத்தி, அதற்கான ஒரு பயிற்சி மூலம் ஒவ்வொரு பூதத்தோடும் ஒன்றி, நின்று உயிர்காப்பைச் சரியான முறையிலும், அளவிலும் பெற்றுப் பழகி கொண்டால் வாழ்க்கையில், பஞ்ச பூதங்களான பொருட்களோடும், உயிர்களோடும், தொடர்பு கொள்ளும்போது, உயிர்க்கலப்பு பெறும்போது அந்த உயிர்க்கலப்பு முழுமையாகவும், சரியானதாகவும் வெற்றியும், இனிமையும் தரத்தக்கதாகவும் அமையும். இந்தப் பயிற்சியால் பஞ்ச பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றோடும் முறையாக, முழு அளவில், ஏற்ற சங்கற்பக் கருத்துக்களோடு உயிர்க்கலப்புப் பெற்றுப் பெற்றுப் பக்குவம் அடைந்த மனமானது, எந்த அனுபோகத்திலும், சலிப்போ, வெறுப்போ, தோல்வியோ ஏற்காத பக்குவத்தைப் பெறுகிறது; இனிமையைக் காத்துக் கொள்ளும் திறமை பெறுகிறது. அத்தகு மனத்தினால் எந்தப் பொருளோடும் இணைய முடிகிறது. எந்தச் சக்தியோடும் இணைந்து பயன்கொள்ள முடிகிறது. அந்தப் பொருளால் அல்லது சக்தியால் விளையக்கூடிய பாதகங்களில் இருந்தும் காப்புப் பெற முடிகிறது. அந்தப் பொருள் மற்றும் சக்தி பற்றிய முழு விளக்கத்தையும், தெளிவையும் பெறவும் பயன் கொள்ளவும் முடிகிறது.

 

வீடுபேறு:

 

"வெட்டவெளி பிரபஞ்சப் பொருள்கட் கெல்லாம்
    வீடாகும் விண்கடந்து வானறிந்தால்
வெட்டவெளி அணு அறிவு ஒன்றாய்ப் போகும்
    வீடுபேறு எனும் உயர்ந்த பதமும் ஈதே".

 

"கரு அமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
    ககனத்தில் கோள்கள் நிலை,சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
    வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்
    தகுந்த அளவாம்; இதிலோர் சக்தி மீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
    பின்னும் அதிகரித்துவிட மரணமாகும்."

உடலில் இயற்கை செயற்கை ரசாயண மாற்றங்கள்:


 " மனிதர்களின் உடலில் உள ரசாயணங்கள்
    மாறிக் கொண்டே இருக்கும் இருவிதத்தில்,
தனியமைப்புக் கருவான நாத விந்தில்
    தரம் மாறும் அண்ட கோடி சஞ்சாரத்தால்,
எனில் இவையே இயற்கை ரசாயண மாற்றம் ஆம்.
    இயக்குவதால் உடலை, கொள்ளும் ஆகாரத்தால்
இனி அந்த உடலில் எழுகிற எண்ணத்தால்
    ஏற்படும் மாற்றம் செயற்கை எனும் மாற்றமாகும்."
                                                வேதாத்திரி மகரிஷி.

இயற்கை அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைச் செய்தால் அதற்கு விளைவாகத் தக்க பயன் வரும். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம்  (It is the Law of Nature). இறைவனுடைய திருவிளையாடலை உணர்ந்து கொள்ள வேண்டும்`

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக