10 நவ., 2025

பாவமும் என்றால் என்ன? புண்ணியமும் என்றால் என்ன? (Sins and Virtues) பழிச்செயல் பதிவு என்பது யாது? அதை எவ்வாறு நீக்குவது? என்பதைப் பற்றிய விளக்கம்:

 


பாவமும், புண்ணியமும்:

நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.

பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம், புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்.

புண்ணியம் என்பதன் விளக்கம்:

எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.

பாவம் என்பதன் விளக்கம்:

ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.

உதவி :

 

"இவ்வுலகில் எவர்க்கெனினும் துன்பம் உண்டுபண்ண
    எந்த அளவோ ஒருவர் உயிர்நலம் பறிக்க
எவ்வகையிலும் ஒருவர்க்குரிமையில்லை இல்லை.
    இயற்கையின் சட்டமிது, காப்புமிது வாகும்.
செவ்வியஉன் அறிவாலே, செயல்திறமையாலே
    செய்வது பிறர்க்குதவி சிறந்த வாழ்வு ஆகும்.
ஒவ்வும்வகை யுற்றுணர்ந்து உயிர்க்கினிமை செய்ய,
    உயிரனைத்தும் வாழ்த்தும் உனை, நீ யுலகை வாழ்த்து."

 

சுவர்க்கம் - நரகம் :

 

"உருவம் வரைக்கும் குறுகிநின்ற
    உணர்ச்சி நிலையே நர-அகமாம்.
அருவ மென்னும் பேரண்டம்
    அறிந்த நிலையே சுவர்-அகமாம்; பெருமையுள
விண் என்ற அணுவறிந்தோன்
    விண்ணவனாம். ஆராய்ந்து
விண்கடந்து, வான் அறிந்த
    விவேகியே வானவனாம்."
                                            வேதாத்திரி மகரிஷி.

பழிச்செயல் பதிவு:

பழிச்செயல் பதிவு என்பது, தனக்கோ அல்லது பிறருக்கோ துன்பம் தரும் செயல்களின் பதிவுகளாகும். இவை கருமையத்தில் பதிவுகளாகத் தோன்றி, முன்னோர்களின் கருத்தொடர் வழியாக நம் பிறப்புடன் சேர்ந்து வருகின்றன. இவை வினைகளின் தன்மைகளுக்கும், விளைவுகளுக்கும் ஏற்ப ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த பழிச்செயல் பதிவுகளை நீக்க யோகப் பயிற்சிகள், குறிப்பாக துரிய நிலை யோகம் போன்றவை உதவுகின்றன என்று கருதப்படுகிறது.

பழிச்செயல் பதிவு நீக்கம்:

  1.  தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தரும் செயல் யாவும் பழிச் செயலாகும்.
  2. மனம், மொழி, செயல் எதுவாயினும் ஒவ்வொன்றுக்கும் உயிரிலும் பதிவுகள் உண்டு.
  3. வினைகளின் தன்மைகளுக்கும், விளைவுகளுக்கும் ஏற்ப அவை ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என்னும் மூன்றுவித பழிச் செயல் பதிவுகளாக - 1) உறுப்புப் புலன்களிலும், 2) மூளையிலும், 3) வித்திலும் பதிவாகின்றன. இவையனைத்தும் ஆன்மாவின் சூக்குமப் பதிவுகளாகிப் பிறவித் தொடராக மனிதனுக்குத் துன்பங்களை அளிக்கின்றன.
  4. விழிப்பு நிலை பெறவும், மனவலிவு பெறவும் ஏற்ற உளப் பயிற்சி ஏற்று எல்லாப் பழிச் செயல்களையும் பிராயச்சித்தம், உணர்ந்து திருந்தி அழித்தல், தெய்வ நிலைத் தெளிவால் முறித்தல் என்ற மூவகையில் போக்கி வினைத் தூய்மையும், மனத் தூய்மையும் பெறலாம்.
  5. எந்த பழிச் செயலானாலும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருக்கும் வழியில் முடிவு கண்ட பின்னர் தான், மனவலிவு பெற்ற பின்னர் தான் அதை முயற்சியால் பயிற்சியால் முறையாகப் போக்கி நலம் காணலாம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே மனவிரிவு, விளக்கம், விழிப்புநிலை என்ற நிலைகளும், கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப் போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல்களில் ஈடுபாடு ஆகியவைகளை எந்த அளவுக்கு நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்குத் தான் மகிழ்ச்சியும் நிறைவும், அமைதியும் பெறலாம்.

 

அமைதி பெறுவீர் :

 

"அறிவு என்பதோ களங்கமற்றது
    அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்;
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
    அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது,
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
    அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
    அந்த நிலைநாடி அமைதி பெறுவீரே !."


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக