1 நவ., 2025

மனம் என்பது யாது? அதன் அமைதி குலையக் காரணம் என்ன? மனதில் எழும் ஆறு தீய குணங்கள் நீக்கி நமக்கு நாமே தன்னிறைவுத் திட்டம் விளக்கம்:

 


மன அமைதியும் மனதின் 10 படிநிலைகளும் விளக்கம்:

முதலில் மனம் என்பது யாது, அதன் அமைதி குலையக் காரணம் என்ன என்பதை சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு தேவை இருக்கவே செய்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள, நிறைவு செய்து கொள்ள ஆசை எழுகிறது. அதற்கு முயற்சி செய்ய வேண்டி ஏற்படுகிறது. முயற்சியால் வெற்றியடைகிறான். அதன் பயனை அனுபவிக்கிறான். அது இன்பமோ துன்பமோ கொடுக்கிறது. அந்த செயலை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறான். இது மனதில் பதிவு செய்யப்படுகிறது. இப்படி 

  1. உணர்ச்சி
  2. தேவை
  3. முயற்சி
  4. செயல்
  5. விளைவு
  6. அனுபோகம்
  7. அனுபவம்
  8. ஆராய்ச்சி
  9. தெளிவு
  10. முடிவு


என்று 10 படித்தளங்களில் விரிந்து செயல்படும் உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். ஆகவே இந்த மனதை முதலில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இயற்கையமைப்புக்கு ஒத்து மனம் செயல்படும்படி பழக்க வேண்டும். இயற்கைக்கு முரண்பட்ட செயலை தவிர்க்க வேண்டும். விளைவை நன்றாக கணித்துக் கொண்ட பிறகே செயல்படத் துவங்க வேண்டும்.


மனதில் எழும் ஆறு தீய குணங்களும் அதன் பின் வளைவுகளும்:

நம்மிடம் பெரும்பாலும் பொருள் வயப்பட்ட உணர்வே தலை தூக்கி நிற்கிறது. புலன் வயப்பட்டு ஆசாபாசங்களுக்கு அடிமையாகி மயக்கத்தில் செயலாற்றுகிறோம். அதனால் துன்பம் விளைந்து அமைதி குறைகிறது. பலகோடி அணுக்கள் சேர்ந்த கூட்டியக்கமான உடல், இந்த உடலில் இயங்கும் உயிர், உயிரின் படர்க்கையாற்றலான மனம், இவற்றின் இயக்கத்தை உணரும் அறிவு இவையாவுக்கும் மூலாதாரமான பரம்பொருள், இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உடலில் ஆறாவது அறிவாக இருக்கும் மனம், பரம்பொருளை உணர்ந்து முழுமையடையும் பொருட்டே எழுச்சி பெற்றுள்ளதாகும். இந்த மனத்தைப் பண்படுத்த எழுந்ததுவே அறமும் மதமுமாகும். பிற உயிர்படும் துன்பத்தை ஒத்து உணர்ந்து அதைப் போக்க வேண்டுமென்று எழுந்த கருணை உணர்வே அறமாகியது. தன்னலம் கருதி மயக்க நிலையில் புலன் வயப்பட்டு காமம், கோபம், பேராசை, கடும்பற்று, அகந்தை, வஞ்சம் என்ற ஆறு குணங்களாக மாறி செயல்படுவதால் தான் துன்பம் எழுகிறது. இத்துன்பத்திலிருந்து மீள வேண்டுமானால் மனவிரிவு வேண்டும்.


"அனைத்தியக்கப் பேராற்றல் பிரம்மம்தெய்வம் என்போம்,
    அறிந்தவர்கள் அவ்வாற்றல் வழிவாழ்வோ ரெல்லாம்
முனைப்பொழிந்த ஞானியென்றும் முனிவரென்றும் பலபேர்
    முன்னாளில் சொல்லியுள்ளார்; முற்றுணர்ந்த தெளிவால்
வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில்
    விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில்
அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும்
    அந்த பெரும் நந்நாளை வாழ்த்திவர வேற்போம்".
                                                வேதாத்திரி மகரிஷி.



நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தன்னிறைவுத் திட்டம்:

நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும், திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவ முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் 'எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?' என்று கணித்துக் கொள்ளுங்கள்.

அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில், சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்? தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன.

உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக்கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும் ஆற்றலைச் செலவிட வேண்டும்.

இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச்சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்மயோகம்" இதில் அடங்கியிருக்கிறது.


எதிர்பார்த்தல் ஏமாற்றம்:

 

"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
    ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண
    எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".
                                           வேதாத்திரி மகரிஷி

                செந்தில்குமார் 

                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக