11 நவ., 2025

இறைத்தன்மை அடைய மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன? உலகில் தோன்றிய அனைத்திற்கும் மூலம் ஒன்றே என்பதைப் பற்றிய விளக்கம்:

 


இறைத்தன்மை அடைய அறிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்:

இயற்கைத் தத்துவத்தையும், அதன் விளைவுகளையும் அன்றாடம் வாழ்வில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் விளைவுகளுக்குத் தொடர்ந்து ஆளாகிக் கொண்டும், சில நேரங்களில் பயன்படுத்திக் கொண்டும் வருகின்றோம். இதனைச் செயல் விளைவுத் தத்துவம் என்று சொல்லலாம். விதி என்றும் சொல்லலாம். தெய்வச் செயல் என்றும் சொல்லலாம். வினை அல்லது வினைப் பயன் என்றும் இதை மதிக்கலாம்.

இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத் தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்.

மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன. இந்நிலையைத்தான். ஆணவம் என்பார்கள். நாம் இதனைத் "தன்முனைப்பு" (Ego) என்கிறோம்.

எந்த வகையில் மனிதன் உயர்ந்தவன்:

உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன் இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலங்குன்றியிருக்கின்றது. இதைமூடநிலை எனலாம். மூடம் என்றால் மறைவு என்று பொருள். மூடன் என்றால் அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல் அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைபட்டிருக்கும் நிலையாகும்.

தன்முனைப்பின் காரணமாக மனிதனானவன் தன் பேரறிவைதத் தன் உடல் அளவில் குறுக்கிக் கொண்டு, பொருள் அனுபோகத்திலும் புலன் அனுபோகத்திலும் மட்டுமே கவனம் கொள்ளச் செய்கிறது. அப்போது அவனது பேரறிவானது வெறும் பொருள் வழி மற்றும் புலன்வழி குறுகித் தன் உயர்வையும், சிறப்பையும் இழந்துவிடுகிறது.

 

"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்
அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே"

அறிவும் புலன்களும் :

 

"அறிவைப் புலன்களில் அதிகநாள் பழக்கினேன்
    அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன;
அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்
    அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்,
அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற
    அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது;
அறிவு புலன்களை அறிந்தது வென்றது.
    அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்."
                                        வேதாத்திரி மகரிஷி

அனைத்திற்கும் மூலம் ஒன்றே:

முதன் முதலில் மனித இனத்திற்குத் தெய்வம் என்ற மதிப்பில் இருந்தது உணவு தான். பிறகு, உணவு நிலத்திலிருந்து தான் விளைகின்றது என்றறிந்த போது நிலத்தைத் தெய்வமாக மதித்தான், வணங்கினான். பிறகு நீர் இன்றி உணவுமில்லை, வாழ்வுமில்லையென்று கண்ட போது நீரையும் தெய்வமாகக் கருதினான். பின்னர் தான் நெருப்பின் மதிப்பையும் அதை அலையாக வீசும் சூரியனையும் மதிக்கத் தொடங்கினான்.

மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்ற பின்னர் காற்றின் மதிப்பை உணர்ந்தான். காற்றையும் தெய்வமாக வணங்கினான். காற்றில் மூலத்துகளாக விளங்கும் விண்ணை உணரப் பல இலட்சம் தலைமுறைகள் சென்று விட்டன. சிந்திக்கச் சிந்திக்க அறிவு உயர்ந்தது. தோற்றங்கள் அனைத்தும் விண்ணின் கூட்டுத்தான் என்ற தெளிவு வந்தபோது விண்ணை விடப் பேரியக்க மண்டலத்தில் வேறு என்ன உள்ளது என்ற சிந்தனையில் எல்லையற்ற இறைவெளி அவன் அறிவுக்கு எட்டியது. வெளியிலிருந்து விண் தோன்றி இருக்குமா? அல்லது விண்ணிலிருந்து வெளி தோன்றியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.

இந்த அறிவு நிலைக்கு வருவதற்குள் இந்த நில உலகில் எத்தனையோ மாற்றஙகள் மனித வாழ்வில் நிகழ்ந்து விட்டன. முடிவாகக் கண்ட தெளிவு இறைவெளிதான் தெய்வம். அது அரூபமானது. எங்கும் நிறைந்தது. அதிலிருந்து தான் விண் முதல் அனைத்தும் தோன்றி அந்த இறைவெளியிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் வாழும் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான் என்ற கருத்துப் பரவியது.


சிறு வயதில் கொண்ட பக்தி:

 

"கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்
    கண்காது மூக்குவைத்துக் கதைகள் சொன்னேன்
கடவுள் என்று கற்சிலையை அறையில் வைத்துக்
    கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்; பின் அந்தக்
கடவுளுக்குப் பசிதீர்க்க பால் நெய் தேங்காய்
    கனிவகைகள் கற்சிலைமுன் படைத்தேன் ஆனால்
கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்
    கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக."

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக