9 நவ., 2025

அளவுமுறை என்றால் என்ன? அதிலும் ஐந்தில் அளவுமுறை என்பது என்ன? இயற்கைச் சட்டம் என்பது யாது? அச்சட்டத்தை மீறும் போது ஏற்படும் விளைவுகள் என்ன?

 


அளவுமுறை என்பது யாது?

அமைதி எனும் சம உணர்வே, அறிவுக்கும் உடலுக்கும் பொருத்தமான உணர்வே, உண்மையான இன்பமாகும்.

  1. உணவு
  2. உழைப்பு
  3. உறக்கம்
  4. பாலுறவு
  5. எண்ணம் 

இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. மிகுதியாகவும் கொள்ளக்கூடாது; முரண்பாடாகவும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும் போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும்.

மனிதன் எதற்கு மதிப்பளிக்க வேண்டும்:

மேலும் மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக்காத்து வர வேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்ச தன்மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் முகிதியாகச் செலவானால் [1] ஐம்புலன் கருவிகள் கெடும். [2] உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர் :

 

"சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்கேயுலகு"

என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும். விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவு படுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.


ஐந்துபுலன்கள் மூலம் உயிரின் ஆற்றல்
    அழிவதையே இன்பமென உணர்ம யக்கம்
சிந்தனையில் உயருங்கால், சீவ காந்தம்
    சிதறுவதே ஐயுணர்வென் றறிந்து கொண்டோம்;
உந்தஉந்தக் குண்டலினி புருவ மையத்
    தூறிவரும் பேரறிவின் ஆற்றல் பெற்று,
சொந்ததனி முயற்சியினால் வாழ்வா ராய்ந்து,
    சொல்நினைவு செயல்மூன்றை ஒழுங்கு செய்வோம்".
                                            வேதாத்திரி மகரிஷி


இயற்கைச் சட்டம் என்பதன் விளக்கம்:

இயற்கை அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைச் செய்தால் அதற்கு விளைவாகத் தக்க பயன் வரும். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம் (It is the Law of Nature). இறைவனுடைய திருவிளையாடலை உணர்ந்து கொள்வோமேயானால், நாம் இரண்டு வகையிலே விழிப்போடு இருந்து பெற வேண்டியதைப் பெறலாம். ஒன்று, இயற்கையின் நியதியை உணர்ந்த மாத்திரத்திலேயே இயற்கையைச் சார்ந்து விடுகிறோம். எல்லா இயக்கங்களும் எல்லா விளைவுகளும் ஒரு நியதிக்கு உட்பட்டுத் தான் நடந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்கின்ற போது, அந்த நியதிக்கு அடிப்படையாக உள்ள ஒரு பேராற்றலோடு ஒன்றி நிற்கின்றபோது அந்த நியதியை நன்றாக உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு மனநிலையும் உண்டாகும். அறிந்து கொள்வது என்பது வேறு. மறவாது இருப்பது என்பது இரண்டாவது. மூன்றாவதாக உணர்ந்ததைச் செயல்படுத்தித் தான் அதனுடைய நலனைப் பெறுவது என்பது. இந்த மூன்று வகையிலே மனிதன் முயற்சி எடுத்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ, அதை அவனாலே நிச்சயமாகப் பெற முடியும். என்ன பெற முடியாது என்று நினைக்கிறானோ அதை விட்டு விட வேண்டியது தான்.

தப்புக் கணக்கு :

"தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்

    ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு,
    எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்".

 

இயற்கையின் பேராற்றல் :

"இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்

    எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;
    பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?"

 

இயற்கை நீதி :

"ஊழ்வினையாம் கருவமைப்புப் பதிவும் பின்னும்

    உருவெடுத்த பின்விளையும் பதிவும் கூடி
வாழ்வினிலே ஒவ்வொருவர் தன்மையாக
    வளம்பெற்றுத் தேவை சூழ்நிலைகட் கேற்பத்
தாழ்வு உயர்வு எனும் எண்ணம் செய்கையாகத்
    தழைக்கும் புகுவினையென்ற எழுச்சி ஈதே
ஏழ்பிறப்பும் எவ்வினையும் தொடரும் ஒத்து
    எழும் அமைதி இன்பதுன்பம் இயற்கை நீதி".
                                        வேதாத்திரி மகரிஷி


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக