5 ஜூலை, 2020

காம ரகசியம் - 01 ஒரு விழிப்புணர்வு பதிவு




காம ரகசியம் - 01 ஒரு விழிப்புணர்வு பதிவு

இதனை வாசிப்பவர்கள் ஒரு வெளிப்படையான திறந்த மனதுடன் இவற்றை அணுகும்படி வேண்டப்படுகின்றனர், அல்லாது கீழ்ப்படுத்தப்பட்ட பாலுணர்வு தொடர்பான ஆக்கங்களோ அல்லது அப்படியான உணர்வினை இட்டுச்செல்லும் வகையிலான தகவல்கள் எதுவும் இங்கு இருக்காது. எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் காமத்தினை பற்றிய வெளிப்படையான, ஆழமான புரிதலைப்பெறுதலே இந்த கட்டுரைத்தொடரின் நேக்கமாகும், இதனை ஒத்த மனதுள்ளவர்கள் இதனை வாசிக்கத்தொடரவும், அல்லாதவர்கள் விலகிச்செல்லலாம்.

காமம் என்பது வாழ்வின் மூலாதாரம், நாம் காமத்திலிருந்தே பிறக்கிறோம், ஒவ்வொரு கலத்திலும் காமத்தின் பகுதி கலந்தே இருக்கிறது. காமத்தினை மறுப்பவன் தற்கொலை செய்வதற்கு ஒப்பான நிலையினை அடைகிறான். அவன் தனது வாழ்வின் உயிர்ப்பினை இழக்கிறான். சரி அப்படியானால் ஏன் காமம் தவறானதாக கருதப்படுகிறது, இதனை விரிவாக வேறொரிடத்தில் பார்ப்போம். இங்கு காமத்தினைப்பற்றிய பொதுவான அணுகுமுறை பற்றி பார்ப்போம்.

எம்மெல்லோருக்கும் வாழ்வில் தவிர்க்கமுடியாத, அர்த்தமுள்ள, முக்கியத்துவமான விடயம் என்பது தெளிவாக தெரிந்திருக்கிறது. ஆனால் அனைவரும் காமத்தினை தனிப்பட அணுகும் போது இரு தவறான அதீத அணுகுமுறையினை கடைப்பிடிக்கிறோம். முதலாவது அதீத அடக்கல், இதன் மூலம் அதன் மீதான இயற்கைக்கு மாறான விருப்பம் அதிகரிக்கிறது. இதற்கு உதாரணமாக ஒஷோ மேலை நாட்டு கிருஸ்தவ கலாச்சாரத்தினை கூறுகிறார். கிருஸ்தவத்தின் முதன்மை அணுகுமுறை உலகின் இயல்பான நிலவரத்தினை பாவமாக பார்ப்பதன் மூலமே கட்டமைக்கப்படுகிறது. இப்படி அதீதமாக பாவமாக்கப்பட்ட காமம், பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் அடக்கப்பட்டு, அதன் நிரம்பு நிலையினை அடைந்த பின்னர் வெளிபடும் நிலை இதன் மற்றைய எல்லையான அதீத காமத்தினை கட்டுப்பாடு இன்றி அனுபவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இப்படி அடக்கப்பட்ட காமம் சந்தர்பம் கிடைக்கும் போது சமூக நியதிகளையும் மீறி அனுபவிக்கும் நிலைக்கு செல்கிறது, இதற்கு அண்மையில் உலகையே குலுக்கிய டெல்லி சம்பவம் ஒரு உதாரணம். இப்படி தவறாக அடக்கப்படும் காமத்தாலும், அது வெளிப்படுவதால் ஏற்படும் பாதிப்பினாலே இன்றைய பெரும்பாலும் பல காமம் சார்ந்த பாலியல் பிரச்சனைகள் உருவாகின்றது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

இந்த இரு நிலைகளும் ஏற்படுவதற்கு காரணம் காமத்தினைப்பற்றி குறித்த மனதில் கட்டியெழுப்பபட்ட தவறான எண்ணங்களே காரணம், காமம் தவறு என்று மனதிற்கு போதிக்கப்படுகிறது, அது வலுவாக சித்தத்தில் இருக்கும் போது சாதாரணமாக மனதில் எழும் காம எண்ணமே மனதினை பலமாக தாக்குகிறது. ஆகவே காமம் தவறானது என்ற எண்ணம் மனதிலிருந்து களையப்படவேண்டும். காமம் எமக்கு தேவையான ஒன்று, இன்பம் பயப்பது, மனித குலம் உலகில் நிலைத்து நிற்க தேவையான அடிப்படை அமிசம் அது என்ற புரிதல் ஏற்பட வேண்டும். காமத்தின் அடிப்படை மனிதனின் பேரன்பிற்கான ஊற்று என்பதனை புரிதல் வேண்டும். அன்பு இல்லாத காமம் அழகற்றது, ஆபத்தானது. அன்பின் அடிப்படையில் உருவாகும் காமம் மட்டுமே நம்பிக்கை, நேர்மை மற்றும் ஏற்கக்கூடிய காமமாக இருக்கும். காமத்தின் இந்த அடிப்படையினை சரியாக விளங்கிகொள்ளாது காமம் வேறு அன்பு வேறு, என்று நினைப்பதனால் காமத்தின் முழுமையான அமைப்பினை ஏற்க மறுக்கிறோம். காமம் என்பது எம்மில் அன்பினை முழுமையடையச் செய்ய இருக்கும் அடிப்படை விதையாகும். ஆக காமம் விதை என்றால் அன்பு அதிலிருந்து உருவாகும் விருட்சம் என்பதனை புரிதல் வேண்டும்.

காமத்தின் இரகசியம் இன்னும் தொடரும் ....

4 ஜூலை, 2020

காம ரகசியம்

மன்மதனின் காமத்தை பேரின்பமாக்கும் வித்தையின் இரகசியம்



காமம் என்பது மனிதன் பேரின்பம் பெறுவதற்கான திறவுகோல். இதன் அடிப்படையிலேயே ரதி மன்மதன் சாதனை ஸ்ரீ வித்தையில் உள்ளது. இதன் அடிப்படையினை புரிந்துகொண்ட சாதகன் காமத்தினை விலக்காமல் உயர்ந்த யோக சக்தியாக்கி கொள்ளமுடியும். இதற்கு உடல், மனம், பிராணன் ஆகியவற்றை பற்றிய சூக்ஷ்ம புரிதல் அவசியம். இங்கு இதன் சுருக்க இரகசியங்களை விளக்குகிறேன்! இந்த அடிப்படையிலேயே சித்தர்களது ஸ்ரீ வித்தை இரகசியங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.








1. சிவத்திலிருந்து பிரிந்து வந்த மூலசக்தி பிரகிருதி எனப்படும். இந்த மூலசக்தி அண்டத்திலும் பிண்டத்திலும் பிராணனாக வியாபித்திருக்கிறது. இந்த பிராணன் இயங்கும் தன்மையுடைய சக்தியாகும். ஆணின் மனித உடலில் மூலசக்தி சிவமான விந்து எனப்படும் ஸப்த தாதில் உறைந்துள்ளது. இந்த விந்துவே அண்டத்தில் சிவம் எனப்படும் பிந்துவின் பிண்ட வடிவமாகும். பிரஞ்சத்தின் மூலவடிவம் மூலப்பிரக்ருதியும் சிவமும் இணைந்த வடிவமாகும். ஆனால் மாயா சக்தியின் ஆற்றலால் சிவமும் சக்தியும் பிரிந்த நிலையிலேயே அண்டமும் பிண்டமும் காணப்படுகிறது. இந்த இணைப்பே யோக சாதனை, ஞான சாதனை, முக்தி, பேரின்பம் என அழைக்கப்படுகிறது. ஆக அண்டத்திற்கு மூலமான சிவம் ஆணின் மனித உடலில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்து ஆகவும், பிராணன் ஆகவும் இருக்கிறது. இதனை ஆன்மா என்ற உணர்வுடன் இணைக்கத்தெரிந்தால் முக்தி கிடைக்கும் என்பதே இதன் அடிப்படை. இதுவே மூல சக்தி நிலை எனப்படுவது.

2. காமசக்தி பௌதீகமாக மனித இனத்தை விருத்தி செய்வதற்கும், மனததளத்தில் பெண்ணுடன் காதல் எனும் இன்ப உணர்வினை பெறுவதற்கும், அடிப்படை ஆக்க சக்தி – கிரியா சக்தி பெறவும் உதவுகிறது. அண்டத்தில் எல்லா காரியமும் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருக்கும் கிரியா சக்தி பிண்டத்தில் காம சக்தியாக இயங்குகிறது.

3. காமத்தினை தனது பெண் துணையுடனோ அல்லது தனியாகவோ பிராணனுடன் இணைத்து ஆன்மாவில் சேர்க்கத் தெரிந்தால் அதுவே முக்தி! பேரின்பம்.

4. ஆணில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்துவே சக்திக்கான மூலமாகும். ஆணின் விந்து என்பது சப்தாதுக்கள் ஒன்றின்பின் ஒன்றாகிய சாரமாகும். இதனை அளவுக்கு அதிகமாக வீணாக்கும்போது அது மனிதனது நோய் எதிர்ப்பு சக்தி தொகுதியிலிருந்தும் நாளமில்லா சுரப்பி தொகுதியிலிருந்து தனது செலவீனத்தை ஈடு செய்து கொள்கிறது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் பாதிக்கும் நிலை ஏற்படும்.

5. விந்தினை வீணாக்காமல் சேமிப்பதே முதல் படியாகும். தனது சந்ததியினை உருவாக்குவது தவிர்ந்து விந்தினை வீணாக்குவது பெரும் மதிப்புமிக்க செல்வத்தை வீணாக்குவது என்று ஆயுள்வேத, சித்த மருத்துவ நூற்கள் கூறுகின்றன. இப்படி நீண்டகாலத்திற்கு வீணாக்கப்படும் விந்து சக்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இல்லாதாக்குவதுடன் மனம் உணர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை பொதுவாக காரணமின்றி பெண்களை வெறுப்புணர்வுடன் பார்த்தல், வக்கிரமான மனநிலை, பயம், பதட்டம் என்பவற்றை உருவாக்கும். மேலும் ஆன்மீக சாதனையில் முன்னேறி செல்லும்போது உருவாகும் அமிர்தம் எனப்படும் தெய்வீக கிரணங்களை உடல் ஏற்க முடியாத நிலை ஏற்படும். இதனாலேயே யோக சாதனையில் விந்து கட்டுப்பாடு முக்கியமான ஒன்றாக கூறப்பட்டுள்ளது.

6. இதற்காக விந்தினை பலவந்தமாக இயற்கைக்கு மீறி அடக்குதலும் வீணாக்குவதால் ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது ஆரம்ப நிலையில், விந்தினை உயர்ந்த தெய்வீக சக்தியாக மாற்றும் உத்தி தெரியாமல் அதீதமாக அடக்குவதும், வீணாக்குவது இயற்கைக்கு மாறான ஒன்று. அதாவது நெல்லினை விதைத்து தக்க பருவத்தில் அறுவடை செய்து, மீண்டும் விதைக்கு நெல்லினை சேமிப்பதுடன், குத்தி அரிசியை சோறாக்கி காய்கறியுடன் சுவையாக உண்பதனை உதாரணமாக கொள்ளவும்.

7. காமம் இயற்கையானதும், அனைவருக்கும் தேவையானதும், ஆரோக்கியமான ஒன்றுமாகும். இதனை வெறுமனே மேலோட்டமாக விந்து நீங்கி உடல் சார்ந்த இன்பமாக அனுபவிப்பதை விட உயர்ந்த பேரின்பமாக விந்தினை நீக்காமல் எப்படி அனுபவிப்பது என்பதனை அறிவதே இந்த யோகத்தின் இலக்காகும்.

8. சேமித்த விந்தினை பிராணனுடன் இணைத்தல் இரண்டாவது படியாகும். உடலுறவின் உச்சகட்டத்தில், விந்து நீக்கம் நடைபெறுவதற்கு முன்னர் விதைப்பையில் இருக்கும் விந்திலிருந்து பிராண சக்தி விரிவடைந்து உடலின் மேல் சக்தி மையங்களுக்கும், நரம்புகளுக்கும் பரவத்தொடங்கும். இதுவே இன்ப உணர்ச்சியினை ஏற்படுத்துவது. இந்த சக்தி நிறைவு மேல் சக்கரங்களில் நிறைவதற்கு முன்னர் விந்தானது குறியினூடாக வெளியேறி ஆணிற்கு உயர்ந்த பேரின்ப உணர்ச்சியினை இல்லாமல் செய்துவிடுகிறது. இதனையே வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைத்தல் என்று சித்தர்கள் குறிப்பிட்டார்கள். இந்த நிலையினால் மனிதன் சாதாரண உடல் சார் இன்பத்துடன் தனது காமத்தினை முடித்துக்கொள்கிறான்.

9. இதுவே மூலப்ரக்ருதி எனப்படும் மாயையின் விளையாட்டு. ஆணின் உடலில் பேரின்பத்தினை பெறகூடிய அமைப்பினையும் வைத்து, அது வீணாகுவதற்குரிய ஓட்டையினையும் வைத்திருக்கிறது. இப்படி வீணாக்காமல் இருக்க அவன் மேலே சக்தி செல்லும் பாதைகளை திறக்கவேண்டும். அத்துடன் இயற்கையாக வீணாகும் பாதையான குறியினூடாக வீணாகாமல் காப்பாற்றுவதற்கு பெண்ணின் துணை தேவைப்படுகிறது. இங்கு வியப்பான விடயம் என்னவென்றால் இயற்கையாக ஆணினின் சக்தியை மாயைக்கு உட்பட்டு வீணாகும் பெண்ணே ஆண் முன்னேறுவதற்கும் காரணமாக இருக்கிறாள் என்பதே. இதுவே ஆவது பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதன் விளக்கம்.

10. பெண்ணின் துணை கொண்டு அல்லது தனியாகவோ ஓரு ஆண் விந்துடன் தனது பெண் சக்தியான பிராண சக்தியை இணைத்து தனது நாடிகள் எனப்படும் சூக்ஷ்ம சக்தி ஓட்டப்பாதைகள் மூலம் விந்தினை மேலெழும்பி சக்கரங்கள் எனக்கூறப்படும் ஆறு ஆதாரங்களில் சேமித்து வைக்கலாம். இந்த சக்தி சேமிப்பு முக்தி என்ற இறுதி நிலை அடைவதற்கு முன்னரான உலக, ஆன்மீக, சூக்ஷ்ம உலக வாழ்க்கையில் இன்பமாக வாழ்வதற்குரிய ஆற்றல், இன்பம் ஆகியவற்றை தரும்.

11. மூன்றாவதாக நிலை, இப்படி சேமிக்கப்படும் விந்து – பிராண சக்திகளில் ஆண் (சிவம்) பெண் (சக்தி) சக்திகளை எப்போதும் சமமாக வைத்திருக்கும் உத்திகளை கற்றல். இதனை தனியே பயிற்சிக்கும் ஆண் தியான சாதனையின் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் பெண் சக்திகளை சுழற்சிப்படுத்துவதன் மூலமும், தம்பதியினர் ஒருவர் ஒருவரிடையே பரிமாற்றி சுழற்சிப்படுத்துவதன் மூலமும் சாதிக்கலாம். இப்படி ஒரு ஆணும் பெண்ணும் தமது சக்திகளை பரிமாற்றி வளர்த்தெடுத்தால் அது உடற்கவர்ச்சி சார்ந்த காமமாக இருக்காமல் உயர்ந்த காதலாகவும், அன்பாகவும் மாறி, ஒருவருக்கு ஒருவன் மானசீகமாகவும், ஆத்மார்த்தமாகவும், உதவும் ஆன்ம விழிப்பினையும் பேரின்பத்தையும் தரும். இதுவே சிவசக்தி ஐக்கிய ரூபிணி என்ற நிலை. இந்த நிலை அடைந்தால் குடும்பம் அமைதி, அன்பு, வாழ்க்கையின் நோக்கம் என்பன மிக ஆழமான சமநிலையினை அடையும். இந்த ஆண் பெண் காம மையங்களின் சமநிலையே ஆண் பெண்களுக்கிடையிலான உண்மை சமநிலை, ஆண் பெண்ணை போட்டியும் துன்பமும் தருபவளாகவும், தனது வலிமையினை இழக்க செய்பவளாகவும் கருதாமலும், பெண் ஆணை ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தனது உடல் மீது வன்முறை புரிபவனாகவும் இல்லாமல் ஆண் பெண்ணிற்கு பேரின்பம் தருபவனாகவும், பெண் ஆணிற்கு பேரின்பம் தருபவளாகவும் மாறும் நிலையினை இந்த யோகம் தரும்.

12. பொதுவாக காமத்துடன் யோகம் சொல்லித்தருகிறோம் என்றவுடன் அனைவரும் ஏதோ மூன்றாம்தர நீலப்படம் பார்க்கப்போகிறோம் என்ற உண்டர்வுடனும், தமது காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் மணிக்கணக்கில் உடலுறவு செய்யலாம் என்ற எண்ணத்துடனும் வருகிறார்கள். ஆனால் இதன் உண்மை அர்த்தம் வேறாக இருக்கிறது. இயற்கை காமத்தை வெறும் உடல் இன்பத்துடன் பூர்த்தி செய்து உயர்ந்த சூக்ஷ்ம பேரின்பத்தை பெறவிடாமல் தடுக்கிறது. இதிலிருந்து விடுபட்டு சிவமாகிய விந்தினை பிராணனாகிய சக்தியுடன் இணைத்து மூலசக்தியான சிவசக்தி ஐக்கிய ரூபத்தை அடைவதே இந்த யோகத்தின் குறிக்கோள். இந்த பாதையில் காமத்தினை கையாளுவது என்பது ஒரு சிறு படி மாத்திரமே. இதனை ஒரு பெரிய விடயமாக மன எழுச்சியுடன் பார்த்து அடைய வேண்டியதை அடையாமல் போய் விடக்கூடாது என்பது ஒளி நிலையடைந்த சித்தர்களின், ரிஷிகளின் விருப்பம்.

13. அடிப்படையில் ஒருவனுடைய விந்து, பிராணன், ஆன்ம சக்திகள் ஒருங்கிணைந்தால் அவன் ஒருவித சமநிலையில் இருப்பான். இந்த சமநிலை அவனுக்கு இன்பத்தினையும், தான் முழுமையாக இருப்பதான மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

14. எப்போதும் ஆழமான காதலற்ற உடலுறவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஸ்தூல, சூக்ஷ்ம, காரண ஸரீரங்களில் ஒருவித சமநிலை இன்மையினை தோற்றுவித்து அவர்களின் ஆன்ம, உள, பிராண வளர்ச்சிகளை குழப்பி பாதித்துவிடும். பெண் எப்போதும் தனது காதலனிடம் சிறுபிள்ளைத்தனமான அன்பினை எதிர்பார்ப்பவள், ஆனால் பொதுவாக ஆண் ஒருவித இயந்திர தனமாக கையாள்பவனாக இருப்பான். இருவரும் உயர் நிலை அடைவது என்பது பெண்ணின் முழுமையான பங்களிப்பு இன்றி நடைபெறாது. பெண்ணிடம் நாதம் (ஆணின் விந்துவிற்கு நிகரான) சக்தி அதீதமாக காணப்படுகிறது. அதனை அவள் பிராணனுடன் கலந்து உயர்ந்த சக்தியாக்கி தருவாளேயானால் மட்டுமே ஆணின் ஆன்ம, மன வளர்ச்சி அதீதமான முன்னேற்றத்தை அடையும். இத்தகைய பெண்ணின் அன்பே ஆண் பெறக்கூடிய உயர்ந்த உறவாகும்.

15. இப்படி கூறியவுடன் பெண் ஒருத்தி இருந்தால்தான் இதனை செய்யமுடியும் என்று மனது மயங்கி வருத்தப்படாதீர்கள். ஆரம்பகால சாதனைக்கு பெண்ணில்லாமல் தனித்து இருந்து விந்தினை வெளியேறாமல் செய்யும் பயிற்சிகளை செய்வது மிக உசிதமானது. ஏனென்னில் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் பெண்களை பார்க்கும் போதும், நினைக்கும்போதும் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டு விந்தினை இழக்கும் படியே மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஆணை விட சக்தி வாய்ந்தவள், உறுதியற்ற ஆணிடம் சக்தியினை உறிஞ்சி எடுத்துவிடுவாள். மேலும் ஆணே தன்னை பயிற்சிப்படுத்தி கொள்ள வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே சக்தியை மேலே செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. மேற்கூறிய முறையில் சக்தியினை மேலேற்ற தெரிந்த ஆணுடன் உறவு கொள்ளும்போது இயல்பாகவே உள்ளுணர்வு மூலம் முயற்சி இன்றி பெண் தனது சக்தியை மேலேற்றும் தன்மையினை பெறுகின்றாள். எனினும் இந்த யோகத்தை பழகும் பெண்ணும் அடிப்படை விதிகளை, சக்தி மேலேற்றும் முறையினை தெரிந்து இருத்தல் வேண்டும். ஆகவே ஆண் பெண்ணாக ஆன்ம உயர்வு பெற முனையும் தம்பதியினர் கருத்தொருமித்து இந்த யோகத்தினை பயில வேண்டும்.

தொடர்புக்கு

அ.செந்தில்குமார்
மனவளக்கலை மன்ற பேராசிரியர், நச்சாந்துபட்டி (ஐயப்பன் கோயில் பின்புறம்)
புதுக்கோட்டை மாவட்டம் 
தமிழ்நாடு 622 404.


செல் - 96554 72931

4 மார்., 2020

இரண்டாம் நிலை அகத்தாய்வு


இரண்டாம் நிலை அகத்தாய்வு

திருமயம் அறிவுத்திருக்கோயிலில் அகத்தாய்வு இரண்டாம் நிலை 29-02-2020 சனி & 01/03/2020 ஞாயிறு நடைபெற்ற நிகழ்வு.
வாழ்க வளமுடன்

                             





                              




                              




துரியாதீத தவம் - பலன்கள்


துரியாதீத தவம்

1. பொறுமை, விட்டுக் கொடுத்தல், ஈகை ஆகிய மூன்று பண்புகள்
குண்டலினியோகிகட்குத் தானாக அமையும். (Tolerance, Adjustment & sacrifice).
2. இயற்கையின் மறைபொருள்களை உணர முடியும்.
3. மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் ஆகிய உருவ அமைப்பு, குணம்,
அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல
நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.
4. வினைப்பதிவுகளை மாற்றுகிறது.
5. மனதின் மறுமுனையான தன்னைத் தெய்வத்தோடு இணைக்கிறது.
6. தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், வேண்டாப்பற்று என்று
கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.
7. யோகிகள் பற்றறிவினின்று விடுபட்டுக் கற்றறிவில் ஈடுபட்டு முடிவில் முற்றறிவில்
லயம் ஆவர்.
8. பிரவிருக்தி மார்க்கத்தினின்று விடுபட்டு நிவர்த்தி மார்க்கத்திற்கு ஈர்க்கிறது.
9. புலனடக்கம் உண்டாகி அறிவு அமைதியடையச் செய்கிறது.
10. பிரம நிலையான உண்மை அறிவதற்கு நுண்மையறிவு ஏற்படச் செய்கிறது.
11. எல்லை கட்டிய தன்மையினின்று விடுபடச் செய்கிறது.
12. பகுதி அறிவு ஆனது முழுமையை நோக்கிப் பயணம் ஏற்க உதவுகிறது.
13. மனம் ஓடாது, தன்னை மறவாது மனதைப் பயிற்சிப்படுத்த வேண்டும்.
மனமே செயல்படும்.
14. எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும் நன்மையே
விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.

பழிச்செயல் நீக்கம்
பிராயச்சித்தம், மேல்பதிவு, அடியோடு அழித்தல் (Expiation, superimposition & dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக்கொள்ள மூன்று வழிகள் உள்ளன. ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரிய நிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் நீங்கும்.

சமாதிநிலை
ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே, அடைவதற்காகவே, விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை; வேகமோ குறையவில்லை; ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது, துன்புறுகிறது. ஆனால், தன் லட்சியத்தை அடையும் வரை மனத்தின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மூலத்தை அடைந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிடைக்கிநது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை. 

தன் மூலத்தை அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும், துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (expiation, superimposition and dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன். அவற்றில் கடைசியான தேயத்தழித்தல் என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும். 

ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத்தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும். துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் (frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை.


                                                                                           யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

10 ஜன., 2020

கலிக்கம் என்னும் கண் சொட்டு மருந்து முகாம்


கலிக்கம் என்னும் கண் சொட்டு மருந்து முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய சித்தமருத்துவர் கயிலை முத்துகிருஷ்ணன் ஐயா அவர்களால் (சித்த மருத்துவம்) கண்களில் ஊற்றப்பட்டு வருகிறது அதன் நிகழ்வுகள்.


























  

7 ஜூன், 2019

குண்டலினி யோகம்




நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?

காப்பு¸ தூய்மை¸ ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.

உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.

ஐம்புலன்கள்¸ கை¸ கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம். தூங்குகிறோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு¸ தூய்மை¸ ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு¸ தூய்மை¸ ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

இவற்றை விழிப்பாற்றல்¸ தற்சோதனை¸ தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.

மறதியும் - விழிப்பும்

எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக - பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய¸ பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே பேரியக்க மண்டலமாக (Universe) விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.
உயிரினங்களில் பரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். பேரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம்¸ ஒலி¸ ஒளி¸ சுவை¸ மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும்¸ இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.

உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான். தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு¸ தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.

இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு¸ பேராசை¸ சினம்¸ கடும்பற்று¸ முறையற்ற பால் கவர்ச்சி¸ உயர்வு தாழ்வு மனப்பான்மை¸ வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில் தான் எண்ணம்¸ சொல்¸ செயல்¸ இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.

இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும்  இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும்¸ சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.

ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும். எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவு (Impressions Of Deeds) களாகும்.

இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது. பிணக்கும்¸ பகையும்¸ போட்டியும்¸ போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக்கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.

உலகில் அமைதி நிலவவேண்டுமெனில்¸ மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில்¸ தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும். தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட¸ உயிரணுக்களில் பதிவாகியிருக்கும்¸ தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins) போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு¸ தூய்மை¸ ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும்¸ சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம்¸ சொல்¸ செயல்¸ பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.

தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும்¸ பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள். இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி¸ உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.

காப்பு¸ தூய்மை¸ ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம். உயிர் தூய்மைக்கான பக்தி நெறி¸ ஞான நெறி¸ இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு¸ இயக்கம்¸ விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.

பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம்¸ உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும்.இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.

மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில்¸ இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று.

உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும். உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினியோகம்.

உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள். நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதிஷ்டானம் எனும் நீர் மையத்தையும்¸ மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும்¸ அனாகதமெனும் காற்று மையத்தையும்¸ விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.



My Photo
எளிய முறை

குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ¸ செயலோ¸ பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி¸ செயல்¸ இன்ப துன்ப விளைவுகள்¸ அனுபோகம்¸ அனுபவம்¸ தெளிவு¸ முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.


ஆக்கினைச் சக்கரம்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை¸ சினம்¸ கடும்பற்று¸ முறையற்ற பால்வேட்பு¸ உயர்வு தாழ்வு மனப்பான்மை¸ வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம்¸ ஒலி¸ ஒளி¸ சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம்¸ மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

சாந்தியோகம்

ஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை அண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும்.


துரிய நிலை

ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.

தற்சோதனை

துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும். எண்ணம்¸ சொல்¸ செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து நான் யார்? என்று தெரிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம்¸ கடமை¸ ஈகை¸ உயிர் விளக்கம்¸ மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.

துரியாதீதம்

தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். இதனைச் சமாதியென்றும்¸ சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.

முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம். உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள்¸ வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியே குண்டலினியோகம்.

சமுதாயச் சீர்திருத்தம்

உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி¸ ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில்¸ மயக்கநிலையில் தான் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும்¸ வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம்¸ ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.

பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும்¸ உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.

இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள். இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.

நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன். இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.


இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை.

1. ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.
2. இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.
3. பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.
4. ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.
5. ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.


இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள். இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.


தொடர்புக்கு

அ .செந்தில் குமார் 
மனவளக்கலை மன்ற பேராசிரியர்
நச்சாந்துபட்டி  தவமையம் (ஐயப்பன் கோயில் பின்புறம்)
புதுக்கோட்டை மாவட்டம்¸
தமிழ் நாடு¸ இந்தியா 

செல் - 96554 72931