5 ஜூலை, 2020

காம ரகசியம் - 01 ஒரு விழிப்புணர்வு பதிவு




காம ரகசியம் - 01 ஒரு விழிப்புணர்வு பதிவு

இதனை வாசிப்பவர்கள் ஒரு வெளிப்படையான திறந்த மனதுடன் இவற்றை அணுகும்படி வேண்டப்படுகின்றனர், அல்லாது கீழ்ப்படுத்தப்பட்ட பாலுணர்வு தொடர்பான ஆக்கங்களோ அல்லது அப்படியான உணர்வினை இட்டுச்செல்லும் வகையிலான தகவல்கள் எதுவும் இங்கு இருக்காது. எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் காமத்தினை பற்றிய வெளிப்படையான, ஆழமான புரிதலைப்பெறுதலே இந்த கட்டுரைத்தொடரின் நேக்கமாகும், இதனை ஒத்த மனதுள்ளவர்கள் இதனை வாசிக்கத்தொடரவும், அல்லாதவர்கள் விலகிச்செல்லலாம்.

காமம் என்பது வாழ்வின் மூலாதாரம், நாம் காமத்திலிருந்தே பிறக்கிறோம், ஒவ்வொரு கலத்திலும் காமத்தின் பகுதி கலந்தே இருக்கிறது. காமத்தினை மறுப்பவன் தற்கொலை செய்வதற்கு ஒப்பான நிலையினை அடைகிறான். அவன் தனது வாழ்வின் உயிர்ப்பினை இழக்கிறான். சரி அப்படியானால் ஏன் காமம் தவறானதாக கருதப்படுகிறது, இதனை விரிவாக வேறொரிடத்தில் பார்ப்போம். இங்கு காமத்தினைப்பற்றிய பொதுவான அணுகுமுறை பற்றி பார்ப்போம்.

எம்மெல்லோருக்கும் வாழ்வில் தவிர்க்கமுடியாத, அர்த்தமுள்ள, முக்கியத்துவமான விடயம் என்பது தெளிவாக தெரிந்திருக்கிறது. ஆனால் அனைவரும் காமத்தினை தனிப்பட அணுகும் போது இரு தவறான அதீத அணுகுமுறையினை கடைப்பிடிக்கிறோம். முதலாவது அதீத அடக்கல், இதன் மூலம் அதன் மீதான இயற்கைக்கு மாறான விருப்பம் அதிகரிக்கிறது. இதற்கு உதாரணமாக ஒஷோ மேலை நாட்டு கிருஸ்தவ கலாச்சாரத்தினை கூறுகிறார். கிருஸ்தவத்தின் முதன்மை அணுகுமுறை உலகின் இயல்பான நிலவரத்தினை பாவமாக பார்ப்பதன் மூலமே கட்டமைக்கப்படுகிறது. இப்படி அதீதமாக பாவமாக்கப்பட்ட காமம், பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் அடக்கப்பட்டு, அதன் நிரம்பு நிலையினை அடைந்த பின்னர் வெளிபடும் நிலை இதன் மற்றைய எல்லையான அதீத காமத்தினை கட்டுப்பாடு இன்றி அனுபவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இப்படி அடக்கப்பட்ட காமம் சந்தர்பம் கிடைக்கும் போது சமூக நியதிகளையும் மீறி அனுபவிக்கும் நிலைக்கு செல்கிறது, இதற்கு அண்மையில் உலகையே குலுக்கிய டெல்லி சம்பவம் ஒரு உதாரணம். இப்படி தவறாக அடக்கப்படும் காமத்தாலும், அது வெளிப்படுவதால் ஏற்படும் பாதிப்பினாலே இன்றைய பெரும்பாலும் பல காமம் சார்ந்த பாலியல் பிரச்சனைகள் உருவாகின்றது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

இந்த இரு நிலைகளும் ஏற்படுவதற்கு காரணம் காமத்தினைப்பற்றி குறித்த மனதில் கட்டியெழுப்பபட்ட தவறான எண்ணங்களே காரணம், காமம் தவறு என்று மனதிற்கு போதிக்கப்படுகிறது, அது வலுவாக சித்தத்தில் இருக்கும் போது சாதாரணமாக மனதில் எழும் காம எண்ணமே மனதினை பலமாக தாக்குகிறது. ஆகவே காமம் தவறானது என்ற எண்ணம் மனதிலிருந்து களையப்படவேண்டும். காமம் எமக்கு தேவையான ஒன்று, இன்பம் பயப்பது, மனித குலம் உலகில் நிலைத்து நிற்க தேவையான அடிப்படை அமிசம் அது என்ற புரிதல் ஏற்பட வேண்டும். காமத்தின் அடிப்படை மனிதனின் பேரன்பிற்கான ஊற்று என்பதனை புரிதல் வேண்டும். அன்பு இல்லாத காமம் அழகற்றது, ஆபத்தானது. அன்பின் அடிப்படையில் உருவாகும் காமம் மட்டுமே நம்பிக்கை, நேர்மை மற்றும் ஏற்கக்கூடிய காமமாக இருக்கும். காமத்தின் இந்த அடிப்படையினை சரியாக விளங்கிகொள்ளாது காமம் வேறு அன்பு வேறு, என்று நினைப்பதனால் காமத்தின் முழுமையான அமைப்பினை ஏற்க மறுக்கிறோம். காமம் என்பது எம்மில் அன்பினை முழுமையடையச் செய்ய இருக்கும் அடிப்படை விதையாகும். ஆக காமம் விதை என்றால் அன்பு அதிலிருந்து உருவாகும் விருட்சம் என்பதனை புரிதல் வேண்டும்.

காமத்தின் இரகசியம் இன்னும் தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக