6 ஜூலை, 2020

காம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா?


காமத்தின் மீதான வெறுப்பு சரியா?


ஓஷோவிடம் ஒருமுறை ஒரு பெண் " நான் எனது கணவரை மனதார நேசிக்கிறேன், ஆனால் காமத்தினை வெறுக்கிறேன், இதனால் எனக்கும் கணவருக்குமிடையில் முரண்பாடு உண்டாகிறது இது ஏன்?" என வினாவினார், அதற்கு ஓஷோவின் பதில் இவ்வாறு இருந்தது.

நீங்கள் வார்த்தையினால் விளையாடுகிறீர்கள், அது எப்படி உங்கள் கணவரை விரும்பிக்கொண்டு காமத்தினை வெறுக்கமுடியும். முதலில் இதன் அடிப்படையினை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். ஒரு ஆணை விரும்பும் போது நீங்கள் அவனது கையினை பிடித்துக்கொண்டு நடக்க விரும்புகிறீர்கள், அவனை அடிக்கடி காண விரும்புகிறீர்கள், அவனை கட்டியணைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள், அவனது குரலை அடிக்கடி கேட்க விரும்புகிறீர்கள், அதுமட்டுமல்ல அவனை பார்க்கத் தவிக்கிறீர்கள், அவன் தூர இடத்திற்கு செல்லும் போது அவனது குரலை மட்டும் கேட்பதில் திருப்தி இல்லாது அவனைக் கண்டவுடன் மட்டுமே மனம் அமைதி பெறுகிறது.

அவனை தொடுவதன் மூலம், அவன் உங்களை தொடுவதன் மூலம் உங்களுக்கு இன்பம் உண்டாகிறது, அதைவிட முத்தமிடும்போது இன்னும் இன்பம் உண்டாகிறது. ஆக காமம் என்பது இரு எதிர்துருவங்கள் ஆழமாக தமது சக்திகளை கலக்கும் செயல்முறையே ஆகும். காமம் என்பது தனியே ஒருவரின் கையினை கோர்த்துக்கொண்டு உடல்களை இணைக்கும் செயல்முறை மட்டுமல்ல, அது ஒரு ஆழமான சக்திப்பரிமாற்ற நிகழ்வாகும். இத்தகைய உன்னதமான விடயம் எப்படி தவறானதாக இருக்க முடியும்.

உங்களுடைய பிரச்சனை உங்கள் மனதில் உள்ளது, உங்களது மனதிற்கு காமத்தினைப்பற்றி தவறாக பரப்பபட்ட எண்ணங்களினால் அதனை தவறாகவே பார்க்கப் பழகியுள்ளீர்கள். உங்களுடைய மனது உங்கள் மதத்தலைவர்களினால் கட்டமைக்கப்படுகிறது, இந்த மதவாதிகள் முழு மனிதகுலத்தினையும் மதத்தின் பெயரால் நச்சாக்கி உள்ளார்கள்.

அவர்கள் வாழ்வின் வளர்ச்சியின் அடிப்படை உயிர் நாதத்தினை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள். இத்தகைய விஷ எண்ணத்தினை ஏன் நீங்கள் ஏற்றுக்கொண்டு ஏன் காமத்தினை வெறுக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆணை விரும்பினால் அவனுடன் உங்களை முழுமையாக பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் வெறுப்பிற்கு இடம் கொடுக்காதீர்கள். காமத்தினை வெறுக்கிறேன், ஆனால் அவனை நேசிக்கிறேன் என்றால் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள், நான் உனது பணத்தினை நேசிக்கிறேன், உன்னுடைய வீட்டினை நேசிக்கிறேன், உன்னுடைய கார் எனக்கு பிடித்திருக்கிறது, இதன் மூலம் அவனை பயன்படுத்திக்கொள்கிறீர்கள், பின்பு அதனை அன்பு காதல் என மூலாம் பூசுகிறீர்கள்.

நீங்கள் அன்பு செலுத்தும் போது எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வீர்கள், அன்பு செலுத்தும்போது ரகசியங்கள் எதுவும் இருப்பதில்லை, அன்பு செலுத்தும் போது உங்கள் இதயம் முழுமையாக திறந்திருக்கும். நீங்கள் ஒருவர் மீது அன்பு செலுத்தும் போது அந்த நபருடன் நரகத்திற்கும் செல்வதற்கு தயாராக இருப்பீர்கள், ஆனால் நாம் வார்த்தைகளை தந்திரமாக உபயோகிப்போம். நாம் அன்பு செலுத்தவில்லை என்று நேராக கூறமாட்டோம், ஏனெனில் உண்மையான அன்பு மேலே கூறிய பண்புகளை உடையது, அதனை ஏற்க தயாரில்லாமல் அன்பின் வரைவிலக்கணத்தை வார்த்தைகளால் மாற்ற முயற்சிப்போம். அதுபோலான வார்த்தை ஜாலமே நீங்கள் கூறும் "நான் நேசிக்கிறேன் ஆனால் காமத்தினை வெறுக்கிறேன்" என்பது.

காமம் என்பது அன்பு இல்லை என்பது உண்மை, அன்பு காமத்தினை விட மேலான ஒன்று, ஆனால் காமம் அன்பின் அடிப்படைகளில் ஒன்று, ஆம் ஒரு நாளைக்கு காமம் முற்றாக மறைந்து அன்பு மட்டுமே இருக்கப்போகிறது, ஆனால அது காமத்தினை வெறுப்பதினால் நடந்து விடாது.

காமத்தின் மீதான வெறுப்பு என்பது அதனை வலிந்து அடக்கும் ஒரு செயல்முறையாகும். இப்படி அடக்கப்படும் ஒரு விடயம் கட்டாயம் வேறொரு விதத்தில் வெளிப்படவே செய்யும். இந்தப்பயத்தில் துறவினை ஏற்றுக்கொண்டு இறை சேவை செய்கிறேன் என்று பயந்து ஓடாதீர்கள், காமம் என்பது இயல்பானது என்பதினை மனதில் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் நிச்சயமாக காமத்தினை கடந்து செல்லமுடியும் ஆனால் அதனை அடக்குவதால் நிச்சயமாக கடக்க முடியாது. இப்படி அடக்கினால் அது வேறொரு வழியில் வெளிப்பட காத்துக்கொண்டிருக்கும். அப்படி அடக்குவது ஒன்று சமூகத்திற்கு மாறான ஒழுக்க கேட்டினை உருவாக்கும், அல்லது அதன் மீதான் அதீத பைத்தியத்தினை உருவாக்கும். (இது எவ்வளவு பெரிய பேருண்மை இன்று கற்பழிப்புகள் அதிகரிப்பதற்கும், காமம் சார் திரைப்படங்களுக்கான வரவேறுபும் இந்த காரணத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்). நீங்கள் அதனைக்கடந்து செல்ல வேண்டும் என்றால் இயல்பாக அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே அதற்கான முதற் தகுதி!

இங்கு நான் குறிப்பிடும் எதுவும் இயல்புக்குமாறானதல்ல! இதுவே எல்லா தாந்திரிக முறைகளதும் சாராம்சம்! நீங்கள் வானத்திற்கு செல்லவிரும்பினால் முதலில் பூமியில் இயல்பாக இருக்கவேண்டும். அதுபோல் பேரன்பினை அடைய விரும்பினால் முதலில் அதன் அடிப்படையான காமத்தினை சரியான முறையில் அணுகவேண்டும்.

நீங்கள் மரத்தினைப் பார்த்ததில்லையா? அவை வளர்வதற்கு முதலில் நிலத்தில் ஆழமாக வேர்களை செலுத்துகின்றன, அது எவ்வளவு அதிகமாக உயரவேண்டுமோ அவ்வளவு ஆழமாக அது தனது வேர்களை பூமியினுள் செலுத்த வேண்டும். அதுபோல் நீங்கள் இந்த உடலில் உள்ளீர்கள் அதிலிருந்து ஆன்மாவினை உணர முயல்கிறீர்கள், அந்த நிலையில் ஆன்மா அடையக்கூடிய உச்ச நிலை அன்பு, அதனை அடைவதற்கு நீங்கள் ஆழமாக நிலைகொள்ளவேண்டிய வேர் காமம். நீங்கள் காமத்தினை அதிகமாக அன்பாக மாற்ற மாற்ற அது மெதுவாக மறையத்தொடங்க்கும். ஆனால் அதனை வெறுப்பதன் மூலம் அதனை செய்ய முடியாது.

வெறுப்பது என்பதனை எந்தவிதமான உறவிலும் இருக்க கூடாத ஒன்று, வெறுப்பு உண்டாகின்றதென்றால் அதன்மீது அளவுகடந்த விரும்பம் வைத்துள்ளீர்கள் ஆனால் அந்த விடயத்தில் உங்களுக்கு பயம் உள்ளது என்பதே காரணமாகும். இப்படியான நிலையில் காமத்தினை வெறுக்கும் போது உங்களிடைய சக்தி அது செல்லவேண்டிய பாதையிலிருந்து விலகி வேறு இடத்திற்கு செல்லத்தொடங்குகிறது (அதாவது காமத்தினை சரியான முறையில் ஏற்று அதனை அன்பாக மாற்றும் செயல்முறையிலிருந்து உங்கள் சக்தி விலகத்தொடங்கும்). அடிப்படையில் காமம் இறைவனால் கொடுக்கப்பட்ட புனிதமான ஒன்று, அதனை நாம் உயர்ந்த சக்தியினாக மாற்றிக்கொள்ளவேண்டியது எமது கடமை. கடவுளால் கொடுக்கப்பட்ட அனைத்தும் புனிதமானவையே, இங்கு கடவுள் எனும் போது அது குறித்த ஒரு நபரிணையோ, மத நம்பிக்கையினையோ குறிப்பதல்ல! இந்த பிரபஞ்சத்தின் முழு இருப்பையும் குறிக்கும்.காமத்தினை வெல்லவேண்டுமாயின்

காமத்தின் மீதான வெறுப்பினை இல்லாதாக்குங்கள்!

காம ரகசியம் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக