ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் விதம்
வசந்த காலத்தில் ஆண் குயில் கூவுகிறது. அது எதற்காக என்று நீங்கள் நினத்துப்பார்த்ததுண்டா? அது தனது காமத்திற்கான இணையினை தேடுகிறது. குயில் இவ்வாறு செய்வதனை யாரும் தவறு என்று கூறுவதில்லை. பூக்கள் ஏன் மலர்கின்றன? வாசத்தினை பரப்புகின்றன? அவை தம்மை விளம்பரபடுத்தி கொள்கின்றன, " நான் மலர்ந்து விட்டேன், என்னிடம் தேன் உண்டு, வாசம் உண்டு, வண்ணத்தி பூச்சிகளும், தேனீகளும் வரும்படி அழைக்கிறது. ஏன் அது தன்னிடம் உள்ள மகரந்ததினை பரப்பவேண்டும்.
இதைப்போல் மயில் தோகை விரித்தாடுவது எதற்காக? அப்படி வானவில் நிறமுடைய மயில் தோகை விரித்தாடும் மயில் ஆண் மயில் என்பதினை உணர்ந்திருக்கிறீர்களா? அது ஏன் ஆடுகிறது? பெண் மயிலினை கவர்வதற்காகவே! இயற்கையில் ஆண் இனம் எல்லாம் அழகானவையே, இயற்கையில் ஆண்தான் தன்னை நிரூபித்து பெண்ணை கவர வேண்டி உள்ளது. ஆனால் மனித இனத்தில் இந்த நிலை தலைகீழாக உள்ளது. பெண்ணே ஆணைக் கவர்கின்றாள். உண்மையில் பெண் தன்னை வேறுவிதத்தில் அழகுபடுத்த தேவையில்லாதவள். அவள் பெண்ணாக இருக்கும் போதே அழகாகி விடுகிறாள். ஆக மனிதகுலத்திலும் இயல்பில் ஆணே அழகாக இருக்கவேண்டியவன், அவனை நோக்கியே பெண் கவரப்பட வேண்டியவள்.
உதாரணமாக ஒரு பணக்காரர் தனது மனைவியுடன் வெளியே செல்லும் போது கவனித்தீர்கள் என்றால் தெரியும், மனைவியிற்கு பலவித அலங்காரம் செய்து, ஒப்பனைகள் செய்து அழகாக்கி காண்பவர் காணும் வண்ணம் தன் மனைவி அழகானவள் என விளம்பரப்படுத்தி செல்வார், இதன் உள்ளார்ந்த நோக்கம்தான் என்ன? தன் அழகான மனைவி மூலம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்கிறார். இது ஒரு வியாபார உத்தி! இந்த நிலையில் ஆண் அடிமையாகிறான், அவனுடைய அழகு, அவனுடைய செல்வம், அவனுடைய திறமை மறைக்கப்படுகிறது. எப்போது மனிதன் இயற்கை விதிகளை மீறி செயற்படுகிறானோ அதன் விளைவுகளை அவன் கட்டாயம் அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கும், அதில் இயற்கை எதுவித ஏற்றத்தாழ்வினையும் காட்டுவதில்லை.
இப்படியான அடிமைப்பட்ட தாழ்ந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஆணிற்கான ஒரேவழி தியானம் மட்டுமே! தியானித்தல் இல்லையென்றால் ஆண் தன் அழகை இழந்து பெண்பின்னால் பைத்தியம் ஆகத்தொடங்குகிறான். ஆனால் ஆணால் இலகுவாக தியானிக்க முடிவதில்லை, பெண் இருத்தி தியானிப்பதைவிட ஆண் தியானத்தில் அமர்வது மிகக்கடினம். நான்கு ஐந்து ஆண், பெண் பிள்ளைகள் பெற்ற தாய்மாரைக்கேட்டால் சொல்வார்கள் வயிற்றில் பெண் பிள்ளை இருக்கும் போது மிகவும் அமைதியாக இருக்கும், ஆனால் ஆண் பிள்ளை இருக்கும் போது அடிக்கடி தாயின் வயிற்றை கண்டபடி உதைத்தவண்ணம் இருப்பான்.
பெண் இலகுவாக ஆழமான தியானத்திற்கு செல்லக்கூடிய தன்மை உடையவள், அதேவேளை அவர்களுடைய காம சக்தி மறைத்தன்மை உடையது. அதனால் அவர்களை காமம் தூண்டி அதீத சக்தியினை வேறு திசையில் செலுத்துவதில்லை. இது ஒரு பெண் தன் பெண்தன்மையுடன் இருக்கும் போது மட்டுமே நிகழ்கிறது. இயற்கையில் அவர்களில் காம சக்தி அதிகரித்து அவர்களை அதீத காமத்திற்கு இட்டுச் செல்வதில்லை, அவ்வாறு அதிகரிக்கும் போது உடலியற் தொழிற்பாட்டினூடாக ஒவ்வொரு மாதமும் அவர்களின் அதிகரிக்கும் காம சக்தி வெளியேற்றப்பட்டு உடலும் மனமும் அமைதிப்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆண்கள் துறவறம் ஏற்று நீண்ட பிரம்மச்சரியம் இருப்பது மிக அரிதான விடயம், ஆனால் பெண் துறவிகள் இயல்பிலேயே பிரம்மச்சரியம் காப்பது இலகுவான ஒன்றாகும். ஏனெனில் இயற்கையில் பெண் தனது உடல் மூலம் காமசக்தியினை வெளியேற்றும், தியானம் இன்றியே இலகுவாக அடையும் தன்மையினை பெற்றுள்ளாள்.
ஆனால் ஆண் ஒருவனால் அப்படி இருக்க முடியாது. அவனுடைய காமசக்தியினை உயர்நிலைப்படுத்துவதற்கு ஆழமான தியானம் கட்டாயம் அவசியமான ஒன்றாகும். இப்படி காமசக்தியினை ஆழமான தியானத்தின் மூலம் உயர்சக்தியாக்காமல் ஆணால் பெண்ணிற்கு பின்னால் பைத்தியக்காரத்தனமாக காம இச்சையுடன் அலையாமல் இருக்க முடியாது.
காமம் என்பது ஆணின் மிகப்பெரிய தளை (கட்டுண்ட நிலை). இந்த நிலையினை அவிழ்க்க தியானத்தின் மூலம் முயலவேண்டும். இப்படி முயற்சிக்கும் போது ஆணின் காமசக்தி கீழ்முகமாக வீணாகமல் மேல் நோக்கிச் செல்லத்தொடங்கும். அழகான பெண்ணிற்காக அலையாமல் தியானத்தின் மூலம் அவன் தன்னுள் அழகாக ஆணினைப்படைக்க வேண்டும். ஆனால் இயல்பின் ஆண் பெண்ணை விட முட்டாள்! தன்னுடைய முட்டாள்தனத்தினை மறைக்க, தனது காம சக்தி கீழ்முகமாய் சென்று உலகத்தினை அழிவு நோக்கி செலுத்த ஆரம்பிக்கிறான். அப்படி உருவான பைத்தியக்காரத்தனத்தில் தான் உலக வரலாறு எழுதப்பட்டுள்ளது. உலக யுத்தங்கள், கற்பழிப்புகள், மற்றவரை அழித்தல் என்பவையெல்லாம் ஆணின் காமசக்தி கீழ் நோக்கி செலுத்தப்பட்டதால் வந்த வினைகளே!
ஆகவே தன்னை அறிந்துகொள்ள விளையும் ஒவ்வொருவரும் தமது காமசக்தி செயற்படும் முறையினை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம்!
காம ரகசியம் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக