இந்தப்பதிவுகள் காமத்தினை அடக்கி உடல், மன நோய்கள் அடையாமல் எப்படி யோகமாக்கி உயர்ந்த சக்தியாக பயன்படுத்துவது என்ற அறிவினை இந்தத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அறிவதற்காக வேண்டி பதிவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய சமூகத்தில் சரியாக படிக்காத சித்த வைத்தியர்களாலும், மேலைத்தேய சிந்தனையாலும் எமது முன்னோர்கள் கூறிய ஒழுக்கங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதில் சித்தர்கள் கூடிய விந்து, பித்தம் என்ற வார்த்தைகள் தற்கால நவீன மருத்துவக் கருத்துகளுடன் ஒப்பிட்டு பின்னர் அதன் மூலம் சித்தர் பாடல்களின் மருத்துவத்தின் பொருளினை நோக்கும் போது குழம்பி வந்த பெருங்குழப்பமே எஞ்சுகிறது.
உதாரணமாக பித்தம் என்றால் சித்த ஆயுள் வேதத்தில் கருதும் பொருள் வேறு, அதே தற்காலத்தில் கல்லீரலினால் சுரக்கப்பட்டு கொழுப்பினை சமிபாடடைய செய்யும் பித்தம் என்ற பொருளில் மட்டும் நோக்கினால் ஏற்படும் புரிதல் வேறு.
இப்படி தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட பொருள்தான் விந்து/சுக்கிலம் என்ற வார்த்தைகளும். இந்த தவறு தமிழர்களை குழப்பிய புண்ணியம் தமிழ் நாட்டில் இருந்த தனித்தமிழ் புரட்சியாளர்களுக்கும் பங்கிருக்கிறது. எமக்கு தெரிய எமது பாட்டனார்காலத்து வைத்தியர்கள், பண்டிதர்கள், புலவர்கள் சரியான அறிவு பெறுதலுக்கு எதுவித காழ்ப்புணர்வு நிலையும் இன்றி தமிழ்,சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்களாக இருந்தமையினால் புரிதலில் ஏற்படும் தவறுகளை இலகுவாக அறிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.
தனித்தமிழையும், தர்க்க அறிவினால் மட்டும் கட்டியெழுப்பப்பட்ட நவீன மனதினையும் வைத்துக்கொண்டு சித்தர்களது பாடல்களது பொருளை தெரிந்து கொள்ள நினைக்கும் தற்காலத்து சிந்தனாவாதிகள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவோ, கிணற்றுத் தவளைகளாகவோ தான் இருப்பார்கள். இதனால் சும்மா பழம் பெருமை பேசலாமேயன்றி பிரயோசனம் எதுவும் இல்லை. சித்தர்களது வரலாற்றினை எடுத்து நோக்குபவீர்களாக இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். போகர் சீனா, யோகபு எனும் யூகி முனி அரபியா, கோரக்கர் கோரக்பூர் என ஓவொருவரும் வேறு வேறு கலாச்சாரத்தில் இருந்து வந்து தமிழில் எழுதி வைத்துச்சென்றார்கள்.
தமிழில் உள்ளதற்காக அனைத்தும் தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று கூறமுடியாது. இதற்கு உதாரணமாக தற்கால நிலையினை விளங்கிக் கொள்ளலாம். தற்போது அறிவியல், கல்விகள், கண்டுபிடிப்புக்கள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது, இரண்டாவது மொழியாக பிரஞ்சு மொழி இருக்கிறது. இரண்டையும் கற்றுக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம், உலக அரங்கில் எமது அறிவினை பகிரவும் விருத்தி செய்து கொள்ளவும் முடியும். அதுபோல் அக்காலத்தில் எல்லாக் கலைகளும் பாரததேசத்தினை மையமாக வைத்து தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ஆராயப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். அவற்றை பல மொழி, கலாச்சாரத்தினை சார்ந்தவர்களும் செய்திருக்க வேண்டும். இந்த வரலாறும் உண்மையினையும் மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் இங்கு கூறவந்ததன் கருத்து; சித்தர்களது பாடல்களை, அறிவியலை பரந்த மனதுடன் எதுவித முன் துணிபுகளும் இன்றி அணுகவேண்டும் என்பதனை வலியுறுத்திக்கூறவே!
இந்த வகையில் விந்து/சுக்கிலம் என்பது பற்றி எவ்வாறான தவறான கருத்து தமிழர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். இதனை சரியாக புரிந்து கொள்வதற்கு நாம் ஆயுர்வேத மூல நூற்களை சற்று ஆராயவேண்டும்.
காம ரகசியம் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக