8 நவ., 2024

குண்டலினி யோகம் - மனித வாழ்வை செம்மைப்படுத்த சித்தர்கள் அருளிய சூட்சு ரகசியம் மூலாதாரம் - நிறம் மந்திரம் பீஜம் சுவாசம் அதிதேவதை முழு விளக்கங்கள்:

மூலாதாரம் - ஆறு ஆதாரங்கள் பற்றிய விவரத்தை யூகிமுனி பின்வருமாறு விவரிக்கிறார்:




பார்க்கவே ஆதாரம் ஆறுமாச்சு
        பரிந்திட்ட தத்துவங்கள் முப்பத்தாறும்
சேர்க்கவே சிவதத்துவம் ஆகும்கண்டீர்
        சிறந்திருந்த மண்டலங்கள் மூன்றும்கேளாய்
ஆக்கவே அக்கினி மண்டலத்தினோடு
        அலரி மண்டலம் விந்து மண்டலம்
தோக்கவே இதன்சூட்சம் சொல்லக்கேளாய்
        சுருதியாய் மூலமென்ற தொடர்ச்சிதானே

யூகிமுனி, தத்துவ ஞானம்


இறைவன் 96 தத்துவங்கள் கொண்ட மனிதனாக மாறி உள்ளான். இந்த 96 தத்துவங்களுள் ஆறு ஆதாரத் தலங்கள் முக்கியமானவை ஆகும். இந்த ஆறு ஆதாரத் தலங்களே மூச்சுக் காற்றை இயக்கும் தலங்களாக உள்ளன. இதில் வெட்டாத ஆறு சக்கரங்கள் இயங்குகின்றன. நம் உடலில் 72,000 நாடி நரம்புகள் உள்ளன என சித்தர்கள் கணித்துள்ளனர். இவற்றையும் ஆறு தலங்கள் தான் இயக்குகின்றன. இந்த நரம்புகளில் 51 தொகுதிகள் உள்ளன. இந்த நரம்புத் தொகுதிகள் இதழ்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. அந்த நரம்புத் தொகுதிகளில் எழும் ஓசையே, அதிர்வே பீஜ மந்திரம் எனப்படுகிறது.

கொண்ட இச்சக்கரம் கூத்தன் எழுத்தைந்து

                            திருமூலர், திருமந்திரம்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
     நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்

திருமூலர், திருமந்திரம்

ஆதாரத் தலங்களில் கூத்தன் என்ற சிவனின் பீஜ மந்திரமாகிய, நமசிவய உள்ளது. ஐந்து பூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளன. அதன் நிறங்களும் உள்ளன.

 ஆறு ஆதாரத் தலங்களிலும் உள்ள மொத்த இதழ்கள் ஐம்பது ஆகும். இதனுள் ஐம்பது எழுத்துக்கள் அடங்கும். நிராதாரத் தலமான சகஸ்ராரத்தில் ஓம் என்ற ஓர் எழுத்து உள்ளது. அதையும் சேர்த்து 51 எழுத்துக்களாக விரியும். அக்காலத்தில் தமிழுக்கு ஐம்பத்தியோறு எழுத்துக்கள் என்றும் கூறுவர். சமஸ்கிருதத்தில் 51 எழுத்துக்கள் என்றும் கூறுவர். இந்த 51 எழுத்துக்களும் ஐந்து எழுத்தில் அடக்கம். எனவே, ஐந்து எழுத்து பீஜ மந்திரத்தையும் ஓம் என உச்சரித்தல் சிறப்பு, அல்லது போதும்.

 இந்தச் சக்கரங்களையும் அவற்றின் இயக்கங்களையும் சித்தர்கள் மனக்கண்ணால் பார்த்துப் பதிவு செய்துள்ளனர். அதைப் பாடல்களாகச் சொல்லி உள்ளனர். இதன் அடிப்படையிலும் எனது அனுபவ அடிப்படையிலும் சக்கரங்களின் அமைப்பை நான், யோகினி Gabriele Sielmann அவர்களிடம் விவரித்தேன். யோகினி என்னிடம் ஆன்லைனில் வாசியோகம் பயின்றவர். வாலை ஒளி பார்த்தவர். பன்முக அறிவு கொண்டவர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சிறந்த டாக்டர், ரெய்கி மாஸ்டர், பல நூல்களுக்கு ஆசிரியர். மூன்று உயர் அறிவு சார்ந்த குழுக்களை நடத்துபவர். சிறந்த அறிவு சார்ந்த படைப்பாளி. உயர்ந்த ஓவியர்.

ஆதாரங்களைப் பற்றி நான் அனுபவித்ததையும் அறிந்ததையும் அவரின் அறிவைப் பயன்படுத்தி, ஓவியமாக வரைந்து நமக்குத் தந்துள்ளார். பலநாட்கள் இதற்கென செலவு செய்தோம். இருவரது பெயர்களின் முதல் எழுத்துக்களும் ஆதாரச் சக்கர ஓவியங்களில் R.G என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரின் சித்தர் பணியை நன்றியுடன் போற்றுவோம்.

மூலாதாரத் தலமும் சக்கரமும்

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
        தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
        கூவிக் கொண்டீசன் குடிஇருந் தானே
                                                       திருமூலர்திருமந்திரம்

மூலத்திரு விரல் மேலுக்கு முன்னின்ற
        பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
        ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே
                                        திருமூலர்திருமந்திரம்

மூலாதாரம் இருக்குமிடம்:

தொப்புளுக்கு நான்கு விரற்கிடை உள்ளேயும், அங்கிருந்து பன்னிரண்டு விரற்கிடை பருமன் கீழேயும் உள்ள இடத்தில் மூலாதாரம் உள்ளது. மலத் துவாரத்திற்கு இரண்டு விரற்கிடை மேல் உள்ளது. குறிக்கு இரண்டு விரற்கிடை கீழ் உள்ளது. இங்கு குண்டலினி உருவாகும். மூலாதாரத்தில் இருந்து தான் வாசியோகம் தொடங்க வேண்டும். அங்கு தாபிக்கும் மந்திரம் - ஓம். இதை அறிந்து செய்தால், உடலையும் உயிரையும் இணைக்கின்ற இறைவன், விரும்பி அங்கு குடியிருப்பான். உயிரும் நிலைத்திருக்கும்.


மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
    மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
    பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே

                                திருமூலர்திருமந்திரம்

மூலாதாரத்தில் ஆண்களுக்கு ஆண்தன்மை கொண்ட உயிர் சக்தி. இது எதிர்மறை உயிர் சக்தியாக (விந்து சக்தியாக) உள்ளது. இதைத்தான் மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை என்கிறார் திருமூலர். அகாரம் என்கிறார் போகர். விந்து சக்தியை வாசியுடன் குண்டலினியாக சுழுமுனை வழியே, மேலே ஏறி மேலைநிலம் என்ற ஆக்ஞா சக்கரத்தில் உள்ள பெண் சக்தியான நாத சக்தியுடன் இணைந்தால், வாலை உருவாகி, அமிர்தம் சுரக்கும். அந்த அமிர்தத்தை உண்டு வந்தால் முதிர்ந்த வயதானவர்கள் கூட இளமை அடைவர். இது நந்தி என்ற சிவனின் மேல் சத்தியம். இது உண்மை என அறுதியிட்டுக் கூறுகிறார் திருமூலர்.

மூலாதாரத்தைப் பார்க்கும் விதம் - அதன் அதி தேவதைகள்

காணவே ஓங்காரம் பிரதானம் தான்
            கருவான ஆதார மூல பீடம்

அகத்தியர், அந்தரங்க தீட்சா விதி

 

பாரப்பா நயன வொளி சூக்ஷத்தாலே
            பரிவான மூலமதில் ஆறு ஆதாரம்
     ஓசையென்ற சத்தம் உதித்து அடங்கும் வீட்டை
            உத்தமனே மனக் கண்ணால் நித்தம் பாரே

அகத்தியர், அந்தரங்க தீட்சா விதி

ஆறு ஆதாரங்களிலும் தலையாயது மூலாதாரம். மூலாதாரத்தை அடிமூலம் என்பார்கள். மனக்கண்ணால் உள்முகமாய் மூலாதாரத்தைப் பார். இப்படி மனக்கண்ணால் உள்முகமாய் பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மூலம் பார்ப்பது நயன ஒளி எனப்படும். ஓசை உருவாவதும் ஒடுங்குவதும் ஓம் என்ற தலையாய மந்திரத்தில் மட்டும்தான். ஓம் என்பதைத்தான் ம் என நாம் உச்சரிக்க வேண்டும். இதுவே வாசி உருவாக்குவதற்கு அடிப்படை, வாசியோகத்திற்கு அடிப்படை, குண்டலினி எழுப்புவதற்கு அடிப்படை.

சோதி என்ற ஆதார மூலம் பார்த்து

            புத்தியுடன் அடிமூலம் தன்னில் நீயும்
     பதிவாக இன்பமதாய் உருவே செய்தால்
            சித்தியுள்ள கணபதி வல்லபையும் மைந்தா
     சிந்தைதனில் ஒளிவிளக்காய்த் தரிசிப்பாயே

                                அகத்தியர், அந்தரங்க தீட்சா விதி

 தரிசிப்பாய் தினந்தோறும் தியானம் பண்ணி

            தீர்க்கமுடன் மானசமாய் பூசை செய்தால்
     நெறி சித்தியாகி அந்த நெறியிற்குள்ளே
            நின்றிலங்கும் கணபதி வல்லபையை மைந்தா
     பரிசுத்த மாய்நீ தரிசித் தாக்கால்
            பக்தியுடன் சகலசித்தும் கைக்குள்ளாகும்

அகத்தியர், அந்தரங்க தீட்சா விதி

 

மனதை மூலாதாரத்தில் நிறுத்தி, ஓம் என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்து, வாசியோகம் செய்து, தியானம் செய் (தியானம் பற்றிப் பின்பு விரிவாகப் பாப்போம்). இப்படித் தினந்தோறும் தியானம் செய். அப்பொழுது மூலாதாரத்தின் அதி தேவதைகளான கணபதியும் வல்லபையும் தோன்றுவார்கள். அவர்களை ஒளி வடிவில் காண, உனக்குச் சகல சித்துகளும் தருவார்கள் என்கிறார் அகத்தியர்.

மூலாதாரத்தைப் பற்றி போகர் பின்வருமாறு தெளிவாக விவரிக்கிறார்.

காணவே மூலமது அண்டம் போல
            காரணமாய் திரிகோணமாகி நிற்கும்
     பூணவே மூன்றின்மேல் வளையமாகும்
            புறம்பாக இதழதுதான் நாலுமாகும்
     நாணவே நாற்கமலத்து அட்சரங்கேளு
            நலமான சி ரீரீயாகும்
     மூணவே முக்கோணத்து உள்ளொளி ஓங்காரம்
            முயற்சியால் அதற்குள்ளே அகாரமாச்சே

போகர் 7000


மூலாதாரம் அண்டம் என்ற, பிரபஞ்சத்தைப் போன்றது. காரணதேகம் என்ற நிலையில் மூலாதாரச் சக்கரம் இயங்குகிறது. இதை மனக்கண் கொண்டு பார்க்க முடியும். வெட்டப்படாத சக்கரம். முக்கோண வடிவு உடையது. ஒரு கோணத்தில் வல்லபை சக்தியும், இரண்டாம் கோணத்தில் கணபதியும், மூன்றாம் கோணத்தில் குண்டலினி சக்தி பெண் பாம்பு போல் சுருண்டு சீறிக்கொண்டு உள்ளது. முக்கோணத்திற்கு உள்ளே ஓம் என்ற பிரணவம் உள்ளது. அதனுள் அகாரம் என்ற விந்து சக்தி உள்ளது. முக்கோணத்தைச் சுற்றிலும் வளையம் உள்ளது. அதற்கு வெளியே நான்கு தாமரை இதழ்கள் உள்ளன.


மூலாதாரத்தின் நிறம் : மாணிக்கச் சிவப்பு.

இதழ்கள்            : நான்கு தாமரை இதழ்கள்.
பீ மந்திரம்          : ஓம், ம்.
சிவ பீஜ மந்திரம்      : ஓம், ம்.
சுவாசம்             : ஒரு நாளைக்கு 3600 சுவாசங்கள்.
பூதங்கள்           : நிலம்,நீர்,தீகாற்றுஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின்                                                             ஒடுக்கம்.
அவத்தைகள்        : ஐந்து அவத்தைகளும் ஒடுக்கமாக அமைந்துள்ளன.
வித்துக்கள்          : அகர, உகார, மகார, நாத, விந்து என்ற பஞ்ச
                                              வித்துக்களின் ஒடுக்கம்.
அதிதேவதைகள்     : கணபதி, வல்லபை.
தொழில்            : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்                                                             ஆகிய 5 தொழில்கள்.

உகாரத்தின் வல்லமையால் சக்திநிற்பாள்
        ஒடுங்கியதோர் முனையொன்றில் கதலிப்பூவாய்
    புகாரமாய் முகம்கீழ்க் குண்டலியாம்சக்தி
        பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக்கொண்டு
    சுகாரமாய் சுழிமுனை ஊடுருவி நிற்பாள்
        துரியாதீதம் என்றஅவத்தை தானே
                                 போகர் 7000
                 கூறவே மூலத்தில் வாசிகொண்டு
            கோழிமுட்டை போலிருந்து முக்கோணத்தில்                               மாறவே இடைபின்னாய் இரண்டும் ஓடும்
            மற்றொன்று சுழிமுனைதான் மகிழ்ந்து கேளே
                                அகத்தியர், அந்தரங்க தீட்சா விதி,

       

இங்குள்ள குண்டலினி சக்தி அகாரம் என்ற விந்து சக்தியை, பிறத் தலங்களை ஊடுருவி, சுழிமுனைக்கு எடுத்துச் செல்லத் தயாராக உள்ளது. மூலாதாரத்தில் இடகலை பிங்கலை நாடிகள் பின்னிக்கொண்டு ஓடும். வாசியோகம் செய்வதால் அதை ஊடுருவிக் கொண்டு சுழிமுனை நாடி உருவாகும். இதன் வழியாகக் குண்டலினி சக்தி விந்துச் சக்தியை சுழிமுனைக்கு எடுத்துச் செல்லும்.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக