10 பிப்., 2025

ஞானம் என்பதற்கும், பிரம்மஞானம் என்பதற்கும் வேறுபாடு என்ன? பிரம்ம ஞானம் என்பது எல்லோருக்கும் சாத்தியமா? பிரம்மம் என்பதற்கான விளக்கம் மற்றும் அதன் இயல்பான தன்மைகள்:

 பிரம்ம ஞானம்

ஞானம் என்பது நாம் எந்தத் துறையில் சார்ந்து இருக்கிறோமோ அந்த துறையில் புலமை பெறுவது ஞானம். ஆனால் பிரம்ம ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய விளக்கம் அதாவது பிரபஞ்சம், பிரபஞ்சத்திற்கு மூலம், நான் யார்?

சுத்தவெளிதான் இறைநிலை இதுவே தான் கடவுள். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப்பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும். முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தின்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும் போது எழுகின்ற நுண் அலைகள் தான் காந்தம் எனும் நிழல் விண்கள்.

நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்க முடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும். இறைவெளியானது முதல்விண், நிழல்விண், காந்தம், காந்தத் தன்மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை. இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டல தோற்றம் இயக்கம் விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். பரமாணு முதல் கொண்டு, எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.

பேரியக்க மண்டலத்தைத் தத்துவங்கள்
    பத்தாக விளங்கிக் கொள்வோம்.
பெரியசுமை மனதிலிருந் திறங்கிவிடும்.
    மனம்அறிவாம் சிவமு மாகும்.
ஓரியக்க மற்றநிலை வெட்டவெளி
    இருப்ப துவே; ஆதி யாகும்.
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்
    விண்ணாகும். அதிலெ ழுந்த
நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில்
    கலப்புறவான் காந்த மாச்சு.
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம்ஒலி
    ஒளிசுவையும் மணம்மனம்ஆம்.
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை
    உள்ளுணர்ந்தால் அதுமெய்ஞ் ஞானம்.
சிந்திப்போம், உணர்ந்திடுவோம், சேர்ந்திருப்போம்
    இறைநிலையோ டென்றும் எங்கும்
                                வேதாத்திரி மகரிஷி.

இறைநிலையுணர்ந்த அறிவு:

பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனிதப் பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப் போற்றப்படுகிறது. அதுவேதான் இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது. இது காலம், தூரம் பருமன், விரைவு எனும் நான்கு கணக்குகளுக்கு உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்துதான் பரமாணுவெனும் நுண்ணியக்கத்துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத்தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான் பிரம்மம் எனும் தெய்வீகப் பேராற்றலின் சரித்திரம்.

மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற்பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளது. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்ம ஞானம் ஆகும். இத்தகைய அறிவு தான் இறை நிலையுணர்ந்த அறிவு. அதுவேதன் முடிவு நிலையான மனதின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்ம ஞானம் ஆகும்.


பிரம்ம வித்தை:

வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்

    வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது
அத்து விதமாகி அவன் எங்கு மாகி
    அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
    சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான தானேயான
    தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்
                                    வேதாத்திரி மகரிஷி.

அறிவின் நான்கு நிலைகள் :-


அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து
    அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று
அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம
    அணுவான உயிர்நிலையை உணர வேண்டும்;
அறிவங்கே உயிராகும் துரியமாகும்.
    அந்நிலையும் கடந்துவிடத் துரியாதீதம்,
அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ
    அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி".
                                    வேதாத்திரி மகரிஷி.


பேரறிவு :

இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது. அனைத்து பொருளும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது. இதனுள் இயங்குகின்றது. இருப்புநிலையை கடல் என்று நாம் எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள மிகச்சிறிய பொருள்களிலிருந்து மிகப் பெரிய பொருள் வரை அதன் இயக்கங்கள், சக்திகள் அனைத்தும் கடலில் தோன்றுகின்ற அலைகளாகும். அலைகள் கடலில் தோன்றி, கடலின்மேல் அசைந்து, கடலில் முடிவடைகின்றது. அதே போன்று மிகச்சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய சூரியன் வரை உள்ள அனைத்து பொருள்களும், உயிர்வாழும் ஜீவன்களும் இருப்புநிலையிலிருந்து (Static State) தோன்றி, அதனுள் இயங்கி, அதனுள்ளே முடிவடைகின்றது.

நீக்கமற நிறைந்துள்ள பூரணத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருப்பு நிலையில் மிதக்கின்றன. அசைகின்றன. தண்ணீரில் அதன் நுரை மிக நின்றாகத் தெரியும். நீரில் நுரை மிதப்பதைப் போன்று அனைத்துப் பொருள்களும் பூரணத்தில் மிதந்து கொண்டு உள்ளன. எண்ணிப் பாருங்கள். ஒரு பொருள், அதன்மேல் மற்றொரு பொருள் இதில் எது சக்திவாய்ந்தது. அசைகின்ற ஒவ்வொரு பொருளையும் தன்னிடம் பிடித்துக் கொண்டிருப்பது இருப்புநிலை. பிரபஞ்சம் முழுதும் பூரணத்தில் அடங்கியுள்ளது. பூரணத்தில் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது. சுற்றிலும் சூழ்ந்துள்ள இருப்புநிலையின் அழுத்தத்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் தற்சுழற்சி வேகத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களின் தன்மைக்கேற்ப பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகத்துடன் அவைகள் இயங்கிக் கொண்டுள்ளது. இருப்புநிலையே எல்லாம் வல்லது, அதுவே ஆதிநிலை.


எது பிரபஞ்சம் :

வேகத்தின் எல்லையே பருமனாக

    விளைந்துள்ளது அதன் தொடரே காலமாகும்
வேகமது பிளவுபட்டு இயங்கும்போது
    வேறு படுத்தும் வெளியின் அளவே தூரம்
வேகம் பருமன் காலம் தூரம் என்ற
    விதம் நான்காய்ப் பரம் பரம அணுவாயிற்று
வேகமாய் அணு இயங்க வெளி அழுத்த
    விளையும் தொடர் நிகழ்ச்சிகளே பிரபஞ்சம் ஆம்.
                                    வேதாத்திரி மகரிஷி
 

ஐம்புலனால் அறிய முடியாதது அரூபம் :


 சத்து சித்து ஆனந்தம் அனைத்து மாகி...
    சர்வ வியாபகமாயும் நிறைந்து உள்ள
அத்துவித ஆதிபராசக்தி தன்னை
    ஐயுணர்வில் எதைக் கொண்டும் அறியப் போகா
தத்துவங்கள் அனைத்திற்கும் மூலமான
    தலையாய நம் சக்தி அரூப மன்றோ?
வித்து நிலையை அறிந்து அறிவை ஒன்ற
    விவேகயூகம் உயர்ந்து அதே தானாகும்.
                                     வேதாத்திரி மகரிஷி

சத்து என்பது பூரணமான பேராதார நிலை (Potential Energy) அதன் எழுச்சி நிலையான அணு முதல் அண்டங்கள் பிண்டங்கள் அனைத்தும் தோற்றம், இயக்கம், மாற்றம் என்ற இயக்கத்தில் உளதால் சித்து எனப்படும். பரிணாம சிறப்பின் உச்சமாகிய உணரும், அறியும் நிலையாகிய அறிவு ஆனந்தம் எனப்படும்.

இம்மூன்று நிலைகளை அடைந்தும் ஆதி நிலையாய் குறைவுபடாமல் பேதப்படாமல் பூரணமாக நிறைந்து எல்லையற்றிருக்கும் அரூப சக்தியைக் கண், காது, மூக்கு, நாக்கு, ஸ்பரிசம் இவற்றில் எதைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நாமாக நமது மூலமாக இருக்கும் அந்தச் சக்தி அரூபமாக இருப்பதால், உடலியக்கத்திற்கும், அறிவியக்கத்திற்கும் மூலமான விந்துவின் நிலையை அறிந்து, அவ்விடத்தே அறிவை நிறுத்திப் பழகி வரும் தவத்தால் ஏற்படும் ஓர்மை நிலையில் அறிவே அதுவாகி - ஆதியாகி விடும். இதை யூக உணர்வினால் மட்டும் அறிந்துகொள்ள முடியாது.

ஆகாயத்தில் நாம் பார்க்கும் போது கண்களுக்குப் புலனாவது வெட்டவெளி அல்ல. அது அணுவெளி. அணுக்கள் மீது சூரியன் முதலிய கிரகங்களின் ஒளிக்கதிர் படுவதால் ஏற்படும் பிரதிபலிப்பு ஒளி நமக்குத் தோற்றமாக வெளிச்சமாகப் புலனாகிறது. சுத்த வெளி இருள், அகண்டம், எனும் நிலையில் அரூபமானது.

செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.



"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக