செயல் விளைவு தத்துவம்:
மனிதனுடைய
ஒவ்வொரு செயலிலும் அதற்குத் தக்க விளைவுகளைத் தவறாமல் பெற ஏற்ற அமைப்புதான் ”செயல் விளைவு தத்துவம்.” கடவுளை வேண்டிக்
கொண்டு, விளைவுகளுக்குக் காத்துக் கொண்டிருப்பதை விட, என்ன செயல் செய்தால் அந்த விளைவு
எனக்குக் கிடைக்கும் என்று சிந்திக்கவும், பயனடையவும் தக்க ஒரு வழியே செயல் விளைவு
நீதியாகும். எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தக்க விளைவு உண்டாகிறது என்பது ஒவ்வொருவருக்கும்
வாழ்க்கை அனுபவமாக உள்ளது. இந்த அனுபவங்களைக் கொண்டும், முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களைக்
கொண்டும் செயல் விளைவு தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். ஏமாற்றமில்லாமல்
பயன்தரக் கூடியதுதான் செயல் விளைவு நீதி.
தெய்வநிலையே தன்மாற்றத்தால் இறைத்துகளாகி, அவை கூடி அணுவாகி அதுவே நுண்ணியக்கமாகி, அதனுடைய கூட்டால் பிரபஞ்சமாகி, அதனுடைய செயற்கையால் பல கோடி உயிரினங்கள் ஆயிற்று . எல்லாமே தெய்வமாக, தெய்வத்தினுடைய பிரதிநிதியாக இருப்பதால் இறைநிலையின் தன்மைகள் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பொருட்களுக்கும், உயிரினங்களுக்கும் இருக்கின்றன.
ஒவ்வொரு செயலிலேயும் இறைநிலை அழுத்தம், ஒலி ,ஒளி ,சுவை , மணம் இவையாக உருவெடுத்து வெளிப்பட்டுப் பயனாக விளைகின்றது. செயலின் மூலமாக விளைவாக வருகிறது. அவரவர்கள் செயலிலே விளைவாக வருவது இறைநிலையினுடைய பிரதி பிம்பம் அல்லது உருவம். எனவே தனக்கு வேண்டுவது எதுவோ அதைப் பெறுவதற்கு எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்ய வேண்டும் . தெய்வீக ஒழுங்கமைப்பை உணராமலோ உணர்ந்தும், அலட்சியம் செய்தோ அல்லது உணர்ச்சிவயப்பட்டோ துன்பம் விளையக்கூடிய செயலைச் செய்து விட்டால் பிறகு அந்த விளைவிலிருந்து தப்ப முடியாது....
தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப்
பயனென்ன தவறிழைத்துப்
பரமனைப் பின்வேண்டுவதால்?
செயலிலே விளைவாக இருப்பது இறைநீதி விளக்கம்:
ஒரு செயலை நாம் செய்கிறோம். அச்செயலுக்கான விளைவைத் தருவது இறைநிலை. செயலின் விளைவு உடனடியாக வரலாம். ஒரு நாளில் வரலாம். ஒரு வாரம் கழித்து வரலாம். 10 ஆண்டுகள் கழித்து வரலாம். அடுத்த தலைமுறைக்கு வரலாம். ஆனால், செய்த செயலுக்கான விளைவு நிச்சயம் வரும். இதுதான் இறைநீதி எனும் செயல்விளைவுத் தத்துவம்.
நல்ல செயல் செய்தால் நல்ல விளைவு வரும். தீய செயல் செய்தால் தீய விளைவு வரும். இதுதான் இயற்கையின் சட்டம். (Law of Nature). நாம் முன்னோர்கள் செய்த நன்மைகளை அனுபவிக்கும் நாம் அவர்கள் தீய செயல்களின் விளைவில் இருந்து தப்பிக்க முடியும். எப்படி? மகான்களின் வழியை பின்பற்றினால் விடுதலை கிடைக்கும்.
காபி வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்.
அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போட வேண்டும். காபித்தூளைப் போட்டு காபிநீர் வடித்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு சர்க்கரை, பால் சேர்த்துக் கலக்கினால் மணக்க மணக்க காபி கிடைக்கும். உலகில் யார் காபி போட விரும்பினாலும் இதுதான் நெறிமுறை (System).
நான் உலகிலேயே பெரிய பணக்காரன். ஆகையால், காபித்தூளுக்குப் பதில் மூக்குப்பொடியைப் போட்டால் கூட எனக்குக் காபி வரும் என்று யாராவது கூற முடியுமா?
மாம்பழம் வேண்டுமென்றால் மாங்கொட்டையை நட வேண்டும். தண்ணீர் பாய்ச்சி உரம் போட்டுப் பாதுகாத்தால் அதற்கென்று உரிய காலம் வரை வளர்ந்து பக்குவமாகிப் பூக்கும். காய்க்கும். மாங்கனி தரும். நான் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அதிபர். எனவே, மாம்பழத்துக்காக நான் மாங்கொட்டையை நடவேண்டிய தேவையில்லை. வேப்பங்கொட்டையை விதைத்தாலே போதும். அது மாமரமாக மாறி வளர்ந்து விடும். என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
யாராயிருந்தாலும் நெறிமுறை அதாவது System ஒன்றுதான். தினை விதைத்தவன் தினயை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான்.
காபி போடுவதற்கு வேண்டிய எல்லா முறைகளையும் பின்பற்றி விட்டு காபி வராது வரவே வராது என்று அவநம்பிக்கையுடன் இருந்தாலும் காபி தயாராகிவிடும். நெிறிமுறைகளை பின்பற்றாமல் காபிதூளுக்கு பதில் மசாலாப் பொடியைப் போட்டுவிட்டு அளவற்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் காபி தயாராகாது.
முறைகாக்கும் முட்டாச் செயின்.
ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற் கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரி விளைவு.
எழும் பசியை உணவால்தான் போக்க வேண்டும்.
மனிதன் இன்பத்தை நாடுகிறான். வாழ்க்கையில் இலாபத்தை நாடுகிறான். இவற்றிற்காக கடவுளை வேண்டுவதை விட அதற்குரிய செயல்களைக் கண்டுபிடித்து முறைப்படி செய்து பயனடைவதுதான் ஏமாற்றமில்லாத உறுதியான வழிமுறையாகும்.
பொதுவாக பாவம், புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளை மனதில் கொண்டு புண்ணியத்தைத் தேடிக் கொண்டால் எல்லா வளங்களும் கிட்டுமென்பது, அது உண்மையே ஆனாலும், பாவம் எது, புண்ணியம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைப் பற்றியும் சிறிது சிந்திப்போம்.
பாபம் எது? புண்ணியம் எது? விளக்கங்கள்:
எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ
மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ
மாசுஎனும் துன்பம் எழா வகையினோடும்
உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே
உலக இயல்போடு ஒட்டிவாழும் செய்கை
புண்ணியமாம், இதற்கு முரணான வெல்லாம்
புத்தி மிக்கோர் பாபமென விளங்கிக்கொள்வார்.
எண்ணம், சொல், செயல் இவை மூன்றாலும் எவருக்கோ தனக்கோ, இன்றோ பின்னோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தருமானால் அது, அந்தச் செயல், பாவம் என்றும், இருக்கும் துன்பத்தை நீக்கி இன்பம் அளிக்குமானால் அது புண்ணியம் என்றும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல விளைவுகளைத் தரும் செயல்களை நமது வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொள்வது சிரமமில்லை.
இதுவரையில் நாம் வாழ்ந்துகண்ட அனுபவங்களை வைத்துக் கொண்டே, விளைவுகளைக் கொண்டே, எந்த எந்தச் செயல் நல்லது, செய்யத்தக்கது, எந்தச் செயல் தீயது, தவிர்க்க வேண்டியது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இந்த அளவுக்குச் சிந்தனை ஆற்றல் வளராதவர்களுக்கு மன உறுதியும், செயலில் பிடிப்பும் ஏற்படுவற்காக நம்பிக்கை வழியில் தெய்வத்தை வேண்டுதல் என்ற பயிற்சியும், பழக்கமும் ஏற்பட்டது.
பழக்கம்தான் உறுதி பெறும்பொழுது பண்பாடாக மாறுகிறது. பண்பாடுதான் மனிதனை தவறாது வழிநடக்கச் செய்யும் ஒரு பாதுகாப்பு. எனவே, இக்காலத்தில் விஞ்ஞான அறிவு மிகுந்து வரும்பொழுது, கல்வியின் வளர்ச்சிக்குப் பலப் பல வாய்ப்புகள் அமைந்திருக்கும்பொழுது, அறிஞர்கள் முயன்று செயல் விளைவு தத்துவத்தை மக்களிடம் பரவ விட்டு, வாழ்க்கைப் பண்பாட்டையே உயர்த்திவிடலாம். கடவுளை வேண்டுதல் என்ற பழக்கத்தில் நின்று அதனால் பயன்காணாது சோர்வடையும் மக்களுக்கு விஞ்ஞான பூர்வமான செயல் விளைவு தத்துவத்தை இன்று விரிவாக போதித்து, மனித இனப் பண்பாட்டை உயர்த்த வேண்டியது இன்றுள்ள பேரறிஞர்கள் கடமையாகும்.
செயல் விளைவு தத்துவத்துக்குச் சான்றுகளை எடுத்துக் கூறுவதற்கு அதிக சிரமமே இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும், சமுதாயத்திலும், உலக அரங்கிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டே துல்லியமாக செயல்விளைவு தத்துவத்தை நாமும் நன்கு உணரலாம், மக்களுக்கும் உணர்த்தலாம் செயல் படுத்தி நலம் காணச் செய்யலாம்.
வாழ்க்கை நல போதகர்கள் இக்காலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் கல்வி திட்டத்தில் செயல் விளைவு தத்துவத்தை விளக்கும் ஒரு முறையை அமுல்படுத்த வேண்டியது இக்காலத்தில் ஒரு இன்றியமையாத தேவை. சிந்தனையாற்றல் மிகுந்தவர்களுக்கும், சமுதாய நல நாட்டமுள்ள தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கும், பணிவோடு எனது கருத்தை அளிக்கிறேன். அறிஞர் பெருமக்கள் சிந்தனை செய்து, இக்கருத்துக்குப் படிகட்டியும், வடிகட்டியும் மக்கள் குல மேன்மைக்கு வழிவகுக்க வேண்டுமென்று உலக நலம் வேண்டி அறிவுத் தொண்டாற்றி வரும் அறிஞர் பெருமக்களை வேண்டிக் கொள்கிறேன்.
தனது துன்பத்திற்கு யார் காரணம் விளக்கங்கள்:
சிலர் தனது செயலால் துன்பம் விளையவில்லை. தனது துன்பத்திற்குக் காரணம் பிறரே என எண்ணுகின்றனர்.எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும்தனது விருப்பம் போல் செய்துவிட முடியாது. தனக்கு வரக்கூடிய இன்பமோ,துன்பமோ, லாபமோ, நட்டமோ, புகழோ, இகழோ, வரவோ, செலவோ, தன்னுடைய செயலிலேயிருந்துதான் பிறக்க முடியுமே தவிர வேறு எங்கிருந்தும் வராது.
ஒவ்வொருவரிடமும் வினைப்பதிவுகள் உள்ளன. அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி. தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்குத் துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் செய்யப்படலாம். பெரும்பாலும் இயற்கை வேற்று மனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக் கொண்டு வருகிறது....
ஒருவர் இன்னொருவருக்குத் தீமை செய்கிறார் அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்க்கை அவரது வினைப்பதிவை வெளிக்கொணர இன்னொருவரை கருவியாக உபயோகிக்கிறது என்றுதான் பொருள். எனவே தீமை செய்தவர்த்தானே விரும்பி இன்னோருவருக்கு துன்பம் அளித்தார் என்று கருதுவதை விட துன்பம் கண்டவரின் வினைப்பதிவை இயற்கை தனது ஒருங்கிணைந்த பேராற்றலினால் இன்னொருவர் மூலம் வெளிக்கொணர்ந்து நேர் செய்து விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக