3 பிப்., 2025

மனிதனின் முற்பிறவிக்கும் பிற்பிறவிக்கும் காரணமாக இருப்பதும், இறை, உயிர், மனம் எனும் மூன்று மறைபொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள் தான் கருமையம் முழு விளக்கங்கள்:

 மகா மறைபொருள் என்றால் என்ன விளக்கம்:



இருப்பு களம், இயக்க களம், வானுலவும் கோள்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்வகைகள் அனைத்தையும் பயனாய்க் காண்பவன் மனிதனே. இவ்வளவு பொருட்களுக்கும், இயக்கங்களுக்கும் மனித மனம் அளிக்கும் மதிப்பும், இவற்றால் மனிதன் அடையும் பயனும் தான் பேரியக்க மண்டலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த மனதின் சிறப்பு அவன் கருமையத்தின் வளமே அன்றி வேறு எது? மனிதன் உடலுக்கும், மனத்திற்கும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் வான் கோள்களுக்கும் இடையே, மனிதனின் முன்பிறவிக்கும் பின்பிறவிக்கும் இடையே பாலம்போல அமைந்து இறை, உயிர், மனம் எனும் மூன்று மறைபொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள் தான் கருமையம்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த பேரியக்க மண்டல இரகசிய மையத்தின் பெருமதிப்பை உணரக்கூடியவன் மனிதனே. இந்தக் கருமையத்தைத் தூய்மையாகவும், வளமாகவும் வைத்துக் கொள்ள அறிந்தவன், அதற்கு ஏற்ற தகுதி பெற்றவன் மனிதனே. வேதங்கள், மதங்கள், இலக்கியங்கள், சமுதாய நல நோக்கமுடையோர் அனைவரும் கூறும் போதனைகள் அனைத்தும் மறைமுகமாகக் கருமையத் தூய்மையே ஆகும்.


பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
    பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய
    நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
    நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
    பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும் !.
                                        வேதாத்திரி மகரிஷி.

இறைவனின் நிழல் கருமையம் விளக்கம்:

மனத்தின் இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தி துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளே. ஓர் உடலில் உள்ள உயிர்ச்சக்தி துகள்களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனைத்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.

பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் திண்மை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும். இந்த இயல்பின்படி, ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்து சேருகிறது. அங்கு இறுகி, குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது. இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்.

மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும், ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம். பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அன்று.

கருமையத்தில் இறுகிக் குறுகி, நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப, தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி மாற்றம் பெற்ற தன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது, மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது. அப்பொழுது உண்டாகும் அகக்காட்சியே எண்ணங்கள்.

இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும், அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம். உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.

மாய காந்த விளைவுகளே இன்பதுன்பம் :


காந்த நிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
    கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்,
மாந்தருக்குள் ஊறு ஓசை மணம் ஒளிசுவை மனம்
    மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்;
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட
    சந்தேகம் சிக்கலின்றிச் சாட்சி கூறும் உன் உளம்,
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
    விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே
                                        வேதாத்திரி மகரிஷி.

நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
    நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
    மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
    நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
    களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்."
                                        வேதாத்திரி மகரிஷி.


 

இயற்கையின் கருவூலம் சீவகாந்தக் கருமையம்:

பேரியக்க மண்டலத்தின் மூலமான எல்லாம் வல்ல இறை நிலைக்கும், அதன் பரிணாமத்தின் உச்சகட்ட நிலையிலிருக்கும் மனித மனத்துக்கும் இணைப்பு இயக்க மையமாக உள்ளது மனிதனிடம் அமைந்துள்ள சீவகாந்தக் கருமையம். இது இயற்கையின் மூலதனக் கருவூலம். இதுவே, இயற்கையின் முத்திறமும் இணைந்து செயல்புரியும் தொழிற்சாலை.

இங்கு விளையும் சிறப்புகள் அத்தனையும் வெளிக் கொண்டு வரும் வாயில் தான் மனித மூளை. வெளிக் கொண்டு வந்து பரவ விடும் செயல் வீரன் தான் நமது மனம். மனதைக் கொண்டு உருவாக்கும் எண்ணங்கள், உடல் கருவிகள் மற்றும் புலன்களைக் கொண்டு செய்யும் செயல்கள், இவையனைத்தையும் காந்த அலைகளாகச் சுருக்கிக் கொண்டு வந்து கருமையத்தில் சேர்த்து, இருப்பு வைப்பது இயற்கையெனும் பேராற்றலின் செயல்களே! மனித மனம் செயல் புரிகின்றது. இறைவனாகிய இயற்கை அத்தனையும் அலைவடிவில் இறுக்கிச் சுருக்கிப் பதிவு செய்து இருப்பு வைக்கிறது.

மனித உருவில் மனம் விரும்பிச் செய்யும் செயல்களை மனம் விரும்பி இயக்கும் நரம்பு மண்டல ஆற்றல் (Central nervous system) என்றும், இயற்கையால் நடைபெறும் மனித மனத்தால் கட்டுப்படுத்த முடியாத செயல்களைத் தானியங்கி நரம்பு மண்டல ஆற்றல் (Autonomous nervous system) என்றும் வழங்குகிறோம்.

இத்தகைய செயல்விளைவு வழுவாத நீதி மன்றத்தைக் கொண்ட கருமையம் என்னும் ஆட்சி மன்றத்தை அமைப்பாகக் கொண்ட மனிதன், விளைவு அறிந்த விழிப்புடன் செயல்புரிந்தால், அவன் வாழ்வில் துன்பமே தோன்றாது.


வினைப்பதிவு :


முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு,
    மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு;
பின்னேநீ செய்தவினைக்குப் புலனைந்தும் இயக்கிப்
    பெற்ற பழக்கப் பதிவு உண்டு; இம்மூன்றும்
உன்னைநீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
    ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்;
தன்னில் பதிவான வினைப் பதிவுகளை மாற்ற
    தணிக்க பொருள் செல்வாக்குப் பயனாகா துணர்வீர்."
                                        வேதாத்திரி மகரிஷி

மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய குண்டலினி யோகம் சூட்சுமம் ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க

                                      செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக