2 மே, 2025

ஒருவருடைய ஆன்மீகத் தேடலில் குருவின் பங்கு என்ன? திருமந்திரத்தின் மூலம் குருவின் முக்கியத்துவம் குறித்து திருமூலரின் கருத்து என்பதின் முழு விளக்கங்கள்:

 குரு என்பவர் யார்?



சீடர்களின் மனதில் உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவரே குரு ஆவார். இந்து சமயத்தில் குரு மிகவும் மதிக்கத் தக்கவராக விளங்குகிறார். மனுஸ்மிருதி குருவை, சீடனின் பெற்றோர்களுக்கு நிகராகவே போற்றுகிறது. இந்திய பண்பாட்டின்படி, குருவை அடையாத ஒருவனை அனாதை அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று குறிப்பிடுகிறது.


ஆன்மீகத்தில் குருவின் பங்கு


குரு கீதை (சுலோகம் 17) குருவை இருளை விரட்டுபவர் என்று பொருத்தமாக விளக்குகிறது. ஓர் உண்மையான, இறை-ஞானம் பெற்ற குரு, தன் சுய-மேம்பாட்டை அடையும் போது எங்கும் நிறைந்த பரம்பொருளுடனான தனது அடையாளத்தை உணர்ந்தறிந்திருக்கும் ஒருவர் ஆவார். அத்தகைய ஒருவர் முழுநிறைவை நோக்கிய சாதகரின் அகப் பயணத்தை வழிநடத்த தனிச்சிறப்புமிக்க தகுதிவாய்ந்தவர் ஆவார்.

''குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது என்றார் பரமஹம்ஸர். இறைவனை அறிந்த ஒரு குரு மட்டுமே அவனைப் பற்றி மற்றவர்களுக்குச் சரியாகக் கற்பிக்கலாம். ஒருவருடைய தெய்வீகத்தை மீட்க ஒருவருக்கு குரு இருக்க வேண்டும். ஓர் உண்மையான குருவை விசுவாசத்துடன் பின்பற்றுபவர் அவரைப் போலவே ஆகிறார், ஏனெனில் குரு சீடரைத் தன் சொந்த அனுபூதித் தளத்திற்கு உயர்த்த உதவுகிறார்.

குரு என்பவர் ஒரு நபர் அல்ல குரு என்பது ஒரு தன்மை இருளை அகற்றும் மின்னல் கீற்று. அஞ்ஞானம் போக்கும் அறிவு. குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது. அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.


 மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசம்

 

ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்கு கூறவில்லை
வித்தையில் சிறந்த துரோணருக்கு கூறவில்லை
பக்தியில் சிறந்த விதுரனுக்கு கூறவில்லை
பின் யாருக்குத்தான் கூறினான்?


தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார். இருப்பதிலேயே நண்பனிடம் சரணாகதி அடைவது தான் இயலாத காரியம். ஏனென்றால் நண்பனின் அத்தனை சேட்டைகளும் தான் நமக்குத்தான் தெரியுமே! அதனால் நண்பனிடம் மட்டும் சரணாகதி அடைவது என்பது இயலாத காரியம். (கிருஷ்ணனைப் போன்ற நண்பன் மட்டும் நமக்கு உபதேசித்திருந்தால் என்ன சொல்லியிருப்போம். உன் அட்வைஸ நிறுத்துறயா? உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா? என்றிருப்போம்) ஆனால் கிருஷ்ணனின் அனைத்து சேட்டைகளையும் அறிந்த பின்பும் (சிசுபாலன் கண்ணனின் சேட்டைகளை  பக்கம் பக்கமாக பட்டியலிட்ட பின்பும்) அர்ஜுனன் சரணாகதி அடைந்தான். அர்ஜீனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால் கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லை அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது.

இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்க கூடிய சிவபெருமான் கூட தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னை சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.

ஆகவே இங்கு ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி அல்ல சீடனின் தகுதிதான் மிகவும் முக்கியமானது. எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும். மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது.

நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை

ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை

தவித்தவன் தண்ணீரை தேடி பயணிப்பது போல, தாகம் கொண்டவனின் தொண்டையை நனைக்க தண்ணீரும் பயணப்படுகிறது. தன்னை தகுதி படுத்திக் கொண்டவன் தன் பாதையிலேயே தன் குருவைக் காண்பான்.

திருமந்திரம் மூலம் குருவின் முக்கியத்துவம்:


கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே
                                    திருமந்திரம்

ரசவாத வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.


பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்
குருபரி சித்த குவலயம் எல்லாந்
திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே
                                                                             திருமந்திரம்

திருமூலர் இப்பாடலில் குருவின் மகிமையைப் பற்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்குகின்றார். பரிசனவேதி என்ற மூலிகைக் கூட்டு மருந்து ஒன்று உள்ளது. அந்த மருந்து பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.


சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே 
                                        திருமந்திரம்


இப்பாடலில் திருமூலர் பக்தி மார்க்கத்தையும் ஆன்மீக மார்க்கத்தையும் வேறுபடுத்தி எளிய முறையில் தெளிவு படுத்துகிறார்.காரணம் இறைவன் மீது பக்தி கொள்ளுதலே ஆன்மிகம் என்று பக்தர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சமயங்களிலும் தவறாகக் கற்பிக்கப்படுகிறது. திருமூலர் காலத்திலும் இது நடைமுறையில் இருந்துள்ளது.


மனிதர்களைப் படைத்த இறைவனே வானவர்களையும் படைத்துள்ளான். அந்த வானவர்களை மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இப்பாடலை திருமூலர் எழுதி உள்ளார். வானவர்கள் என்று சொல்லப்படும் தேவர்கள் சிவனை அனுதினமும் வழிபட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களது வழிபாடுகளினால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. அவர்கள் இறைவனை அடைய முடியாது.

இறைவனை அடைவதற்கான ஒரே வழி என்று திருமூலர் குறிப்பிடுவது, ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைத்துகளாக குடிகொண்டிருக்கும் ஆன்மாவாகிய குருவினை உணர்ந்து யோக சாதனையின் மூலம் இறைவனை உயிருணர்வாக அணுகினால் குருவாகிய ஆன்மா நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என்கிறார் திருமூலர்.

குரு வாழ்க! குருவே சரணம்! குருவே துணை! குருவின் திருவடி போற்றி!

 

செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக