திருமந்திரத்தில் குருவின் மேன்மை:
தெளிவு குரு உரு சிந்தித்தல்தானே !"
குருவின் பெருமையை, முக்கியத்துவத்தை மேற்கூறிய திருமந்திரம் விளக்குகிறது. குரு இன்றி எதுவும் சாத்தியமில்லை. அதனால்தான் மாதா-பிதா-குரு-தெய்வமெனக் கூறப்படுகிறது. உலகில் விந்தையானது, குரு-சிஷ்ய பரம்பரை மூலம்தான் வந்து கொண்டிருக்கிறது.
குருவின் முக்கியத்துவம்:
குருவை சரணடைந்து, அவரது அனுக்கிரகிகத்தைப் பெற்றவனே ஆத்ம ஞானம் பெறத் தகுதியுடையவன் எனக் கூறப்படுகிறது. குருவிடம் மந்திர தீட்சை பெற்றுத்தான் மந்திரங்களை ஜபம் செய்யவேண்டும். அப்போதுதான் உரிய பலன்களை, மந்திரங்கள் தரும்.
ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் தொடர்பு ஏற்படுத்துபவரே குரு ஆவார். உலகில், குரு இறைவனின் பிரதிநிதியாக விளங்குகிறார். குருவின் போதனைகளை பின்பற்றி நடப்பதுவே உண்மையான வழிபாடாகும்.
இது குறித்து உபநிஷத்தில் கூறியுள்ளது என்னவென்றால்
"எவருக்கு தெய்வத்திடம் பக்தி இருப்பதுபோல குருவிடமும் இருக்கிறதோ, அவருக்கு உபநிஷதங்களில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகள் தானாகவே அனுபவமாகும்" என்பதாகும்.
குரு பக்தி ஒன்றே ஆன்மாவிற்கு சாத்தியமாகும். குரு தத்துவத்தை அறியாதவனிடம், ஜபம், தவம், விரதம், யாகம், தானம் போன்றவைகள் பலனளிக்காது புத்திமான்கள் குருவை சரணாகதி அடைய முயற்சிக்க வேண்டுமென்று சிவபெருமான், குரு கீதையில் பார்வதி தேவியிடம் கூறுகிறார்.
குருவினால் உபதேசம் பெற்றவர்கள்:
ஸ்ரீ கிருஷ்ணர் குருவாக இருந்து அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார்.
ஆதிசங்கரருக்கு கோவிந்தபாதர் உபதேசித்தார்.
ஸ்ரீராமரின் குருவாக இருந்து வழிகாட்டியவர் வசிஷ்டர். இப்படி அநேகம்.
குருவின் துணை என்றும், எப்போதும் அவசியம்.
குரூர் பிரம்மா, குரூர் விஷ்ணு குரூர் தேவோ மகேஸ்வர! குரூர் சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம!
குரு தொட்டு காட்டாத வித்தை குருட்டு வித்தை:
வித்தையையும், ஞானத்தையும் குரு மூலமாக அறிவதே சிறந்தது. குருவில்லாது தானே கற்ற வித்தை நிறைவு பெறாது. இசை போன்ற நுண் கலையையும், வில்வித்தை போன்ற போர்க்கலைகளையும் குருவோடு பல காலம் உடனுறைந்தே கற்பர். குருகுல வாசம் என்று அதற்குப் பெயர்.
குருகுலத்தில் குருவுடன் வாழ்ந்து அவருக்குப் பணிவிடை செய்து பல ஆண்டுகள் பயில்வது குருகுல வாசம். 12 ஆண்டுகள் என்றும் ஒரு கணக்கு. குரு இல்லாமல் தாமே நூல்கள் வாயிலாகவோ அல்லது பிறரைப் பார்த்தோ கற்கும் கலையும் அறிவும் குருமுகமாகக் கற்பதுபோல் முழுமையாகாது.
தேவர்களின் குரு வியாழன் அவருக்கு குரு என்றே பெயர். வியாழக்கிழமையை குரு வாரம் என்கிறோம் அல்லவா! கல்விக்கும் ஞானத்திற்கும் வியாழக்கிழமை சிறந்தது என்று நாம் கொள்வதிலிருந்து குருவின் சிறப்பு தெரிகிறது.
அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் சுக்கிரன் - வெள்ளி தேவர்களுக்கும் அசுரர்களுக்குமே குரு உண்டென்றால் மனிதர்களுக்கு வேண்டாமா?
குருவே சிவம் என்கிறார் திருமூலர். தாம் கூறுவதாகக் கூறாமல் தம் குருவே, தெய்வமே, கூறுவதாகக் கூறுகிறார்.
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.
குருமார்களுக்கு நல்ல சீடர்கள் கிடைப்பதும், சீடர்களுக்கு நல்ல குருமார்கள் கிடைப்பதும் அரிது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு விவேகானந்தர் கிடைத்ததுபோல் எத்தனை குருமார்களுக்குக் கிடைத்தார்கள்? விவேகானந்தருக்கு குரு கிடைத்ததுபோல் எத்தனை பேருக்குக் கிடைத்தார்கள்? மாணாக்கர்களுடைய அறியாமை இருளை (குருட்டை) நீக்குபவர் குரு. நம் குருட்டை, குருட்டுத்தனத்தை, அறியாமை இருளை நீக்கும் குருவைக் கொள்ள வேண்டும். அப்படியிருக்கக் குருட்டை நீக்க இயலாத, நீக்கும் வல்லமையில்லாத, போலியைக் குருவாகக் கொண்டால், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குழியில் விழுந்த கதைதான்.
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
உத்தம குருவிற்கு நம் உடல் பொருள் ஆவிகளைத் தத்தம் செய்ய வேண்டும். எள்ளளவு இடைவிடாது அவர் காட்டிய நெறியின் நின்று தெளிவாய் அறிய வேண்டும். அப்போது சிவபதம்தானே வந்து சேரும். இதோ திருமூலர் கூறுகிறார்.
உள்ள பொருளுடன் ஆவியுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறியச் சிவபதம் தானே.
மனிதர்களுக்கு குருவின் அவசியம் என்ன விளக்கம்:
நம் காலத்தில் நமக்கு ஒரு நல்ல குரு கிடைக்கவில்லை என்றால், முற்காலத்தில் விளங்கிய குருமார்களை வழிபடு குருவாக, உபாசனா குருவாகக் கொள்ளலாம். திருஞானசம்பந்தரை வள்ளலார் அப்படித்தான் வழிபடு குருவாகக் கொண்டார்.
அது போல் நாம் வள்ளலாரை குருவாகக் கொள்ளலாம். தற்காலத்தில் நம் கண் எதிரே விளங்குவோரையன்றி, இப்படி முன் ஞானிகளைத் தோன்றாத்துணையாகக் கொள்வதுண்டு. கொள்வோரின் பக்குவத்திற்கு ஏற்ப அவர்கள் தோன்றும் துணையாகப் பல சமயம் காட்சி அளித்ததும் உண்டு.
இறுதியில் ஒரு பெரிய சந்தேகம். கடவுளை வழிபடுகிறோம். குருவையும் வழிபடுகிறோம். கடவுள் கொடுப்பதைக் குருவால் கொடுக்க முடியுமா?
முருகனை வழிபட்டால் அவர் கொடுப்பதை ஞானசம்பந்தரை வழிபட்டால் அவர் கொடுப்பாரா? வள்ளலாரை வழிபட்டால், ஸ்ரீராமகிருஷ்ணரை வழிபட்டால் கொடுப்பாரா? என்றால் கொடுப்பார்கள். அவர்களால் கொடுக்க இயலும், தெய்வ வழிபாட்டால் பெறுவதைக் குருவழிபாட்டாலும் பெறலாம். தெய்வம் கொடுப்பதைக் குருமார்களும் கொடுக்கும் வல்லமை உடையவர்கள். அது தான் குருவே சிவம் என்று நந்தியும் திருமூலரும் கூறிவிட்டார்களே!
சிவபெருமானே குருவாக உபதேசம் செய்ய வந்ததுதானே தட்சிணாமூர்த்தி வடிவம். எனவே தெய்வமே குருவாக வரும் குருவும் தெய்வமாவார் குருவே சிவம் குருவருள் பெற்றுத் திருவருள் பெறுவோம்.
எனது வாழ்கையில் ஏற்பட்ட எல்லாவித மாற்றங்களுக்கும் எனது குருவே காரணமாகிறார். குரு தொட்டு காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியை போல குரு உபதேசித்த அனைத்தையும் சரியாக செய்தாலே இவ்வுலக்திலும் அவ்வுலகதிலும் இடம் உண்டு என்பது சத்தியமான உண்மையாகும்.
குரு வாழ்க! குருவே சரணம்! குருவே துணை! குருவின் திருவடி போற்றி!
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக