தசவாயுக்கள் என்றால் என்ன?
தசவாயுக்கள் என்றால், பிராணன், அபானன், உதானன்,
சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என பத்து வாயுக்கள்,
அவை உடலை இயக்கும் வாயுக்களாக கருதப்படுகின்றன. நமது பிண்டத்தில் தச வாயுக்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. அவை தொடர்பாக சித்தர்கள் சொன்ன ரகசியங்களை நாம் தற்போது பார்ப்போம்....
"தச வாயுக்களால் உடல் அசைகிறது.
இந்த வாயுக்கள் உடலை விட்டு நீங்கினால் சவமே"
திருமூலர்.
பஞ்சபூதங்களில் காற்றால்தான் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறது. காற்றில்லாமல் எந்த பயணமும் நிகழ்வதில்லை. நம் உடலும் அவ்வாறே இமை மூட, இரத்தத்தை உறுப்புகளுக்கு செலுத்த, உறுப்புகளை அசைக்க, இயற்கை உபாதை இப்படி எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் இருப்பது நம் உடம்பில் உள்ள தசவாயுக்களே....
இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருத்தல் ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
திருமந்திரம்
பொருள் விளக்கம்:
"தனஞ்சயன்" (வீங்கற் காற்று) என்னும் வாயு மற்ற 9 வாயுக்கள் உயிர் காற்று (பிராணன்), மலக்காற்று (அபானன்), தொழில் காற்று, (வியானன்), ஒலிக்காற்று (உதானன்), நிரவுக்காற்று (சமானன்), தும்மல் காற்று (நாகன்), விழிக்காற்று (கூர்மன்), கொட்டாவிக்காற்று (கிருகரன்), இமைக் காற்று (தேவதத்தன்) உடன் கலந்தே இருக்கும். அஃது 223-வது புவனமான அகந்தை என்ற மண்டலத்தில் பொருந்தியிருக்கும். இந்த வாயு இல்லாது போனால் உடல் வீங்கி வெடித்து போகும். ஒரு மனிதன் இறந்த மூன்றாவது நாளின் தனஞ்சயன் வாயு தலை வழியாக வெளியேறும். இதன் காரணத்தினாலே இறந்து பல காலம் ஆன மனிதனின் உடல் உப்பத் தொடங்குகிறது.
மேல் சொன்ன வாயுக்களை எந்த எந்த வாயு உடலை விட்டு அறவே நீங்குகிறது மனிதனுக்கு அந்த அந்த உறுப்பு வேலை செய்வதில்லை. உதாரணத்திற்கு முடக்கு வாதம். இதை இன்றைய விஞ்ஞானிகளால் மறுக்க முடியுமா?
· இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது - சுழிமுனை.
·
இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை
·
வலது மூக்கின் வரை - சந்திரக் கலை
·
வலது கண்ணின் வரை - புருடன்
·
இடது கண்ணின் வரை - காந்தாரி
·
வலது காது வரை - அத்தி
·
இடது காது வரை - அலம்புடை
·
மூலாதாரத்திலிருந்து - சங்கினி
· உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை
· அபான வரை – குரு
தசவாயுக்கள் (தசரதன்):
பிராணவாயு:- (உயிர் காற்று) மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம். நெஞ்சுக்குழியில் இருந்து மேல் நோக்கிச் சஞ்சரித்து, பரி, தாகத்தை ஏற்படுத்தி உணவை ஜீரணம் செய்து, செரிமானத்திற்கு மூல காரணமாக விளங்குகிறது.
அபானன்:- (மலக்காற்று) கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும். உடற்கழிவுகளான மல, சலம் சுக்கிலம், சுரோணிதம், ஆகியவற்றை வெளியேற்றுவது. அதாவது உடலின் தள்ளல் என்ற தத்துவத்தின் அதிபதியாக விளங்கும்.
வியானன்:- (தொழிற் காற்று) நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும். உடல் முழுவதும் வியாபித்து தொடு உணர்ச்சியை கிரகிப்பதோடு, ஜீரணமான உணவை இரசம் வேறாகவும் சக்கை வேறாகவும் பிரிக்கும் பணியைச் செய்வது.
உதானன்:- (ஒலிக் காற்று) இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை வெளிப்படுத்தும். தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச்செய்து, ஏப்பம் வரச்செய்வது, குறட்டை வரச்செய்வது, உறங்கும் போது ஐம்புலன்களையும் இருளில் ஆழ்த்தி உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் பின்பு விழிப்பு நிலையில் அதனதன் இயல்பிற்கேற்ப மறுபடியும் இயங்கச் செய்வதும் ஆகும்.
சமானன்:- (நிரவல் காற்று) சத்துக்களை உடல்முழுதும் சமஅளவில் கொண்டுச்சேர்ப்பது. தொப்புள் பகுதியிலிருந்து கொண்டு உதானன் அனுப்பும் உணவின் சாரத்தை யெல்லாம் எல்லா உறுப்புகளுக்கும், அதனதன் இயல்பிற்கேற்ப பகிர்ந்து அளிப்பது.
நாகன்:- (விழிக் காற்று) பார்வைத்திறன் அளிப்பது, உணர்ச்சிகளை தூண்டக்கூடியது இது தொண்டையிலிருந்து கொண்டு வாந்தி, முக்கல், திமிர்விடுதல், ஆகியவைகளைச் செய்வதோடு கண்களுக்குப் பார்வையை கொடுப்பது.
கூர்மன்:- (இமைக் காற்று) கண்ணீரை வரவழைத்தல், சிரித்தல் போன்றவைகளுக்கு காரணமாக உள்ளது. கண் இமைகளை இயக்குதல், உடல் சிலிர்த்தல் சிரிப்பு போன்ற வேலைகளைச் செய்வது.
கிருகரன்:- (தும்மல் காற்று) நாவில் சுரப்பையும், பசி, தும்மலுக்கு காரணம் தும்மல், அழுகை போன்ற உணர்ச்சிகளின் அதிபதியாக செயல்படுவது.
தேவதத்தன்:- (கொட்டாவிக் காற்று) கொட்டாவி விடுதல், விக்கலுக்குக் காரணம் மார்பில் சஞ்சரித்து கபத்தைக் கட்டி கொட்டாவி விக்கலை உண்டாக்குவது.
தனஞ்செயன்:- (வீங்கக் காற்று) கோமா (நினைவற்றநிலை), உடலை வீங்கச்செய்தல் போன்றவைகளுக்குக் காரணம்
மேற்சொன்ன ஒன்பது வாயுக்களிலும் பரவியிருந்து விரவிக் கொண்டு நொடிக்கு 224 அதிர்வு அலைகளை உண்டாக்கி ஒவ்வொரு வாயுவையும் அதனதன் தொழிலை செய்ய வைப்பதோடு 72,000 நாடி நரம்புகளையும் இயக்குவது, கர்ப்ப காலத்தில் இவ்வாயு குறையுமானால் பிறக்கும் குழந்தை கூன், குருடு, செவிடு, பேடு, முடம் மற்றும் தொழுநோய் இவைகளை ஏற்படுத்தும்.
கர்பத்திலுள்ள கருவை வெளியே தள்ளுவதும் இவ்வாயுவின் பணியே. மனிதன் இறக்கும் போது ஒன்று முதல் ஒன்பது வாயுவும் ஒன்றன்பின் ஒன்றாக உடல் விட்டு வெளியேறும். ஆனால் தனஞ்செயன் மட்டும் உடலில் தங்கி இருந்து வினாடிக்கு 224 மின் அதிர்வை உண்டாக்கி கொண்டே இருக்கும். அவற்றை கிரகிக்க இதர வாயுக்கள் இல்லாத படியால் இந்த மின் அதிர்வுகள் உள் உறுப்புகளை நேரடியாகத் தாக்கி வீங்கச் செய்யும். இறுதியில் வயிறு வெடித்து பின்னே தனஞ்செயன் வெளியேறிச் செல்லும் என திருமந்திரத்தின் பாடல்களான 653, 656, 863 இவைகள் தெரிவிக்கின்றன.
இந்த பத்து வாயுக்கள் (தச வாயுக்கள்) தவிர வேறு சில வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவற்றுள் முக்கியமாவை என கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
- முக்கியன் - உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
- வைரவன் - கபத்தை உருவாக்கும்
- அந்திரியாமி - பிராணனை உருவாக்குதல்
- பிரவஞ்சனை - பிராணவாயுவின் நண்பன், இக்காற்றின் துணையுடன் தான் சுவாசம் நடக்கிறது.
ஆறு ஆதாரங்களில் தச வாயுக்களின் பங்கு:
மூலாதாரம் - பூமி தத்துவத்தில் மூலாதாரம் குத பகுதியில் உள்ளது.
சுவாதிட்டானம் - நீர் தத்துவத்தில் சுவாதிட்டானம் குறி பகுதியில் உள்ளது.
மணிப்பூரகம் - அக்கினி தத்துவத்தில் மணிபூரகம் வயிற்றுப்பக்கத்தில் உள்ளது.
அனாகதம் - வாயு தத்துவத்தில் அநாகதம் மார்பு பகுதியில் உள்ளது.
விசுத்தி - ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி கழுத்தில் உள்ளது
ஆக்கினை - மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில் உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை என்கின்றோம்.
(1) பிராணன்:-
கண்ணால் காண முடியாத (உயிர், பிராணன், ஜீவன்) எனும் உயிர்க்காற்று நிலவி, நிரவிடும் (தச வாயுக்களில் ஒன்றான பிராதனமான பிராண வாயு ஆகும்.) ஒவ்வொரு உயிரும் தன் தாயின் கர்ப்பத்தில் உதித்து சிசு வளர்கையில் தன் தாயிடம் இருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கிய ஒரு கலவையை தொப்புழ் கொடியின் மூலம் பெறுகின்றது. ஆணோ அல்லது பெண்ணோ அதற்கு ஏற்ற அவயவங்களில் ஆக்கத்தினையும் முழுமையாக உருவாக்கும். செல்களையும் அத்தொப்புழ் கொடியினின்றே அனுப்பப்பட்டு அதன் விளைவாகவே அங்க வளர்ச்சி துவங்கி விட்டது என்றே கூறலாம்.
(ஸ்டெர்ம்செல்ஸ் பேங்க்) இன்று மனித அங்கங்கள் எவை ஆயினும் அது பழுது பட்டிருந்தாலோ அல்லது நீங்கப்பட்டிருப்பினும் கூட அவற்றை ஸ்டெர்ம்செல்கள் மூலம் முழுமையாக உருவாக்க முடியும் என்று உணர்ந்திருக்கிறார்கள். இதன் அடிப்படை யாதெனின் பிராணனின் சித்து விளையாட்டே அது. தாயின் பிராண வாயுத்தொகுப்பு முழுவதும் சிசுவின் முழு அங்கங்களின் (தலை உட்பட) உற்பத்திக்கே செலவிடப்படுகின்றன.
சிசு வளர்ச்சி என்பதற்கு கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் வெளிப்பிராணன் கருவிடம் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. பின் முற்றிய 42 வாரங்கள் முடிந்ததும் குழந்தை அன்னையை விட்டு வெளி உலகிற்கு வந்த பின் ஏற்கனவே பிணையுண்டிருந்த பிராணன் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் அனைத்து வாழ்க்கை இயக்கங்களையும் (Metabolic System) வளர்சிதை மாற்றப்பணிகளை பொறுப்பேற்கிறது. பிறந்த உடன் துவக்கிய சுவாசம் இறுதி மூச்சு எனப்படும் மரணம் வரை அவனை வாழ வைக்கிறது. பிராண வாயுக்களோடு (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) என்று பெயர்ப்பும் பிரதான ஐந்து வாயுக்களுடன் இதர உப வாயுக்களான (நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்) என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்களும் இணைந்திருப்பினும் செயல்படாமல் இருந்தன எனக்கூறலாம்.
கருவீட்டினின்றும் பெருவீடு என்ற இந்த பிரபஞ்சத்தின் பிடிக்கு வந்த பிறகே இந்த பத்து வாயுக்களும் தத்தம் பணியினைத் துவங்கியது என்பதோடு உடலின் பல்வேறு பகுதிகளில் பிராணனோடு இணைந்தும், தனித்தும் பிராணனின் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. தச வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன் ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் இரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது.
இப்பணிக்கு வாசி என்ற சுவாசத்தை பயன்படுத்தி அச்சுவாசத்தின் மூலம் அச்சுவாசத்தினுள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறது. இது மேல் நோக்கிய பாய்ச்சலைக் (ஓட்டம்) கொண்டது.
(2) அபானன்:-
அபான வாயு கீழ் நோக்கிய பாய்ச்சலைக் (ஓட்டம்) கொண்டது. "மலக்காற்று" எனவும் இதற்குப் பெயர் உண்டு.
குண்டலினி போன்ற மா சக்திகளைப் பெறுவதற்கு இன்றியமையாதது மட்டுமின்றி குறிப்பிட்ட சில பயன்களுக்காக அபானன் வெளியேறி விடாமல் இருக்கச் சில பந்தங்களை இயற்றி அப்பலன்களை அடைவாரும் உண்டு. கும்பகம் என்ற உள்நிறுத்த சுவாசப்பயிற்சியின் பலன்கள் எண்ணிலடங்காதது என சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வமயம் அபானனை வெளியேறி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இதில் தவறு ஏற்படுமாயின் கும்பகப்பயிற்சி பலன் அற்றதாகி விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
(3) வியானன்:-
இதன் உற்பத்தி மூலத்தானமாக மண்ணீரல் விளங்குகிறது. உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை ஏற்றிசெல்லுதல், செயல் படுத்துதல் நரம்புகளாகவும் மற்றும் இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும். இதனை "தொழிற்காற்று" என அழைப்பர்.
(4) உதானன்:-
மூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள முன் தொண்டை, மூக்கு, குரல் வளை, மூச்சுக்குழல், மூச்சின் இதர கிளை குழல்கள் ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால் குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை உதானன் என்ற ஒலிக்காற்று ஆகும். மேலும் குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான மடிப்புகள் இடைவெளியுடன் அமையப்பெற்றுள்ளன. இம்மடிப்புகள் குரல் நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே உதானன் செல்கிறபோது குரல் நாண்கள் அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன.
(5) சமானன்:-
உடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் காரணியாய் உள்ளதும், பல்வேறு வகை புரதம் மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து பிரித்தல், உணவை செரித்தல், அவ்விதம் செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல் முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் வாயுவே சமானன் ஆகும். இதனை "நிரவல் காற்று" (பரப்புதல், சேர்ப்பித்தல்) என பெயர் பெறுகிறது.
(6) நாகன்:-
பிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று, ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதாரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும். மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி, கண்களின் நேர்பின் பகுதி, மூக்கின் வலது மற்றும் இடது உள்பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும், தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவிபுரிகிறது.
(7) கூர்மன்:-
உள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும், மகிழ்ச்சி, சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும்.
குறிப்பு - விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்புமீன், என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.
(8) கிருகரன்:-
மூளை தனக்கு ஒய்வு பெற எண்ணும்போதும் மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை இரண்டையும் குறைக்க முயலும்போது அந்நேரம் உறக்கம் வருவதற்கு "கொட்டாவி" என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன் ஆகும். அவ்வேளை நுரையீரல் உள்ளே உட்புகும் வெளியேறும் பிராண வாயு குறைவினால் உடலின் அனைத்து பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம் திடீரெனக் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும் தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண வாயு பற்றாக் குறையினைச் சரிப்படுத்தும் நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும் செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின் பணி ஆகும்.
(9) தேவதத்தன்:-
விழி உலர்வாயிருக்கவும், விழியை பாதுகாக்கவும், இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும். மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயலாற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.
(10) தனஞ்செயன்:-
மனித உடல் இறந்து பட்டு வீழ்ந்தபின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறிவிடும். ஆனால் தனஞ்செயன் மரித்த உடலில் இயங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொரு செல் (நுண் திசுக்கள்) இயக்கமறச்செய்து விடுகிறது. அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல்தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும் பின் உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.
மனிதன் இறக்கும் தருவாயில் தச வாயுக்களின் பணிகள்:
இவ்விதமாய் தசவாயுக்களும் நம் உடலில் பல்வேறு செயல்களும்
தன்னிச்சையாக செயல்படுகிறது. உயிர்க்காற்று (பிராணவாயு) இன்றி ஏனைய ஒன்பது காற்றுகளும்
செயல்படமுடியாது. எனவே பிராணனை நன்கு இயக்கி பிராணனுள் பிராணனால் சக்தியூட்டி பிராண
ஆற்றலை மேம்படுத்தி அதன் வழியே உடல், மனம் இரண்டின் இயக்கங்களை நம் கட்டுப்பாட்டில்
கொணர்ந்து உடற்சக்தி, உளசக்தி இரண்டின் துணையுடன் மூன்றாவது ஆன்ம சக்தியை எழுப்பி அதன்
மூலம் தேவையான போது உடல் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி ஆன்ம எழுச்சி முதிர்கின்ற போது
இவ்வுடற் சக்தியின்றியே இறைசக்தியினை உணர்வதற்கு ஞானிகள் கூறிய யுக்தியே பிராணனை வசமாக்கும்
"பிராணாயாமம்" ஆகும். மேற்கண்ட முக்கியமான பத்து காற்றுகளும், ஒரு மனிதன் இறக்கும்போது என்ன செய்து கொண்டிருக்கும்?
முதலில் இவ்வுடலைவிட்டு பிரிவது உயிர்காற்றும், நிரவுக்காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்துவிட்டதாக, பிணமாகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. கவனிக்கவும் மற்ற காற்றுகள் அந்த பிணமான உடலில் இருந்து கொண்டிருக்கும். ஒருவர் இறந்துவிட்டால் உயிர்சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்துவிடுவதில்லை. இறந்த உடலில் 11 நாட்களிலிருந்து 40 நாட்கள் வரை உடலைவிட்டுச் சென்றுவிட்ட அந்த இரண்டு வாயுக்களைத் தவிர மற்றவை அதன் அதன் வேலைகளை நமது பிண உடலில் செய்து விட்டு நிம்மதியாக தங்கள் வீட்டைவிட்டு செல்கின்றன. அதுவரை நமது பிண உடலில் முடியும், நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல்பட்டிருக்கின்றதை உணரலாம். உடலை விட்டு உயிர் பிரிவது மெதுவாகவே நடைபெறுகிறது. எப்படி இவ்வுடல் உருவாக பத்து மாதத்திற்கு நமக்கு கருப்பை தேவைப்பட்டதோ அதுபோல இவ்வுடல் அழிய மண்குழியில் பல வருடங்கள் இருக்க வேண்டியதுதான் இயற்கை.
இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும். இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும், நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பை நாற்றம் எடுக்கச் செய்தல்
இதன் வேலைகளாகும். எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும். பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.
இதற்காகத்தான் நமது பிணங்களை கண்டிப்பாக "சாகாஅருளர் வள்ளலார்" அவர்கள் புதைக்க சொல்கிறார். மாறாக புதைக்காமல் எரித்துவிட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிர மற்ற வாயுக்களின் வேலையை செய்யவிடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலும் ஒரு மனிதக் கொலைக்குச் சமமே. மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக்கூடிய தனஞ்செயன் வாயு, இடுக்காட்டில் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் "டப்" என்று சப்தத்துடன் வெடித்து (துன்பத்துடன், அப்பிணத்திற்கே சாபமிட்டு) வெளியேறும். இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த தனஜய வாயுவின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.
சில யோகிகள் / கடின சித்தர்கள் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் தாம் இறக்கும்போது எடுத்துக்கொண்டு முழுமையாக உடலைவிட்டு விலகுவார்கள். தாம் இறந்தப் பிறகு தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இவ்வித சமாதியும் தவறான செயல்களாகும். ஆனால், ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித வாயுக்களுமே வெளிவருவது இல்லை, எனவே இவர்கள் விரும்பும்போதோ அல்லது இறைவன் விரும்பும் போதோ இவர்களால் மீண்டும் இவ்வுலகில் உலா வர இயலும். இவர்களுக்கும் மரணிப்பதற்கு கால நிர்ணயம் உண்டு. எனவே இவ்வகையான ஜீவசமாதி பழக்கத்தை 'சாகாஅருளர் வள்ளலார்' கைவிடச் சொல்கிறார்.
இதில் என்ன வேடிக்கை என்றால், நம்மால் கடின சித்தர்கள் யார்? ஜீவ சமாதி அடைந்தவர்கள் யார்? என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது அனுபவம் அவர்களுக்குத்தான் தெரியும். பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறியும்!
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக