1 ஏப்., 2025

குண்டலினி என்றால் என்ன? குண்டலினி இருப்பிடம் எது? சித்தர்கள் சொன்ன யோகப் பாடல்கள் மூலம் குண்டலினி சக்தி என்பதன் முழு விளக்கங்கள்:

 குண்டலினி சக்தி விளக்கம்



குண்டலினி யோகம் என்பது, முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருப்பதாக நம்பப்படும் செயலற்ற ஆற்றலை எழுப்பி, உடலின் ஆற்றல் மையங்கள் (சக்கரங்கள்) வழியாக அதை வழிநடத்துவதன் மூலம் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு யோகா பயிற்சியாகும்.

குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் அம்மக்களின் சீர்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சியாகும். சீர்படுத்துவதற்காகச்= குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத) + னி(உயிர்). இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால் (பஞ்சபூதங்கள்) ஆனதோ அதைப்போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனது. ஐந்து முறைகளைக் கொண்டு இயங்குகிறதென்பது யோகக் கலையின் அடிப்படை. அதில் ஆகாய சக்திக்கு உரிய யோகாவே குண்டலினி.

குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி. இது முதுகெலும்பின் அடியில் இருக்கும். இதை மூலாதாரத்தில் இருந்து ஆக்கினைக்கு ஏற்றும் போது ஒரு குட்டிப்பாம்பு ஊர்வது போல் மேலே ஏறும்.

எளியமுறை குண்டலினி யோகம்: (Simplified Kundalini Yoga - SKY):


வேதாத்திரி மகரிசி அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

விந்து, நாதம் இவைகளை ஆதாரமாகக் கொண்டே இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது. திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவதுபோல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது. அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்துகொள்ளும் முறையே தவம் (Simplified Kundalini Yoga) எனப்படும்.

சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது. எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறதுஅதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்.


ஒன்றி ஒன்றிப் பழகிவரும் அறிவிற்கன்பு ,
    உறுதி, நுட்பம், சக்தி இவையதிகமாகும்
அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம்
    அறிவினிலே நிலைத்துவிடும் ஆழ்ந்து ஆய்ந்து
நன்று என்று கண்டபடி செயல்கள் ஆற்றும்
    நற்பண்பு புலன்களுக்கு அமைந்துபோகும்
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
    இயற்கை முறை சிறப்புடைத்து ஈது தவமாம்.
                                        வேதாத்திரி மகரிஷி

எண்ணத்தில் பிரபஞ்சம் விளக்கம்:


எண்ணத்தை எண்ணத்தால் ஆராய ஆராய
    இயற்கை ரகசியங்கள் எண்ணத்துள் சாட்சியம்
எண்ணத்தின் இவ்வுயர்வை இயற்கையே பேசுதென்றும்
    இதுவே உள்ளுணர்வென்றும் இயம்புவோர் அனுபவத்தோர்.
                                        வேதாத்திரி மகரிஷி

ஆன்மிகத்தில் கூறப்படும் குண்டலினி சக்தி

ஆன்மிகத்தில் கூறப்படும் குண்டலினி சக்தி என்றால் என்ன தெரியுமா! குண்டலினி சக்தி உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் தனது சக்திகளை கொடுத்து உடம்பில் உள்ள எல்லா இயக்கங்களையும், உணர்வுகளையும் இன்ப, துன்பங்களையும் கோப, தாபங்களையும் நிர்வாகம் செய்து உடம்பில் உஷ்ணம், குளிர்ச்சி ஆகியவற்றையும் சீராக பாதுகாத்து வருகிறது.




சித்தர் யோகப் பாடல்கள் மூலம் குண்டலினி யோகம்: 


சித்தர்கள் மொத்தம் பதினெண்மர் ஆவர். இவர்கள் வாலை- பாலா எனும் சாக்த சமயக் கடவுளையே தங்களின் யோகத்திற்கு துணைசெய்யும் கடவுளாக கொண்டனர். சிவவாக்கியர், திரிகோணச் சித்தர், கடேந்திரநாதர் சித்தர், புண்ணாக்குச் சித்தர், கல்லுளிச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், வகுளிநாதர்(எ) மௌனச் சித்தர், ஆதிநாதர்(எ) வேதாந்தச் சித்தர், அகத்தியர், அகப்பேய் சித்தர், அழுகணிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர், இராமதேவர், குதம்பைச் சித்தர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், வால்மீகர் ஆகியோர் தந்த பாடல்கள் சிறப்பானவை. அவற்றின் கருத்துகள் யோகம் பற்றியதாக இருப்பதால் அதை நாடும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


ஆன அஞ்சுஎழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆன அஞ்சுஎழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சுஎழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆன அஞ்சுஎழுத்துளே அடங்கலாவல் உற்றதே-
                                            சிவவாக்கியர்

அகண்டமும், பிரபஞ்சமும், மும்மூர்த்திகளும், அ, உ, ம எனும் ஓங்கார மூல ஓசைகளும் மற்றயாவும் அஞ்சு எழுத்திலே சிவாயநம என்பதில் அடங்கியவை.


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே
                                            சிவவாக்கியர்

சுழுமுனை நாடியில் பிராணன் வாயுவின் உருவில் ஒடுங்கியுள்ளது. மனத்தை அதில் செலுத்தி கீழே அம்மையின் பாதமும் முடியில் அப்பன் பாதமும் உள்ளதாக கருதி தலைவரையில் மேலே ஏறுவதாகக் கருதினால் நாடிக்குள் அசைவு ஏற்படும். உடல் சிவக்கும். இளமை கொள்வர். பிராணசக்தி தன் போக்கில் நாடிவழியாக மெதுவாகச் சென்று கொண்டுதான் இருக்கும். யோகத்தின் மூலம் அதை வேகப்படுத்துகிறோம். இறைக்க இறைக்க நீர் ஊருவதுபோல் பிராணன் மேலே செல்லச் செல்ல மேலும் பிராணன் உடலில் வந்து புகும். இதுவே உடல் இளமை, நிறம் முதலியன தரும்.

பிரபஞ்சத்தை அண்டம் என்றும் நம் உடலைப் பிண்டம் என்றும் கூறுவர். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மூலகங்களும் பஞ்சபூமுதங்களும் நம் உடலில் இருப்பதால் நம் உடலை நுண்ணிய பிரபஞ்சம் எனலாம். பிரபஞ்சமும் அதில் உள்ள யாவும் தன்னுள் இருப்பதாக உணர்வது சித்தர்கள் வழியாகும்.


என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லாரோ
    என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே
                                            சிவவாக்கியர்

யோகத்திற்குமுன் எனக்குள் இருந்த ஒன்றை நான் அறியவில்லை. நான் அறிந்து கொண்டவாறு யோகம் அறிந்த யாரும் அறியவில்லை. என்னிலே இருந்ததை பிறர் கூறாமலே நான் அறிந்து கொண்டேன், அவருக்குள் இருந்த பிரபஞ்சம் பரபிரம்மம் ஆகியன யோகத்தால் அறிந்து கொண்டதால் அவரைப்போல் பிறர் அறியவில்லை.


காயக்குடத்திலே நின்ற பாம்பைக் கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுணை நீடுபாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப்பெருவெளி தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்கத்தேடி ஆயத்துறை
கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே
                                            பாம்பாட்டிச் சித்தர்

உடம்பகிய குடத்தின் அடியில் உள்ள குண்டலினி சக்தியாகிய பாம்பைக் கடவுளின் கருணையினால் பெற்று சுழுமுனையில் நீண்டு போக அனுப்பி நிலையான பரம் பொருளைத்தேடி உச்சிப் பெருவெளியில் ஏறி தடையாக உள்ள கிரந்தி முடிச்சு யாவற்றையும் கடந்து பாழான வெளியில் ஆனந்தம் அடைந்தோம் என ஆடு பாம்பே என்றார்.


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்.
                                        பத்திரகிரியார்

 ஆங்காரமாகிய கோபம் முதலியவற்றை அடக்கி அன்பு மிகக் கொண்டு ஐந்து புலன்களை தலையெடுக்காமல் செய்து சமாதி நிலையடையலாம். தூங்குவது போலிருந்தாலும் தூங்காமல் இருந்து சுகம் அடைவது ஆகும். ஆங்காரம்- அகங்காரம்.


வெட்ட வெளிதன்னை மெய் என்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி
                                        குதம்பைச் சித்தர்

தலைக்குமேல் உள்ள வெறும் வெளியை மெய்யான பொருள் என நம்பி இருப்போர்க்கு பிறர் கூறும் அடியாள வார்த்தைகள் தேவையில்லை.


அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி
    மந்திரத்தேர் ஏறியல்லோ மான் வேட்டை ஆடுவதற்கு
சந்திரரும் சூரியரும் தாம் போந்த காவணத்தே
    வந்து விளையாடியல்லோ என்கண்ணம்மா
மன மகிழ்ந்து பார்ப்பது ஒன்றோ.
                                        அழுகணிச்சித்தர்

புருவத்தை வில்லாக்கி, ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி அது போகும் வேகம் தேராகி அகங்காரமாகிய மான் வேட்டையாட சந்திர சூரிய நாடிகள் உடம்பில் உதவி புரியும்.


கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து
    குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாமல் ஒரு நினைவாய்க் காக்கும்போது
    நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே.
                                        அகத்தியர் ஞானம்

பிராணாயாமத்தின் மூலம் சுழுமுனையில் மூலாக்னி மேலே ஏறும். எட்டிதழ் தாமரை ஆக்ஞை மேல் குருபாதம் உள்ளது. அதுவும் நாழிதழாகிய மூலாதாராமும் ஒன்றாகுமாறு இணைக்கும் சுழுமுனை நாடியில் மனம் வைத்து பிராணாயாமம் செய்தால் யோக சித்தியாகும்.


சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி:

பொதுவாக யோக சாஸ்திரங்களில் சிவபெருமான் பரம்பொருளின் உருவ வடிவமாகக் கருதப்படுகிறார். சிவனின் சக்தியாக அன்னை உமையன்னை பேரறிவிற்கும், மனத்தின் ஆற்றலுக்கும், செயலில் ஆற்றலுக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறார். இந்தச் சக்தி உடலில் குண்டலினி சக்தி என்றும் அறியப்படுகிறது.

குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது (மூலாதாரம்). உச்சந்தலையில் சிவா அம்சம் (துரியம் அல்லது ஆக்கினை) உள்ளது. சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பமான குண்டலினி யோகம்.இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.

                                                 செந்தில்குமார்
                                                 செல்9655472931
                                                 நச்சாந்துபட்டி,

                                                

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக