கருமையத்தைத் தூய்மை
இரண்டொழுக்கப் பண்பாட்டிலேயே எல்லாம் அடங்கி உள்ளன. இதை எப்படி எல்லாம் கடைபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம். ‘யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தரமாட்டேன்’ என்ற முதல் ஒழுக்கத்தை எடுத்துக் கொண்டு முதலில் உங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் உடலுக்கு, மனதிற்கு நீங்கள் துன்பம் தராமலிருக்க என்னென்ன பண்ணவேண்டும்?
தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி மற்றும் தவம் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள வெப்பம், ரத்தம், காற்று, ஜீவகாந்தம் மற்றும் உயிர் ஓட்டங்கள் சீரமைக்கப்பட்டு உடல் துன்பங்கள் நீங்குகின்றன. நோய் வராமலும் தடுக்கின்றோம். தவப் பயிற்சிகள் அடிக்கடி செய்வதால் மனஒர்மை ஏற்படுகின்றது. இன்னும் நீங்கள் இறைநிலை தவம் அடிக்கடி செய்து இறைநிலையோடு ஒன்றி நிற்க பழக வேண்டும். யாரிடமும் சண்டை போடாமல், மனதில் பகை, வஞ்சம் வைத்துக் கொள்ளாமல் மன்னித்து கருணை உள்ளத்தோடும் இன்முகத்தோடும் இருக்கவேண்டும்.
மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் விளக்கம்:
சாதி, மத, நாடு, இன, மொழி வேறுபாடின்றி எல்லோருமே நம் சகோதர, சகோதரிகள் – இறைநிலையின் வடிவங்கள், அவர்களுக்குள்ளும் அறிவே தெய்வமாக விளங்குகின்றது என்ற உணர்வில் எல்லோரையுமே தெய்வங்களாகப் பார்க்கவேண்டும், மதிக்க வேண்டும்.
மகரிஷி அவர்களின் கனவுகளை நனவாக்கும் அருட்தொண்டில் ஈடுபடப்போகும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. நீங்கள் எப்போதும் ஒழுக்கம், கடமை, ஈகை இவை மூன்றுமினைந்த அறநெறிப் படிகளை பின்பற்றி வாழ வேண்டும். நம்மை சார்ந்த பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர் மற்றும் நம் குழந்தைகளுக்கு நம் பொறுப்புணர்ந்து அக்கறையோடு காத்து உதவ வேண்டும். தாய், தந்தை, குரு, ஆட்சி தலைவர் மற்றும் தெய்வம் (இறைநிலை) இவர்களை மதித்து வணங்கி வாழ வேண்டும்.
இயற்கை வளத்தை காக்க வேண்டும். ஆம். இயற்கையை அழிக்காமல் அதனோடு இயைந்த வாழ்க்கை வாழவேண்டும். அது மட்டுமல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட பொருட்களை வீணாக்காமலும், செதப்படுத்தாமலும் காத்து வாழவேண்டும். இரண்டோழுக்கப் பண்பாட்டில் இவ்வளவு இருக்கின்றது. இப்படி நீங்கள் வாழ பழகிக்கொண்டால் நீங்கள் ஆன்மீக வாழ்க்கை வாழ்கின்றீர்கள் என அர்த்தம்.
ஆன்மீகம் என்பதன் விளக்கம் என்ன:
ஆன்மீகத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளத்தான் நாம் பலபல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். இன்றைக்கு மக்கள் ஆன்மீகம் என்ற சொல்லை மட்டும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ஆன்மீகத்தைப் பற்றி புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்பது சந்தேகமே! பொதுவாக ஆன்மீகம் என்றால் வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது, புனித பயணங்கள் மேற்கொள்வது, புனித நூல்களைப் படிப்பது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆன்மீகம் என்றால் என்ன
தவம் மாத்திரம் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் ஆகிவிட மாட்டார்கள். நம் புராணங்களில் வரும் இராவணன், சூரபத்மன் மற்றும் ஹிரண்யன் போன்றவர்கள் கடும் தவம் செய்தார்கள், இறைவனிடம் வரங்கள் வாங்கினார்கள். ஆனால் அவர்களை ஆன்மீகவாதிகள் என்று சொல்லமுடியுமா? உண்மையான ஆன்மீகவாதிகள் ஆன்மாவைப் பற்றி தெளிவாக அறிந்து கருமையத்தூய்மைக்கான நெறிமுறைகளுடன் வாழ்வதாகும். ஆன்மீகத்தின் அடிப்படை எப்போதும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதுதான், ஆன்மீகவாதிகள் அன்புமயமானவர்கள். நமது மகரிஷி அவர்கள்
ஆன்மாவைப் பற்றி, அதாவது கருமையத்தைப் பற்றியும் அதனை தூய்மை செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்து அதன்படி நடப்பதுதான் ஆன்மீக வாழ்வு.
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமைகளெல்லாம்
அன்பின் செயலாகும்
என்று நமக்கு பிரம்மஞானம் தந்து இறையுணர்வையூட்டி ‘அன்பே இறைவன்’ என்ற உயர்நிலைக்கு நம்மை அழைத்து செல்கிறார்கள். நம் மனவளக்கலைப் பயிற்சிகள் அனைத்தும் ஆன்மீகப் பயிற்சிகளாகும்.
ஆன்மீகம் என்ற சொல்லுக்கு சரியான பொருள் என்ன?
ஆன்மாவைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம். ஏற்கனவே நாம் இறைவனை வழிபடும்போது உண்மையில் அவரவர் எண்ணங்களைத்தான் வணங்குகின்றோம் என்றும் எண்ணங்கள் மனதிலிருந்து எழுகின்றன. மனமோ உயிரின் படர்கை நிலை. உயிரின் மூலமோ கருமையம். இந்த கருமையத் தூய்மைக்குத்தான் இரண்டொழுக்கப் பண்பாடு கடைபிடிக்கின்றோம். ஆன்மாவை உணர்வது என்றால் ‘தன்னை உணர்வது’ என கொள்ளலாம்.
நான் உண்மையிலேயே ஆன்மீகப்
பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேனா என்பதை எப்படி அறிவது?
மிகவும்
சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். யாரெல்லாம் தங்கள் துன்பங்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள்
இவற்றிற்கு மற்றவர்களையும், சூழ்நிலைகளையும் காரணமாகச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கின்றார்களோ
அவர்கள் இன்னும் ஆன்மீகப்பக்கம் அடியெடுத்து வைக்கவில்லை என்று அர்த்தம்.
ஆன்மீகப் பாதையில் எடுத்து வைக்கப்போகும் முதல் அடி பற்றி விளக்கம்:
நமது
பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் நாம்தான் காரணம் என்று எப்போது நாம் உணர்கின்றோமோ
அப்போது நாம் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்து விட்டோம் என்று நிச்சயமாக சொல்லலாம். பொதுவாக மக்கள் தங்கள் கஷ்டங்களுக்கு மற்றவர்களை
குறை சொல்லி அவர்கள் திருந்த அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள். தன்னிடத்தில் உள்ள
குறைகளை உணரவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் சிறிதும் முயல மாட்டார்கள். மற்றவர்கள் மீதே பழி சொல்லி, மற்றவர்களைப் பற்றியே
பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் எப்படி?
நீங்கள்தான் ஆன்மீகப் பாதையை காட்டிவிட்டீர்களே, எங்கள் குறைகளை உணரத் தொடங்கிவிட்டோம்.
உணர்ந்தால் மட்டும் போதாது. மனம் பண்பட பயிற்சிகள் வேண்டும். உதாரணமாக ஒருவர் உங்களை திட்டிவிட்டார் என வைத்துக்கொள்வோம். உங்கள் மனம் உடனே துன்பப்படுகின்றது. உணர்ச்சி வசப்பட்ட மனோநிலையில் நீங்கள் இருந்தால் உங்களை திட்டியவரிடம் சண்டை போட்டிருப்பீர்கள் அல்லது மேலும் உணர்ச்சி வசப்பட்டு வேண்டாத செயல்களை செய்திருப்பீர்கள். நீங்கள் அமைதியாக சிந்தித்தால் திட்டியவரின் சொல்லா நம்மை புண்படுத்தியது….. இல்லையில்லை… என் மனம்தான் அந்த சொல்லை துன்பமாக மாற்றியது என்பதை உணரலாம். இப்படி அமைதியாக, விழிப்புணர்வுடன் ஒவ்வொன்றையும் சிந்தித்து, சிந்தித்து செயல் படுபவன் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கின்றான் என்பது அர்த்தம். பக்குவப்படும் மனம் பண்பட்டு, பண்பட்டு ஆன்மீக சாதனைகளுக்குத் தயாராகின்றது.
எப்போதுதான் ஆன்மீகப் பயணம் நிறைவு பெறும் விளக்கம்:
கருமையத்தூய்மைக்கான வழிமுறைகள் பார்த்தோமல்லவா, அவற்றை விழிப்புணர்வோடு கடைப்பிடித்து வரும்போது மனதில் எப்போது இன்பமும், துன்பமும் அற்ற ஒரு மனோநிலை வருகின்றதோ இன்னும் சொல்லப்போனால் எப்போது மனம் சலிப்பில்லா ஆனந்தத்தை அனுபவிக்கின்றதோ அப்போது ஆன்மீகப் பயணம் நிறைவு பெறுவதாகக் கொள்ளலாம்.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்
பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் மற்றவர்களும் அல்ல, நாமும் அல்ல என்ற மனோநிலை அடையும்போது ஆன்மீகத்தில் முழுமை பெறுகின்றோம். இந்த நிலை அடையும்போது ஆன்மீகப் பயிற்சிகள் நிறைவு பெற்றிருக்கும். மனம் அன்பும், கருணையும் நிறைந்து பார்க்கும் தோற்றங்களெல்லாம் இறைதோற்றமாகக் கொள்ளும். புற சூழ்நிலைகள் எதுவும் மனதைப் பாதிக்காது. மனம் தன்னையும் நொந்து கொள்ளாது. உடலாலும், மனதாலும் யாருக்கும் உதவ, மற்றவர் துன்பம் தீர்க்க எப்போதும் தயாராக இருப்பார்கள். செய்துகொண்டும் இருப்பார்கள்.
ஆன்மிகம் என்பது இவ்வளவுதானா?
மேலும் இருக்கின்றது நம் மகரிஷி அவர்கள் விளக்கியுள்ள நான் யார் தத்துவத்தையும் பிரம்ம ஞானத்தையும் பழக, பழக எல்லா உயிர்களும் ஒன்று, எல்லா தோற்றங்களும் ஒன்று, எல்லாமே இறைநிலையின் வெளிப்பாடு என்ற உணர்நிலையில் வாழலாம். நம்மை அறியலாம். பிறரை அறியலாம். இயற்கையை அறியலாம்.இறைநிலையின் பிரதிபிம்பம் நாம்தான் என்ற உணர்நிலையில் அன்பும், கருணையுடன் தொண்டாற்றி இன்பம் காண்போம்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக