26 டிச., 2024

மகாசக்தி குண்டலினி - ஆறு ஆதாரத்தலங்களில் ஆறாவது தலமான ஆக்ஞா சக்கரத்தின் இயக்கங்கள், தன்மைகள், அரிய பொக்கிஷங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றிய முழு விளக்கங்கள்:

 

ஆக்ஞா தலமும் சக்கரமும்


ஆக்கினை: இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் (டெலிபதி) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது.


குண்டலினி யோகத்தில் சக்தியை புருவமத்தியில் மனம் வைத்து தவம் செய்யும் சக்கரமாகும். நெற்றிக்கண், ஞானக்கண், புருவப்பூட்டு என்று ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது

ஆக்கினியை சித்தர்கள் புருவங்கள் இரண்டும் கூடும் முச்சந்தி வீடு என்று உவமைப்பொருளாக குறிப்பிடுகிறார்கள். இது தீட்சை முறையில் குரு சீடனுக்கு மூலாதாரத்தில் இருந்து கைவிரல்கள் மூலம் தொட்டு உணர்த்திமுற்காலத்திலும், இக்காலத்திலும் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

புருவமத்தியில் உயிராற்றலை உணர்ந்து ஐம்புலங்களை அடங்கி உயிர்மீது மனம் வைத்து பிரத்யாகாரம், தாரணா, தியானம், சமாதி என்ற நிலையை ஆக்கினை தவத்தின் மூலம் அடையலாம்.


ஆக்கினை சக்கரத்தைப் பற்றி சித்தர் பாடல்கள்

இருவிழிகள் மூக்கு முனை குறிப்பாய் நிற்க,
    எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது.
    உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்
    கருத்துக்கு இந்நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்று
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
    அத்துவித இரகசியமும் விளக்கமாகும்
                                        வேதாத்திரி மகரிஷி

காரப்பா நரம்பென்ற விழுதுவட்டம்
    கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுமுனையாச்சு

                                        காகபுஜண்டர்


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துக்
    தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்

                                        பத்திரகிரியார்

கையறவிலாது நடுக்கண் புருவப் பூட்டு

    கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுத நாட்டு
ஐவர்மிக ருய்யும்வகை யப்பர் விளையாட்டு
    ஆடுவதென்றே மறைகள் யாடுவது பாட்டு

                                        வள்ளலார்


மேலேறி இரண்டு புருவமத்தியில்
    மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
வாலேறி வட்டமாம் வீடுபோலே
    வளையமொன்று இரண்டிதழ்தான் ஷா ஷிரி வாகும்
ஆலேறி அங்கென்ற அட்சரந்தான் நடுவே
    ஆகாச பூதமாம் பூத பீசம்
மாலேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார்
    மவத்தை தான் சாக்கிரத்தின் வீடுமாமே
                                            போகர் 7000

பூணவே வட்டமதின் நிறந்தான் சொல்வேன்
    புதுமை வெகுபுதுமையடா ஆகாசந்தான்                                                             அகத்தியர் சௌமிய சாகரம்
                            
வீடுமாம் வர்ணமது மேகவர்ணம்
    விளங்குகின்ற தொழிலதுதான் காம குரோதம்
வாடுமாம் லோபமொடு மோகமாகும்
    மதமான மாச்சரியத் தோடஞ்சாகும்
நாடுநான் முகன்மாலுஞ் சிவன் மகேசன்
    நலமாகக் காப்பார்கள் திகைத்து தானும்
தாடுசதா சிவன் தானும் தளவாயாகும்
    தளவாயைக் கண்டாக்கால் சகலமாமே
                                            போகர் 7000

        ஆக்கினை சக்கரத்தின் தன்மைகள்:


அமைவிடம்          : விசுக்திக்கு 11 அங்குலம் மேலே

      ஆக்ஞா என்ற சுழுமுனை உள்ளது

      இது புருவ மத்திக்கு  உள்ளே, அண்ணாக்கிற்கு

      மேலே உள்ள இடம்.

சக்கர அமைப்பு        : இது வட்ட வடிவ சக்கரம். இரு

      பக்கத்திலும் 2 தாமரையிதழ்கள் உள்ளன.

நிறம்                 : ஆகாய நீலம்.

இதழ்கள்              : இரு தாமரை இதழ்கள் உள்ளன.

இதன் உயிர்ச்சக்தி     : நான்கு கலைகள் ஆகும்.

அட்சரங்கள்           : ஷா, ஷிரி.

பீஜ மந்திரம்           : சவ்வும், ஹம்.

சிவ பீஜ மந்திரம்       : .

சுவாசம்              : நாள் ஒன்றுக்கு 3000.

பூதம்                 : ஆகாயம்.

பஞ்ச வித்துகள்        : விந்து தத்துவமாக உள்ளது.

அவத்தை             : சாக்கிரதா உணர்வுநிலை உடையது.

அதிர்வலை           : பீட்டா அதிர்வலை உருவாகும்.

அதி தேவதைகள்      : சதாசிவம் மற்றும் மனோன்மணி

      ஆவார்கள். சதாசிவம் ஆறு ஆதாரத்

      தலங்களுக்கும் தளபதி ஆவார்.


தொழில்              : அருளல்.

செயல்பாடுகள்        : காமம், குரோதம், லோபம், மோகம்,

      மாச்சரியம் ஆகிய 5 செயல்கள்.

இதன் சுரப்பிகள்       : பிட்யூட்டரி மற்றும் பினியல் ஆகும்.


ஆக்கினை சக்கரத்தின் அறிவியல் விளக்கம்:


புருவமத்தியில் பிட்யூட்டரி என்ற நாளமில்லா சுரப்பி இருக்குமிடமாக ஆக்கினை சக்கரம் திகழ்கிறது. இது அனைத்து சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் சுரப்பதியாகவும் திகழ்கிறது. ஆக்கினை சக்கரத்தில் மனம் வைத்து தவம் செய்யும்போது மனமானது அமைதியடைந்து மன அலைச்சுழல் குறைகிறது. இந்த நிலைக்கு ஆல்பா நிலை என்று குறிப்பிடுகிறார்கள் அறிவியல் வல்லுநர்கள். ஒரு விநாடிக்கு 8ல் இருந்து 13 அலைச்சுழல் குறைகிறது.

மனிதன் அமைதியற்ற நிலையில் பீட்டா அலைச்சுழல் 13 ல் இருந்து 50 அலைச்சுழல் வரை இருக்கும். இது உடல் நிலையையும் மனநிலையைம் பாதிப்பு ஏற்படுத்தும்.

மூட்டியே தாயினுட பதத்தைக் கண்டால்
    முஷ்கார மாய்கை எல்லாம் ஒழிந்து போகும்
நாட்டியே எட்டோடே நாலும் கூட்டி
    நாதாந்தத் சித்தியெல்லாம் க்ஷணத்திலாகும்
மாட்டியே தமருக்குள் புகுதலாகும்
    மயிர்ப்பாலம் நெருப்பாறு கடக்கலாகும்
நீட்டியே நிராதாரம் அறியலாகும்
    நிச்சயமாய் குறிகள் எல்லாம் அறியலாமே
                                            போகர் 7000


பொருள்: ஆதாரத் தலங்களில் முடிமூலம் என்ற மேல்மூலம் இந்தத் தலமாகும். விசுக்தித் தலத்தில் கும்பகம் செய்து வாசியை மேலேற்றினால், பத்தாம் வாசல் திறக்கும், வாசி சுழிமுனையை அடையும். இங்கு மனதை நிறுத்தி வாசி யோகம் செய்து, பூரணம் என்ற வாலை என்ற மனோன்மணி தாயைக் காண வேண்டும். இதற்கு எட்டுடன் நான்கினைச் சேர்க்க வேண்டும். மூலாதாரத்தில், வாசி யோகத்தில் நான்கு தாரகலைகளை உருவாக்கி, அதன் பிரயோகத்தில் உடலினுள் எட்டு கலைகளை உருவாக்கி இரண்டையும் சேர்த்து 12 கலைகளை உருவாக்கு.

இதனால் சுழிமுனை நாடி உருவாகும். அதன் வழி குண்டலினி மேலே ஏறும். அதனால் வாலை ஒளி உருவாகும். இந்த வாலை ஒளியானது, மூலாதாரம் முதல் சுழிமுனை வரை, நீண்ட ஒளிப் பிழம்பை உருவாக்கும். இந்த ஒளிப் பிழம்பு, நெருப்பு ஆறு எனப்படும். இந்த நெருப்பு ஆறு, மயிர்ப் பாலம் என்ற இரண்டு புருவ மத்தியைக் கடந்து சகஸ்ராரம் வரை செல்லும். இவ்வாறு வாசி மேலேறுவதால் நிராதாரத் தலம் என்னும் சகஸ்ராரத் தலம் தெரியும்.


நினைக்கவே ஐம்புலனும் ஒடுங்கிப்போகும்
    நோய்மூப்பு சாக்காடு நரைதிரையும் போகும்
கனைக்கவே காயசித்தி வாதசித்தியும் காணும்
    கண்ணிமைக்குள் போறஉயிர் கடுகிமீளும்
அனைக்கவே சாக்கிரத்தில் இருந்து கொண்டு
    ஆயியொடு அப்பனுந்தான் கூத்தும் பார்த்து
தனைக்கவே சரியையோடு கிரியை யோகம்
    சார்ந்ததோர் ஞானமெல்லாம் தானானாரே
                                             போகர் 7000   

இதனால் ஐம்புலனும் அடங்கி ஒடுங்கிவிடும்; நோய்கள் நீங்கும், மூப்பு நீங்கும், நரைத்து வெளுத்த முடி கருப்பாகும், திரை என்றக் கண்மறைப்புத் திரை (காட்ராக்ட்) அகலும், சுருக்கம் மறையும், சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கும். காய சித்தி, வேதைச் சித்தி, யோகச் சித்தி, ஞான சித்தி ஆகிய அனைத்துச் சித்திகளும் கைகூடும். உயிரும் உடலில் நெடுங்காலம் தங்கும். சாக்கிரதா உணர்வில் இருந்து கொண்டு மனோன்மணித் தாயாகிய வாலையின் கூத்தை, சிவசக்தியின் திருநடனத்தைக் காணலாம். அதன் பின்னரே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் கைகூடும். தான் அவன் ஆதல் நிகழும்.

ஆக்கினை சக்கரத்தின் பயன்கள்:

  • முக்காலமும் உணரும் தன்மை (திரிகால ஞானம்) கிடைக்கும். ஞானதிருஷ்டி கடந்த காலத்திற்கு பின்னோக்கிச்சென்று யூகிக்கும் தன்மை, மற்றும் எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை, நிகழ்காலத்தில் தன் பணிகளை ஒருங்கிணைத்து செய்தல்.
  • மனிதனின் தீய ஆறு குணங்களான கோபம், பொறாமை, வஞ்சம், சதிசெயல், பழி வாங்குதல், துரோகம் ஆகியவை மாற்றம் பெறும். இவை நற்குணங்களான கருணை, அன்பு, ஈகை, தியாகம், தர்மம், தயவு ஆகிய  மாற்றி சமுதாயத்தில்  சிறந்த விளங்க  வழி செய்கிறது.
  • மூளையில் உள்ள நியூரான்கள் அதன் செயல்திறன்களை நன்கு ஊக்கப்படுத்தப்படுகிறது. இதனால் ஒருங்கிணைத்தல், அறிவுக்கூர்மை, விழிப்பு நிலை, தேவையற்ற புலன்களின் மீது மனம் செலுத்துதலை கட்டுப்படுத்துகிறது.
  • ஆக்கினை தவத்தால் மனதுக்கு ஒருமை நிலையும், அமைதியும், ஜீவகாந்த ஆற்றல் அதிகரிக்கச்செய்து நோயின்றி நீண்ட நாள் வாழ உதவுகிறது. இதை பல்வேறு சித்தர்கள் அனுபவமாக உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
போமப்பா சகலபிணி ரோகமெல்லாம்
    பூரணச் சந்திரனுட பிறப்பைக் கண்டால்
காமப்பால் கானர்பால் கருணை தங்கும்
    கலையான வாசியது கடக்காதப்பா
சோமப்பால் சொலிக்குமடா அந்தபாலை
    அந்தமுடன் நித்தியமும் கொண்டாயாகில்
தாமப்பா தன்னிலையே தான் தானாகும்
    தானான ஆதார மூலம் பாரே
                            போகர், வைத்திய காவியம் 1000


முதலில் பூரணச் சந்திரன் அதாவது அண்டச் சுண்ணத்தைக் காண வேண்டும். காமப்பால் என்பது அமுரி ஆகும். கானர் பால் என்பது புளி ஆகும். அண்டச் சுண்ணம், அமுரி, புளி மூன்றும் சேர்ந்ததே முப்பு ஆகும். மும்மூலம் என்றும் கூறுவர். இந்த முப்பு உடலில் சேர வேண்டுமெனில் வாசி செய்திட வேண்டும்.

முப்பு உண்டு வாசியும் செய்து வந்தால், குண்டலினியானது ஆக்ஞாவில் இருந்து அமிர்தத்தை உருவாக்கத் தூண்டும். இதனால் சுழிமுனை என்ற ஆக்ஞா தலத்தில் அமிர்தம் சுரக்கும். இந்த அமிர்தம் கீழிறங்கி உள்நாக்குக்குள் இருக்கும் துவாரம் வழியாகத் தொண்டைக்குள் விழும். மரணம் என்ற சாக்காடு அழியும். ஆக்ஞா சித்தியாகும் போது உடலில் உள்ள அனைத்து வித நோய்களும் நீங்கிவிடும். தான் அவன் ஆதல் கைகூடும்.

மேற்கண்ட அனைத்திற்கும் அடிப்படை, மூலாதாரத்தைச் சித்தி செய்தல் ஆகும். எனவே, அனைத்துச் சித்திகளுக்கும் அடிப்படையான மூலாதாரத்தைக் கண்டு, மனத்தை அங்கு நிலைக்கச் செய்துச் சித்திச் செய்திட வேண்டும். அடிமூலம் எனும் மூலாதாரத்தைச் சித்தி செய்துவிட்டு, நடுமூலம் எனும் அனாகதத்தைச் சித்தி செய்ய வேண்டும். அதன் பின்னரே முடிமூலமாகிய ஆக்ஞாவைச் சித்தி செய்தல் வேண்டும். ஆறு ஆதாரத் தலங்களையும் நன்கு விளங்கிக் கொண்டு வாசியோகம் செய்து இறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக!!! 

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக