31 ஜூலை, 2020

காம ரகசியம் 09 - சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயிற்சியின் ஊடான உடலுறவிற்கும் என்ன வித்தியாசம்?




சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயிற்சியின் ஊடான உடலுறவிற்கும் என்ன வித்தியாசம்?

இந்தக்கேள்விக்கு இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான தாந்திரீக குருவான ஒஷோவின் பதிலினையே இந்தப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

சாதாரண உடலுறவும் தாந்திரீக உடலுறவும் அடிப்படையில் வேறானவை. சாதாரண உடலுறவு இரு விடுபடலுக்காக நடைபெறுவது, மூக்கில் சளிபிடித்தால் அதை வெளியேற்றினால்தான் நிம்மதியாக இருக்கும். அதுபோல் உடலில் உருவான காமசக்தியினை வெளியேற்றும் போது ஒருவித விடுபடல் நிகழ்கிறது. இதுவே ஆனந்தமாக கருதப்படுகிறது, ஆனால் இது ஒரு அழிவுச் செய்முறை, ஆக்கபூர்வமானதல்ல. இது ஒரு வித சிகிச்சை போன்றது. உடலுக்கு சிறிய நிம்மதியினை அளிக்கும், அதைவிட வேறு எதுவிதபலனும் பெரிதாக கிடைக்காது.

தாந்திரீக உடலுறவு அடிப்படையில் இதற்கு நேர்மாறானது. அது சக்தியினை வெளிவிடுவதில்லை. விந்தினை உடனடியாக வெளியிட்டு சக்தி இழப்பினை ஏற்படுத்தும் செய்கை அல்ல, சக்தியினை மெதுமெதுவாக ஒன்றச் செய்யும் செயல்முறை. அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, முடிந்துவிடும் ஒரு நிகழ்வு அல்ல.

இது மனிதனின் தரத்தின் தன்மையினை மாற்றிவிடும் செய்கையாகும். இரண்டு விடயங்களை அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள்; ஒன்று உடலுறவில் இரண்டு வகையான உச்சகட்டங்கள் காணப்படுகின்றன. முதலாவது வகை இது உங்கள் மன எழுச்சி உச்சிக்கு சென்று அதற்கு மேல் செல்ல முடியாத நிலையில் ஏற்படுவது. இந்த மன எழுச்சி உச்சத்தினை அடைந்த பின்னர் அது தன்னிச்சை அற்றதாகின்றது. சக்தி உடனடியாக நீக்கம் நிகழ்ந்து வெளியேறி விடுகிறது. இந்த வெளியேற்றம் நிகழ்ந்த உடன் உங்களுக்கு உடல் ஒருவித களைப்பினை அடைந்து ஆறுதல் அடைகிறது. உள்ளே சேமிப்பாக இருந்த பாரம் வெளியே வீசப்பட்ட உடன் ஆறுதல் அடைகிறது. இது ஒருவித நிசப்த நிலையினை உடலில் ஏற்படுத்தும், இயற்கையான உடலை ஆறுதல் படுத்தக்கூடிய செய்முறை. இந்த செய்கையின் பின்னர் ஆழ்ந்த நித்திரை உண்டாகும். மதங்களாலும், ஒழுக்ககளாலும் மனம் அசுத்தப்படாமல் இருந்தால் சாதாரண உடலுறவில் ஒருவித மன அமைதியினை அடையலாம். அல்லாமல் அதை ஒரு பாவமான விடயமாக மனதில் எண்ணிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டீர்கள் ஆனால் அதன் பின் ஒழுங்கான நித்திரை வராது, இது தொடரும் போது மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். இதன் காரணமாக நீங்கள் மனதளவில் பெரும் போராட்டத்திற்கு உள்ளாவதுடன் கனவிலும் இந்த உணர்வுகள் வந்து துன்புறுத்தும். நீங்கள் ஒரு இயல்பான மனிதராகவும் வீணான மதப்போதனைகளால் மனதில் காமம், உடலுறவு போன்ற விடயங்கள் பாபங்கள் என வெட்கம் கொள்ளாத மனிதராக இருந்தால் சாதாரண உடலுறவு ஒரு அருமருந்து. இப்படியான நிலையினால் அடையும் உச்சகட்ட இன்பம் ஒரு வகை.

மற்றைய வகை உச்சகட்ட இன்பத்திற்கு தாந்திரா ஒரு மையமாகும். முதலாவது வகை உச்சகட்டத்தினை "அதி உச்சகட்டம்" என நாம் குறிப்பிட்டால் இந்த வகை "அதி தாழ் நிலை" எனவே குறிப்பிடவேண்டும். தாந்திர உச்சகட்டம் என்பது "பள்ளத்தாக்கு உச்சகட்டம்" என்றே குறிப்பிடவேண்டும். ஏனெனில் சாதாரண் உச்சகட்டம் என்பது மன எழுச்சியினை தூண்டி சக்தியினை வெளியேற்றுவது, தாந்திரீக உச்சகட்டம் என்பது மன எழுச்சியினை குறைத்து அமைதியும் ஆனந்தமும் அடைவது. இது சாதாரண உடலுறவின் மூலம் நிகழ்வதற்கு நேர் எதிரான செயல்முறை. எனினும் இதனை பயிற்சிப்பதற்கு ஆரம்பத்தில் மன எழுச்சியினை ஏற்படுத்துவது அவசியம், மன எழுச்சி இல்லாமல் இந்த செய்முறையினுள் புகுவது இயலாது. ஆகவே இரண்டு வகையான உடலுறவுகளும் ஆரம்பத்தில் ஒரே வகையிலேயே தொடங்கப்பட்டு முடிவு முற்றிலும் எதிரான வகையில் முடிவுறும்.

முதலாவது வகையிற்கு மன எழுச்சி அதிகமாகவும் உச்சியினை அடையும் போது அதிகமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது வகையில் மன எழுச்சி என்பது ஆரம்பிப்பதற்கு மட்டுமே பயன்படும், குறிப்பாக ஆணின் பாலுறுப்பு விறைப்பிற்காக மட்டுமே ஆரம்ப மன எழுச்சி பயன்படும். ஆண் குறித்த நிலையினை அடைந்து உடலுறவு கொள்ளக்கூடிய நிலை அடைந்தபின்பு காதலர்கள் இருவரும் அமைதியான முறையில், உடலினை இணைத்து அசைவற்று மிகுந்த அன்புடன் ஆரத்தழுவி அசைவுகள் அற்று இருத்தல் வேண்டும். ஆணுக்கு விறைப்பு நிலை அற்றுப்போகும் நிலை வரும்போது மீண்டும் மன எழுச்சியினை உண்டாக்கி சிறிதளவு அசைவுகளை உண்டாக்கி பின்னர் ஓய்வு நிலைக்கு வந்து தியான நிலையினை அடையவேண்டும். இப்படி விந்தினை வெளியேற்றாமல் நீண்ட நேரம் அமைதியான நிலையினை அடைந்து பின்னர் இயல்பான தூக்க நிலைக்கு செல்வது "பள்ளத்தாக்கு உச்சகட்ட இன்பம்" எனப்படும். இதில் இருவரும் மிக ஆறுதலான அமைதி நிலைக்கு வருவர். சாதாரண உடலுறவில் இருவரும் மிக்க அமைதி அற்றவராக மன எழுச்சி அதிகரித்து சுமைக்குறைப்பை ஏற்படுத்தும் ஒரு செய்கையாகவே முடிவுறும். இது அவர்களுக்கே ஒரு வித பைத்திய நிலைக்கு செல்வதை போன்று காணப்படும். ஆனால் தாந்திரீக உடலுறவு ஆழ்மான, அமைதியான தியான நிலையினை அடைவிக்கும்.

மனிதனுடைய உயிர்காந்த சக்தி பற்றி தெரிந்திருக்கும் என நம்புகிறேன், ஆணும் பெண்ணும் எதிர் எதிரான சக்திகள், ஆண் நேர், பெண் மறை, யிங் - யங் என அழைக்கலாம். ஒவ்வொன்றும் மற்றையதை நோக்கு பாயும் தன்மை உடையது. இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது ஆழ்ந்த அமைதி உண்டாகும். ஒன்று மற்றதற்கு வலிமையினை ஊட்டி உயிர்ப்பிக்கும். இது அவர்கள் இருவரிலும் சக்தி வாய்ந்த புதிய சக்தியினை உண்டாக்கும். இந்த நிலையில் சக்தி இழப்பு இன்று புதிய சக்தி உருவாக்கம் நடைபெறும். சக்திகள் புதிப்பிக்கப்படும்.

தாந்திரீக உடலுறது நீங்கள் நினைக்கும் அளவிற்கு செய்ய முடியும். சாதாரண உடலுறவு சிறிதளவு நேரத்திற்குள் சக்தி இழப்புடன் முடிவுறும், அப்படி நடைபெற்ற பின்னர் அந்த சக்தி மீளுருவாக்கம் நடைபெறும் வரை மீண்டும் ஈடுபட முடியாது. இது சேமிப்பதும் செலவழிப்பதும் ஆக ஒருவித மன ஆவேசமாகவே இருக்கும். இன்னொரு விடயத்தினை கவனித்தீர்கள் என்றால் மிருகங்கள் உடலுறவை, காமத்தினை எப்போது அனுபவிப்பதில்லை. எந்த விலங்கைப்பார்த்தாலும் காமத்தினால் பேரின்பம் அனுபவிப்பதில்லை. அது ஒரு இயந்திரதனமான செய்கையாகத்தான் இருக்கும், உடலின் இயற்கை உணர்வுகள் அவற்றை உத்வேகப்படுத்தி அவற்றை செய்விக்கும். அதன் பின்னர் அவை ஒன்றை ஒன்று பார்க்காது. மெய்மறந்த இன்பம் என்ற ஒன்றினை அவைகள் அனுபவிப்பதில்லை. சாதாரண செய்கையும் இப்படியானதே!

ஆனால் ஒழுக்கவாதிகளது கருத்து சற்று முரண்பாடானது; காமத்தில் ஈடுபடாதீர்கள், காமத்தினை இன்பமாக்காதீர்கள், அவை விலங்கு உணர்ச்சி" என்று. இது பிழையானது விலங்குகள் எப்போதும் அனுபவிப்பதில்லை, மனிதன் மட்டுமே அனுபவிக்க முடியும். எவ்வளவு ஆழமாக அனுபவிக்கிறீர்களோ அவ்வளவு ஆழமான மனிதத்துவம் உண்டாகும். உடலுறவு தியானத்தன்மை உடையதாகி மெய்மறந்த நிலை உண்டாகும் போது உயர்ந்த நிலையினை அனுபவிப்பீர்கள். ஒரு விடயத்தினை ஞாபகத்தில் கொள்ளுங்கள் தாந்திரா கூறும் உச்ச கட்டம் "பள்ளத்தாக்கு" நிலையுடையது, சாதாரண உச்ச கட்டம் இல்லை.

மேற்கில் ஆபிரகாம் மாஷ்லோவ் இந்த உச்சகட்ட அனுபவத்தியனை பிரபலப்படுத்தியவர் ஆவார். உச்சகட்டத்தினை நோக்கிய மன எழுச்சி ஏற்பட்டல் அதன் வீழ்ச்சியும் நடைபெறும். அதனால்தான் ஒவ்வொரு உடலுறவிற்கு பின்னரும் ஒருவித தளர்வினை அனுபவிக்கிறான், இது இயற்கையான ஒன்றே. உச்சியினை அடைந்தால் வீழ்வது நியதி. ஆனால் இந்த விழ்ச்சியினை தாந்திரீக உடலுறவின் பின்னால் பெறமாட்டீர்கள். இதில் வீழ்ச்சி ஏற்படுவதில்லை. அதற்கு மேல் வீழ்வதற்கு இல்லை ஏனெனில் ஏற்கனவே பள்ளத்தாக்கில்தான் இருக்கிறீர்கள்.

தாந்திரீக உடலுறவின் பின்னர் நீங்கள் உங்கள் சக்தியினை எழுச்சிக்குள்ளாக்குவீர்கள் ஆனால் வீழ்ச்சியினை அடைய மாட்டீர்கள். சக்தி நிரம்பிய நிலையினை அடைவீர்கள். அது உங்களை உயிர்ப்புடையவராகவும் பல மணி நேரம் மெய்மறந்து இருக்க கூடிய தியான நிலைக்கும் இட்டுச்செல்லும். ஆனால் இது நீங்கள் எவ்வளவு ஆழமாக ஈடுபடுகிறீர்கள் என்பதனைப் பொறுத்தே அமையும். இந்த அனுபவம் வாய்க்கும் போது விந்தினை வெளிவிடுதல் சக்தி இழப்புத்தான் என்பதனை உணர்வீர்கள். உங்களுக்கு குழந்தை தேவை என்ற நிலையில் மட்டும் வெளிவிட்டு பயன்படுத்தலாம். இந்த தாந்திரீக உடலுறவின் மூலம் மிக ஆழ்ந்த அமைதியை அனுபவிக்கலாம்.

இந்த அனுபவத்தின பின்னர் உங்கள் மனது இலகுவாகும், வன்முறை அற்றுப்போகும், கோபம் வராது, மன அழுத்தம் வராது. இத்தகைய மனிதன் யாருக்கும் தீங்கான செயலை செய்யமாட்டான். அவனது குணங்கள் மற்றவருக்கு உதவுவதாகவே இருக்கும். மற்றவருக்கு இன்பம் கொடுக்காவிட்டாலும் துன்பத்தினை தரமாட்டான்.

தாந்திரா மட்டுமே இத்தகைய புதிய மனிதனை உலகிற்கு தரமுடியும், இத்தகைய மனிதன் காலத்தினை கடந்தவனாகவும், அஹங்காரம் அற்றவனாகவும், இருமைகளை கடந்தவனாகவும் வளர்ந்து கொண்டிருப்பவனாகவும் இருப்பான்.

இந்தப்பதிவில் ஒஷோ கூறியிருப்பது தாந்திரீக உடலுறவின் அடிப்படைகளை மட்டுமே இதனை சாதிப்பதற்கு மூச்சின் நிலையும் பயிற்சியும் அவசியம். மற்றும் இந்த வித்தை பற்றி திருமூலர் "பரியங்க யோகம்" என்ற தலைப்பில் கூறியுள்ளார். மேலும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் காயகல்பம் என்னும் யோக பயிற்சி மூலம் விளக்கியுள்ளார். பயிற்சி கற்றுக் கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

நண்பர்கள் மனச் சங்கடம் இன்றி திறந்த மனதுடன் இந்த விடயம் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்

காம ரகசியம் தொடரும்...

காம ரகசியம் 08 - சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?





சுக்கில தாதின் உற்பத்தி :

கோடிக்கணக்கான எலும்பு மஜ்ஜை/மற்றும் நரம்புக் கலங்கள் சேர்ந்து சுக்கிலம் உருவாகிறது. ஆயுர்வேத சித்த உடல் தத்துவங்களின் படி உண்ணும் உணவிலிருந்து ஏழுவித உடலில் அடிப்படை தாதுக்கள் உருவாகின்றன. இந்த ஏழும் ரசம், ரத்ம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் என்பனவாகும். நாம் உண்ணும் அன்னத்திலிருந்து இந்த தாதுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக உருவாக்கமடைகின்றன. இவற்றில் ஏழாவது தாது சுக்ல தாது எனப்படுவது. இது மற்றைய ஆறு தாதுக்களினதும் சுருக்கி, வலிமைப்படுத்தப்பட்ட தாது. இதனாலேயே இதன் பெறுமதி அதிகம்!

ஆயுர்வேத நூலாரின் படி சுக்கிலம் உடல் பூராகவும் பரவியுள்ளது. (சர்வ சரீர கதஹ) சுக்கிலமானது பாலில் நெய் கலந்திருப்பதுபோலும், கரும்பில் சக்கரை கலந்திருப்பது போலும் சுக்கிலம் உடலிற் கலந்திருக்கிறது. ஆகவே சித்தர்கள் கூறும் விந்தின் பொருளை இதனுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். உடல் பூராகவும் சுக்கிலம் உள்ளது எனக் கூறப்படுகிறது.

அடுத்து ஆணில் சுக்கிலமானது உடல்பூராகவும் நுண்மையாக படர்ந்திருந்து உடலுறவில் விந்துடன் வெளியேறுகிறது. இதன் மூலம் ஒரு சில விடயங்களை புரிந்துகொள்வோம்.

எமது உடல் உண்ணும் உணவுடன், பிரபஞ்ச பிராணசக்தியினையும் ஈர்த்து சப்த தாதுக்களாக வளர்ச்சியடைகிறது. இந்த தாதுக்கள் ஒவ்வொன்றும் செறிவாக்கப்பட்டு உடலினை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்பரிணாமத்தினை நோக்கி செலுத்தும் பணியினை செய்கிறது.

இப்படி செறிவு படுத்தப்பட்ட (Concentrated) தாதுவான சுக்கிலம் அல்லது விந்து உடல் பூராகவும் நுண்மையாக பரவியுள்ளது. இந்த நுண்மையான பரவல் சாதாரண உடலுறவின் மூலம் வெளியாகிறது. இது மேலே கூறப்பட்ட உதாரணத்தில் பாலில் நெய் கலந்திருத்தல் என்றால் பால் உடல், நெய் சுக்கிலம், சாதாரண உடலுறவில் பாலை கடைந்து நெய் எடுக்காமல் பழுதாக்குவது போலவே மனிதன் வாழ்கின்றான். ஆனால் தாந்திரீகம், பரியங்க யோகம் பயின்றவன் இந்த உடலெங்கும் பரவியுள்ள சுக்கிலத்தினை சரியான பொறிமுறையான கடைதல் (யோகசாதனை) மூலம் உயர்ந்த மனோ ஆன்ம சக்தியான நெய்யினை பெற்றுக்கொள்ளவேண்டும்.

பால் கறந்தபின்பு குறித்த நேரத்திற்குள் காய்ச்சி, உறையவைத்து தயிராக்கி, தயிரை கடைந்து நெய்யாக்கிக் கொள்ளவேண்டும். அல்லாமல் அதனை ஒரே பாத்திரத்தில் இட்டு பல நாட்கள் வைத்திருந்தால் அது கெட்டு நாற்றம் எடுக்கத்தொடங்கி விடும். இதைப்போலவே சுக்கிலத்தின் தன்மையும், உண்ட அன்னமும், பிராணசக்தியும் உடலினுள் சப்த தாதுக்களை உருவாக்கி, ஒன்றில் இருந்து ஒன்று செறிவாக்கி, இறுதியாக மன, பிராண, புத்திகளை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்ந்த சக்தியாக்கும் சுக்கிலத்தினை உருவாகிறது. இதனை சரியான முறையில் கடைந்து பக்குவப்படித்தி நெய்யாக்கி பயன்படுத்த முடியும் எனில் நல்லது, இல்லாமல் அதனை வலிந்து அடக்காமல் இயல்பான வழியில் விட்டுவிடவேண்டும். அப்படி அடக்கினால் பால் கெட்டு வீணாகி விடுவது போல் உடலிலும் மனத்திலும் நோயினை தோற்றுவித்து விடும். இதனை உடலில் வரும் பதின்நான்கு வேகங்களை அடக்குவதால் தோன்றும் நோய்களைப்பற்றி சித்தர்கள் விவரித்துள்ளதன் மூலம் ஒப்பீட்டு அறியவும்.

அடுத்து ஆயுர்வேத நூலார் பெண்களின் உடலில் உள்ள சுக்கிலத்தினைப்பற்றிய குறிப்பினை தருகிறார்கள். அது "சுக்கிலதாதுவானது உடலுறவின்போது பெண்களில் சுரந்து வெளியாகிறது, ஆனால் அது கர்ப்ப உற்பத்தியில் பயன்படுவதில்லை" என்பதாகும். இதன் மூலம் சுக்கிலம் என்பது உடல் சுரப்பும் அதனுடன் கலந்த பிராண சக்தியே என்பது புலனாகிறது. ஆயுர்வேதத்தில் சித்தர்கள் வலியுறுத்திக்காட்ட வந்த விடயம் "உடலுறவில், விந்து வெளியேற்றத்தில் அதிக பிராணசக்தி உடலில் இருந்து வெளியாகின்றது" என்பதே அன்றி விந்தினை அடக்குவதை அல்ல! இப்படி வெளியாகும் சக்தி சரியான முறையில் ஈடுகட்டப்படாவிட்டால் உடல் நோயினை, வயதாதலை நோக்கி விரைவாகச்செல்லும் என்பதினை புரிந்து கொள்ளவேண்டும்.

சுக்கிலத்தினை கடைந்து நெய்யாக்கும் செயல்முறைதான் "தியானம்", தியானம் என்பதன் பொருளும் பலரும் பலவாறாக விளங்கப்படுத்தி இருக்கிறார்கள், அதுபற்றி வேறொரு பதிவில் தனியாக விளக்குவோம்.

இங்கு நாம் கூறவரும் விடயத்தின் சுருக்கம் இதுதான், நீங்கள் சரியான பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டுமாயின் சரியான தியானத்தினை மட்டும் செய்யுங்கள். அதனைவிடுத்து வேறு எந்த செய்முறையும் செயற்கையான முறையில் உங்கள் உடலின் வேகத்தினை அடக்கும் செய்முறைதான். இப்படி தியானம் செய்யும் போது விந்து நீக்கும் காம எண்ணம் மனதில் எழுந்தால் அதனால் சலனமுற்று தவறு செய்ததாக வருந்தி தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல், மீண்டும் மீண்டும் முயற்சிக்கவேண்டும். அப்படி முயற்சிக்கும் போது ஒரு நாள், ஒரு பிறப்பில் அது கைகூடும், அதுவன்றி விவேகானந்தர் பிரம்மச்சாரியாக இருந்தார் என்று நானும் அதுபோல இருப்பேன் என்று உங்கள் இயல்புக்கு மாறாக இருக்க முயலக்கூடாது,விவேகானந்தர் போன்றோர் பல பிறப்புகளில் எடுத்த முயற்சி, நீண்ட தியான சாதனையே அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்தது என்று உணர்ந்து சரியான வழியில் முயற்சிக்க வேண்டும். அதேவேளை மனிதனின் செயற்பாட்டில் உடலுறவில்தான் அதிக சக்தி வெளியாகிறது என்பதாலேயே அதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்படி ஆன்மீகத்தில் எதுவும் விருப்பமில்லை என்றால் அதீத உணர்ச்சிக்கு அடிமையாகி (obsession), உள்ளீட்டினை (Input) விட அதிக வெளியீடு (output) செய்யாமல் மிதமாக (balanced) காமத்தினை அனுபவிக்க வேண்டும்.

காம ரகசியம் தொடரும்...

25 ஜூலை, 2020

காம ரகசியம் 07 - விந்து/சுக்கிலம் என்பதன் பொருளை விளங்கிக்கொள்ளுதல்




இந்தப்பதிவுகள் காமத்தினை அடக்கி உடல், மன நோய்கள் அடையாமல் எப்படி யோகமாக்கி உயர்ந்த சக்தியாக பயன்படுத்துவது என்ற அறிவினை இந்தத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அறிவதற்காக வேண்டி பதிவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய சமூகத்தில் சரியாக படிக்காத சித்த வைத்தியர்களாலும், மேலைத்தேய சிந்தனையாலும் எமது முன்னோர்கள் கூறிய ஒழுக்கங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதில் சித்தர்கள் கூடிய விந்து, பித்தம் என்ற வார்த்தைகள் தற்கால நவீன மருத்துவக் கருத்துகளுடன் ஒப்பிட்டு பின்னர் அதன் மூலம் சித்தர் பாடல்களின் மருத்துவத்தின் பொருளினை நோக்கும் போது குழம்பி வந்த பெருங்குழப்பமே எஞ்சுகிறது.

உதாரணமாக பித்தம் என்றால் சித்த ஆயுள் வேதத்தில் கருதும் பொருள் வேறு, அதே தற்காலத்தில் கல்லீரலினால் சுரக்கப்பட்டு கொழுப்பினை சமிபாடடைய செய்யும் பித்தம் என்ற பொருளில் மட்டும் நோக்கினால் ஏற்படும் புரிதல் வேறு.

இப்படி தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட பொருள்தான் விந்து/சுக்கிலம் என்ற வார்த்தைகளும். இந்த தவறு தமிழர்களை குழப்பிய புண்ணியம் தமிழ் நாட்டில் இருந்த தனித்தமிழ் புரட்சியாளர்களுக்கும் பங்கிருக்கிறது. எமக்கு தெரிய எமது பாட்டனார்காலத்து வைத்தியர்கள், பண்டிதர்கள், புலவர்கள் சரியான அறிவு பெறுதலுக்கு எதுவித காழ்ப்புணர்வு நிலையும் இன்றி தமிழ்,சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்களாக இருந்தமையினால் புரிதலில் ஏற்படும் தவறுகளை இலகுவாக அறிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். 

தனித்தமிழையும், தர்க்க அறிவினால் மட்டும் கட்டியெழுப்பப்பட்ட நவீன மனதினையும் வைத்துக்கொண்டு சித்தர்களது பாடல்களது பொருளை தெரிந்து கொள்ள நினைக்கும் தற்காலத்து சிந்தனாவாதிகள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவோ, கிணற்றுத் தவளைகளாகவோ தான் இருப்பார்கள். இதனால் சும்மா பழம் பெருமை பேசலாமேயன்றி பிரயோசனம் எதுவும் இல்லை. சித்தர்களது வரலாற்றினை எடுத்து நோக்குபவீர்களாக இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். போகர் சீனா, யோகபு எனும் யூகி முனி அரபியா, கோரக்கர் கோரக்பூர் என ஓவொருவரும் வேறு வேறு கலாச்சாரத்தில் இருந்து வந்து தமிழில் எழுதி வைத்துச்சென்றார்கள்.

தமிழில் உள்ளதற்காக அனைத்தும் தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று கூறமுடியாது. இதற்கு உதாரணமாக தற்கால நிலையினை விளங்கிக் கொள்ளலாம். தற்போது அறிவியல், கல்விகள், கண்டுபிடிப்புக்கள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது, இரண்டாவது மொழியாக பிரஞ்சு மொழி இருக்கிறது. இரண்டையும் கற்றுக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம், உலக அரங்கில் எமது அறிவினை பகிரவும் விருத்தி செய்து கொள்ளவும் முடியும். அதுபோல் அக்காலத்தில் எல்லாக் கலைகளும் பாரததேசத்தினை மையமாக வைத்து தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ஆராயப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். அவற்றை பல மொழி, கலாச்சாரத்தினை சார்ந்தவர்களும் செய்திருக்க வேண்டும். இந்த வரலாறும் உண்மையினையும் மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் இங்கு கூறவந்ததன் கருத்து; சித்தர்களது பாடல்களை, அறிவியலை பரந்த மனதுடன் எதுவித முன் துணிபுகளும் இன்றி அணுகவேண்டும் என்பதனை வலியுறுத்திக்கூறவே!

இந்த வகையில் விந்து/சுக்கிலம் என்பது பற்றி எவ்வாறான தவறான கருத்து தமிழர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். இதனை சரியாக புரிந்து கொள்வதற்கு நாம் ஆயுர்வேத மூல நூற்களை சற்று ஆராயவேண்டும்.

காம ரகசியம் தொடரும்...



காம ரகசியம் - 06 கட்டுப்படுத்தப் பட்ட பிரம்மச்சரியம்



காம ரகசியம் -06 கட்டுப்படுத்தப் பட்ட பிரம்மச்சரியம்

இன்றைய இளைஞர்களில் குறிப்பாக ஆன்மீக நம்பிக்கையுடையவர்கள், யோகம் பழகவேண்டியவர்கள், சாதனை செய்து இறை அருள் பெறவேண்டும் என நினைப்பவர்களுக்கு உள்ள விடைதெரியாத பிரச்சனை "பிரம்மச்சரியம்" மிக அதிகமாக தவறாக விளங்கிகொள்ளப்பட்ட விடயம் பிரம்மச்சாரியம், இதனை விந்தடக்கம் என்று கூறுகிறார்கள், இது முற்றாக தவறான விடயம். பிரம்மத்தினை ஆச்சரிக்க (சார்ந்திருக்க) எதுவித முயற்சியும் இல்லாமல் நடப்பதே விந்தடக்கமே அன்றி வலிந்து விந்து வீணாகிவிடும் என அடக்குவது பிரம்மச்சரியம் ஆகாது. ஆக இந்தப்பதிவில் பிரம்மச்சரியம் பற்றிய ஒரு சில கருத்துக்களைப் பார்ப்போம்.

பிரம்மச்சரியம் என்பது இயல்பாக வரவேண்டியது, வலிந்து அடக்குவதல்ல, அப்படி அடக்கப்பட்ட காம உணர்வு எந்தவிதத்திலும் மனிதனுக்கு பயன்படமுடியாது. ஒரு அழுத்தமாக ஆழ்மனதில் பதிவுற்று வேறு ஒரு வழியில் வெளிப்படவே முயலும். இதனால் உள/மனப்பிரச்சனைகள் அதிகரிக்குமே அன்றி எதுவித ஆன்ம மன முன்னேற்றம் இருக்காது.

சித்தர் இலக்கியத்தில் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று உள்ளதே அப்படி என்றால் அது பிழையா என்று கேட்பவர்களுக்கு அதே சித்தர்கள் அடக்ககூடாத உடலின் 14 வேகங்களி ரேதஸ் எனும் விந்தும் ஒன்று என்பதனை அறிவார்களா? சித்தர்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள், எதையும் முழுமையாகப் படிக்காத அறிவாளிகள்தான் அதனை பிழையாக வியாக்கியானப்படுத்தி விட்டார்கள். அப்படியானால் விந்தினால் ஒரு பிரயோசனமும் இல்லையா? அப்படியில்லை, ஒரு மனிதனின் ஆன்ம முன்னேற்றத்திற்கோ, பௌதீக முன்னேற்றத்திற்கோ உரிய மாபெரும் சக்தி விந்தில் தான் இருக்கிறது. சாப்பிடும் அன்னம், சப்த தாதுக்களாக மாறி இறுதியில் அதிஉயிர்ச்சத்து உள்ள விந்தாகவே மாறுகிறது. இதனை வலிந்து கட்டுப்படுத்துவதே தவறு என்பதனை விளங்கி கொள்ளவேண்டியது.

இதனை சற்று விளங்கிக்கொள்வோம், இந்த அரிய சக்தியினை எப்படி உயர்ந்த சக்தி ஆக உருமாற்றுவதுதான் பிரம்மச்சாரியமே அன்றி வலிந்து விந்தினை உடலில் இருந்து வெளியேறாமல் தடுக்கும் எதுவும் பிரம்மச்சரியம் இல்லை.

இப்படி சாத்தியமாகக்கூடிய ஒரே சாதனை தியானம் மட்டுமே, தியானத்தின் மூலம் தானகவே மனம் பிரம்மத்தினை ஆச்சரிக்க, விந்து கட்டுப்பட்டு உயர் சக்தியாக உருமாறும். உண்மையாக சரியான தியானத்தினை செய்து வரும் யாரும் விந்தடக்கத்தினைப்பற்றியோ, பிரம்மச்சரியத்தினை பற்றியோ கவலைப்படத் தேவையில்லை!

யோகம் பழகவிரும்பும் ஒவ்வொருவரும் தமது உடலினதும், மனதினதும் இயக்கங்களை சரியான முறையில் புரிந்துகொண்டு தமக்கு சாதகமாக்கும் வழியில் முயலவேண்டுமே அன்றி போர் புரியக்கூடாது!

காம ரகசியம் தொடரும்...

காம ரகசியம் - 05 காம உணர்வினை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்





எனக்கு இப்போது எழுபது வயதாகிறது, ஆனால் மனதில் காமஉணர்வுகள் அதிகரித்தவண்ணமே உள்ளது, நான் என்ன செய்யட்டும் என்றார்?

நல்ல கேள்விதானே!

அதற்கு ஒஷோ அளித்த பதிலும் விளக்கமும் பின்வருமாறு;

"அன்பரே அப்படியாயின் அதனை பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளூங்கள், அதனை மறுக்காதீர்கள், அதனை பெரிதாக கவலைப்பட்டு அடக்க முற்படாதீர்கள், இந்த நிலமை ஏன் ஏற்படுகிறது என்றால் இளமைக்காலத்தில் அதீதமாக காமத்தினை அடக்கியதால் இப்போது வயோதிகத்தில் அவை வலிமை பெற்று உங்களை ஆட்டிப்படைக்கிறது.

இதேபோல் முன்னொரு சம்பவம் ஏற்பட்டது, நான் டெல்லியில் இருக்கும் போது என்னைக்காண முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க இளவயது துறவி ஒருவர் வந்திருந்தார். அவர் பூரணமான பிரம்மச்சரியத்தினை ஏற்றிருந்தார். அவர் என்னிடம் கேட்க விரும்பியது, "என்னுடைய ஒரே பிரச்சனை கடந்த சில வருடங்களாக நான் எனது மனதில் எழும் காம எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன், இது ஏன் என உங்களால் கூற முடியுமா? இன்னும் எவ்வளவு காலத்தில் காம எண்ணம் அடங்கும்? இப்போது நான் 35 வயதுகளில் உள்ளேன். இப்படியான மனப்போராட்டத்தில் ஈடுபட்டு சோர்வடைவதை தவிர வேறு எதுவும் எனக்கு ஏற்படவில்லை, இன்று வரை நான் வெற்றியடையவில்லை. இன்னும் எவ்வளவு வருடம் உள்ளது?

அதற்கு ஓஷோ அமமைதியாக "இதனை என்னிடம் கேட்காமல் இருப்பது மிக நல்லது, ஏனெனில் இன்னும் உண்மையான பிரச்சனை கட்டத்திற்கு நீங்கள் வரவில்லை, உங்களுடைய உண்மையான பிரச்சனை இன்னும் ஆரம்பமாகவில்லை, அது 42 வயதளவில் ஆரம்பமாகும்" என்றார்.

அதற்கு அவர் "நீங்கள் என்ன சொல்லவருகிரீர்கள்?" என்றார்.

ஒஷோ, "இப்போது நீங்கள் இளமையாக உள்ளீர்கள், முழுமையாக சக்தி உடையவராக இருக்கிறீர்கள், உங்களால் உங்கள் காம உணர்வினை வலிந்து அடக்க முடியும், ஆனால் 42 வயதளவில் உங்கள் உடல் பலம் குறையத்தொடங்கும், மெது மெதுவாக வலிமையினை இழப்பீர்கள், பலமற்றுப் போவீர்கள். ஆனால் உங்கள் அடக்கப்பட்ட காம உணர்வு மெது மெதுவாக சேர்ந்து வலிமை பெற ஆரம்பிக்கும், அந்த நிலையிலேயே உங்களது உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும்" என்றேன்.

அதற்கு அவர் "இப்படி யாரும் எனக்கு கூறவில்லை, அனேகர் நாற்பத்து ஐந்து வயதை அடையும் போது காம உணர்வினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வந்து விடும் என்றல்லவா கூறுகின்றனர், அப்போது இந்தப் பிரச்சனை தீர்ந்து விடும்" என்றார்.

அதற்கு ஓஷோ "அவர்களுக்கு சக்தி செயற்படும் விதம் தெரியவில்லை, ஒரு சக்தியினை அழுத்த அழுத்த அது அந்த அழுத்தங்களை சேர்த்து வலிமையாகிறது, இப்படி நடக்கும் போது அழுத்துபவர் சக்தியினை இழக்கின்றார், அழுத்தப்படுவது சக்தியினை பெற்று வலிமையடைகிறது, பின்னர் அழுத்தியவர் வலிமையினை இழக்கும் போது அது தன் முழு வலிமையுடன் தாக்க ஆரம்பிக்கும், இந்த விதத்திலேயே காம உணர்வு செயற்படும்".

அதன்பின்னர் அவர் சென்று விட்டார், பத்து வருடங்களின் பின்னர் நான் வேறொரு இடத்தில் இருக்கும்போது என்னைக்காண வந்தார், வந்தவர் என்னுடைய பாதங்களை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க கூறினார்;

"நீங்கள் அன்று கூறியது மிகச்சரி! இப்போது நான் எனது உடல் வலிமை குறைந்து விட்டது, ஆனால் மனதில் அதிக காம உணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. இப்போது முன்னரைப்போல் என்னால் சண்டை பிடிக்கமுடியவில்லை. நான் வலிமை இழந்து விட்டேன், அன்று நான் உங்களுடைய கருத்தினை கேட்கவில்லை, எல்லோரும் சொன்னார்கள் நாற்பத்து வயதிற்கு மேல் காம எண்ணம் முற்றாக குறைந்து விடும் என்று அவர்கள் எவ்வளவு அறிவிலிகள், காம உணர்வு எப்படி செயற்படுகிறது என்பதனைப்பற்றி தெரியவில்லை! என்று வருத்தப்பட்டார்.

ஆகவே அன்பரே, உங்களுடைய காம உணர்வும் பலமாக அடக்கப்பட்டுள்ளது, ஆதலால்தான் இந்த பிரச்சனை வருகிறது, இவ்வாறுதான் மதங்கள் போதிக்கின்றன. மதத்தினை பின்பற்ற வேண்டுமானால் நீங்கள் உங்கள் இயற்கையான இச்சைகள் எல்லாவற்றையும் அடக்க வேண்டும். பாருங்கள் இந்த எழுபது வயதில் எப்படியான சிறுப்பிள்ளைத்தனமான ஆசை உங்களில் எழுகின்றது என்று! அடக்கப்பட்ட உணர்வுகள் வயது கூட கூட அதிகமாக வர ஆர்ம்பிக்கும். இந்த நிலை அதிகரித்தால் 24 மணி நேரமும் உங்களை காம உணர்வு ஆட்டிப்படைக்க ஆரம்பிக்கும். இதைத்தான் தற்போதைய சமூகம் உங்களுக்கு செய்துள்ளது. சமூகம் உங்களுடைய இயல்பான உணர்ச்சிகளில் இருந்து உங்களை பிரித்து இயல்புக்குமாறாக்கி உள்ளது.

இந்த வயதிற் கூட இந்த நிலையில் இருந்து மீள்வது கடினமானதல்ல! அதற்கான முதற்படி அதனைப்பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதும், அதனைப்பற்றி வெட்கப்படுவதனை தவிர்ப்பதுமே! ஏன் காமம் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒன்று, நீங்களாக உருவாக்கி கொண்ட உணர்ச்சியல்ல! ஆகவே அது முற்றிலும் சரியானது! ஆகவே அதனைப்பற்றி ஏன் வெட்கப்படுகிரீர்கள், அது உங்களின் இயல்பான ஒரு பகுதியே!

நீங்கள் வெட்கப்பட வேண்டுமானால், உங்களை காமத்தினைப்பற்றி வெட்கப்படவைத்த உங்கள் மத குருவைப்பற்றியும், போலியான மதக்கோட்பாடு பற்றியும், அவர்களது அறியாமை பற்றியும், அதனை வைத்து அவர்கள் உங்களை எப்படி ஆளூகின்றார்கள் என்பதனை, இதனை விட்டு வெளிவர இயாலாமையினால் அவர்கள் செய்யும் மூடத்தனம் பற்றியும் நினைத்து வெட்கப்படுங்கள், ஆனால் உங்களில் காம உணர்வு இருக்கிறது என்பதனை நினைத்து வெட்கப்படாதீர்கள், அது இயற்கைதன்மை உடையது, ஆனால் நீங்கள் ஒரு மதத்துடன் இணைத்துக்கொண்டு இப்படி சிந்திப்பது இயற்கைக்கு மாறானாது. இப்படி மதத்தின் காரணமாக எழுபது வருடங்களாக உங்களது இயல்புக்கு மாறாக நடக்கும் தன்மையினை எண்ணி வெட்கப்படுங்கள்!

உங்களில் உள்ள காமத்தினை ஆம் என ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அதனை ஆம் என ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரேயொரு சாத்தியமாகும். அதுவே அதனைக்கடக்க எடுக்கும் முதலாவது படிக்கல்லாகும். அந்தக்கல்லில் கால்வைக்காமல் கடந்து அடுத்த கரைக்கு செல்லமுடியாது. காமத்தினை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதனை கடப்பதற்கான படகில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் மதத்தினால் ஏற்படுத்தப்பட்ட பயங்களினை குறையுங்கள், உங்களுடைய வீணாண நம்பிக்கைகளை குறையுங்கள், உண்மைத்தன்மையினை ஏற்றுக்கொள்ளூம் தன்மை உடையவராக மட்டும் இருங்கள்.

உங்கள் உடம்பிற்கு எழுபது வயதானாலும் உங்களுடைய காமம் எழுபது வயது இளமையாக இருக்கிறது. இந்த நிலையில் அது வலிமையாகவும் நீங்கள் வலிமையற்றும் இருக்கிறீர்கள், அவ்வாறு இருக்கும் போது அதனை இயல்புடன் ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரு வழிமுறையாகும். அதனை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு நேரம் கடந்து விட்டது என்று வருத்தப்படவேண்டியதில்லை. இதன் அர்த்தம் கட்டாயம் அந்த இச்சையினை பூர்த்தி செய்ய உடல் ரீதியாக பூர்த்தி செய்யவேண்டும் என்பதல்ல! உங்கள் மனதளவில் முழுமையாக அதனை ஏற்றுக்கொண்டு அதனைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது. இப்படி நீங்கள் ஏற்றுக்கொள்ளூம் போது இதுவரை இப்படி அடக்கப்பட்ட காமத்தினால் ஏற்பட்ட காயங்களும் குணப்படுத்தப்படும். இதனை தவறாக புரிந்து கொண்டு இந்த இச்சையினை உடல்ரீதியாக பூர்த்தி செய்ய முயலும் போது உங்கள் சிக்கல்களை மேலும் அதிகரிக்குமே அன்றி குறைக்காது, மேலும் ஆபத்து நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்தக்கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், காமத்தினை இயல்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் எனபதன் அர்த்தம், உங்கள் மனதில் அது எழும்போது அதனை தவறாக, பாவமாக எண்ணாமல் சாட்சிபாவமாக பார்த்து வருதலே அன்றி அதனை உடனடியாக தீர்க்கும் வழியில் இறங்குவதல்ல, அது உங்களை மேலும் மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும், சொல்லவருவதன் சுருக்கம், உங்களில் இயல்பாக ஏற்படும் எண்ணத்தினைப்பற்றி வெட்கம், வெறுப்பு போன்ற எதிர் எண்ணங்களை கொள்ளாமல் மதித்து ஏற்றுக்கொள்ளுதலே!

பொதுவாக இயற்கையின் நியதியில் சக்திகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் எம்மை பலப்படுத்திக்கொள்ளலாம், அப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களுடைய சக்தியில் துரித அதிகரிப்பினை ஏற்படுத்தலாம், காமம் என்பது உங்களிடமே உள்ள இயல்பான அதீத சக்தி, அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதீதமாக பலம் பெறலாம். உங்களுடைய சக்தியினுடனேயே சண்டை பிடிப்பது உங்களை மேலும் பலவீனமாக்கும், இப்படி சண்டை பிடித்தே பல வருடங்கள், பல பிறப்புகள் சென்று விட்ட பின்னர் எப்போது இறைவனை அடையப்போகிறீர்கள்!

முதலாவதாக காமத்தினை பாவம், பிழை எனப் புலம்புவதை நிறுத்துங்கள். அதனுடன் வீணாக சண்டை பிடித்து உங்கள் சக்தியினை விரையப்படுத்துவதை நிறுத்தி அதனை மதிக்கத்தொடங்குங்கள்.

ஒரு ஆணை இயல்பாக இயற்கைக்கு மாறாக அன்றி வளரவிட்டால் அவன் தனது பதின்நான்காவது வயதில் பாலியல் முதிர்ச்சி அடைகிறான். ஆனால் இன்று இயற்கைக்கு மாறான சமூகம் மனிதனி பிஞ்சில் பழுக்க வைக்கின்றன. இன்று மேலை நாடுகளில் மட்டுமன்றி கீழைத்தேய நாடுகளிலும் ஆண்பிள்ளைகளும், பெண்களும் தமது வயதுக்கு முன்னரே பாலியல் முதிர்ச்சியினை அடைகின்றனர். இந்தக் காரியத்தினை இன்றை திரைப்படங்களும், இன்டர்நெட் என்பன தாராளமாகச் செய்கின்றன.

இந்த தாராளமயமாக்கப்பட்ட பாலியல் படங்கள், ஊடகங்களினால் இன்றைய இளைய சமூகம் இயற்கைக்கு மாறான பாலியல் வளர்ச்சியினை பெறுகிறார்கள். இயற்கை உடலினை பதின்நான்கு வயதில் தயார்படுத்து முன்னர் இந்த செயற்கை ஊடகங்கள் மனதில் பாலியல் எண்ணங்களை விதைக்கின்றன, இதனால் உடலிற்கும் மனதிற்குமான போராட்டம் ஆரம்பமாகிறது. இதனால் தனது சக்தி முழுவதையும் வெகுவாக இழந்து எதற்கு பயன்படமுடியாத உடலினையும் மனதினையும் பெற்றவர்களாக ஆகின்றனர்.

சற்று பழமைவாத போக்குடைய மதவாதிகள் இதற்கு நேர்மாறான மதத்தின் பெயரால் பாலியல் முதிர்ச்சியினை அடைந்த இளைஞர்களையும் காமத்தினையும் அதன் செயற்பாட்டினையும் பாவம் என பயமுறுத்தி அவர்கள் உடல் மனப்போராட்டத்தினை ஏற்படுத்து விடுகின்றனர். அதனால் இருவித மனப்போராட்டத்தில் சக்தியினை இழந்து தம்மை அறியும் தகமையினை அடையாது போகின்றனர்.

இயல்பான சமூகம் ஒருவனுடைய பதின்நான்காவது மனதில் அவன் உடல் தயாராகும் போது மனதினையின் தயார்படுத்தும் நிலையில் அமைந்திருக்க வேண்டும். காமத்தினை பயமுறுத்தல் இன்று அதன் செயற்பாடுகள் எப்படி என்பதினை கற்பிக்க வேண்டும். இந்த பயமுறுத்தும் மதவாதிகளின் தலையீடு இன்றியும், காமத்தினை தலையில் ஏற்றி தம்மை காயப்படுத்திக்கொள்ளாமலும் இயல்பாக வாழ்த்தொடங்கும் ஒருவன், வாழ்வில் இன்பத்தினையும் அனுபவித்து, ஆழமான அனுபவத்துடன் தனது உடலின் சக்தி நாற்பத்து ஐந்து வயதுகளில் குறையத்தொடங்கும் போது தியானத்தில் ஆழமாக சென்று சமாதி எனும் பேரானந்த நிலையினை அடையும் தகுதியினைப்பெறுகிறான். அந்த வயதில் நீங்கள் மிகவும் ஆழமாகவும், முதிர்ச்சி அடைந்தும், மையம் கொண்டவராகவும், மனக்குழப்பம் அற்றவராகவும் இருப்பீர்கள்.

ஆகவே பயமற்று உங்கள் நிலையினை ஏற்றுக்கொள்ளூங்கள்! இப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களை பயமுறுத்தும் எதுவும் தன் சக்தியினை இழந்து உங்களுக்கு வசமாகும்!

காம ரகசியம் தொடரும்...

6 ஜூலை, 2020

காம ரகசியம் - 04: ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் முறை



ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் விதம்

வசந்த காலத்தில் ஆண் குயில் கூவுகிறது. அது எதற்காக என்று நீங்கள் நினத்துப்பார்த்ததுண்டா? அது தனது காமத்திற்கான இணையினை தேடுகிறது. குயில் இவ்வாறு செய்வதனை யாரும் தவறு என்று கூறுவதில்லை. பூக்கள் ஏன் மலர்கின்றன? வாசத்தினை பரப்புகின்றன? அவை தம்மை விளம்பரபடுத்தி கொள்கின்றன, " நான் மலர்ந்து விட்டேன், என்னிடம் தேன் உண்டு, வாசம் உண்டு, வண்ணத்தி பூச்சிகளும், தேனீகளும் வரும்படி அழைக்கிறது. ஏன் அது தன்னிடம் உள்ள மகரந்ததினை பரப்பவேண்டும்.

இதைப்போல் மயில் தோகை விரித்தாடுவது எதற்காக? அப்படி வானவில் நிறமுடைய மயில் தோகை விரித்தாடும் மயில் ஆண் மயில் என்பதினை உணர்ந்திருக்கிறீர்களா? அது ஏன் ஆடுகிறது? பெண் மயிலினை கவர்வதற்காகவே! இயற்கையில் ஆண் இனம் எல்லாம் அழகானவையே, இயற்கையில் ஆண்தான் தன்னை நிரூபித்து பெண்ணை கவர வேண்டி உள்ளது. ஆனால் மனித இனத்தில் இந்த நிலை தலைகீழாக உள்ளது. பெண்ணே ஆணைக் கவர்கின்றாள். உண்மையில் பெண் தன்னை வேறுவிதத்தில் அழகுபடுத்த தேவையில்லாதவள். அவள் பெண்ணாக இருக்கும் போதே அழகாகி விடுகிறாள். ஆக மனிதகுலத்திலும் இயல்பில் ஆணே அழகாக இருக்கவேண்டியவன், அவனை நோக்கியே பெண் கவரப்பட வேண்டியவள்.

உதாரணமாக ஒரு பணக்காரர் தனது மனைவியுடன் வெளியே செல்லும் போது கவனித்தீர்கள் என்றால் தெரியும், மனைவியிற்கு பலவித அலங்காரம் செய்து, ஒப்பனைகள் செய்து அழகாக்கி காண்பவர் காணும் வண்ணம் தன் மனைவி அழகானவள் என விளம்பரப்படுத்தி செல்வார், இதன் உள்ளார்ந்த நோக்கம்தான் என்ன? தன் அழகான மனைவி மூலம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்கிறார். இது ஒரு வியாபார உத்தி! இந்த நிலையில் ஆண் அடிமையாகிறான், அவனுடைய அழகு, அவனுடைய செல்வம், அவனுடைய திறமை மறைக்கப்படுகிறது. எப்போது மனிதன் இயற்கை விதிகளை மீறி செயற்படுகிறானோ அதன் விளைவுகளை அவன் கட்டாயம் அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கும், அதில் இயற்கை எதுவித ஏற்றத்தாழ்வினையும் காட்டுவதில்லை.

இப்படியான அடிமைப்பட்ட தாழ்ந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஆணிற்கான ஒரேவழி தியானம் மட்டுமே! தியானித்தல் இல்லையென்றால் ஆண் தன் அழகை இழந்து பெண்பின்னால் பைத்தியம் ஆகத்தொடங்குகிறான். ஆனால் ஆணால் இலகுவாக தியானிக்க முடிவதில்லை, பெண் இருத்தி தியானிப்பதைவிட ஆண் தியானத்தில் அமர்வது மிகக்கடினம். நான்கு ஐந்து ஆண், பெண் பிள்ளைகள் பெற்ற தாய்மாரைக்கேட்டால் சொல்வார்கள் வயிற்றில் பெண் பிள்ளை இருக்கும் போது மிகவும் அமைதியாக இருக்கும், ஆனால் ஆண் பிள்ளை இருக்கும் போது அடிக்கடி தாயின் வயிற்றை கண்டபடி உதைத்தவண்ணம் இருப்பான்.

பெண் இலகுவாக ஆழமான தியானத்திற்கு செல்லக்கூடிய தன்மை உடையவள், அதேவேளை அவர்களுடைய காம சக்தி மறைத்தன்மை உடையது. அதனால் அவர்களை காமம் தூண்டி அதீத சக்தியினை வேறு திசையில் செலுத்துவதில்லை. இது ஒரு பெண் தன் பெண்தன்மையுடன் இருக்கும் போது மட்டுமே நிகழ்கிறது. இயற்கையில் அவர்களில் காம சக்தி அதிகரித்து அவர்களை அதீத காமத்திற்கு இட்டுச் செல்வதில்லை, அவ்வாறு அதிகரிக்கும் போது உடலியற் தொழிற்பாட்டினூடாக ஒவ்வொரு மாதமும் அவர்களின் அதிகரிக்கும் காம சக்தி வெளியேற்றப்பட்டு உடலும் மனமும் அமைதிப்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆண்கள் துறவறம் ஏற்று நீண்ட பிரம்மச்சரியம் இருப்பது மிக அரிதான விடயம், ஆனால் பெண் துறவிகள் இயல்பிலேயே பிரம்மச்சரியம் காப்பது இலகுவான ஒன்றாகும். ஏனெனில் இயற்கையில் பெண் தனது உடல் மூலம் காமசக்தியினை வெளியேற்றும், தியானம் இன்றியே இலகுவாக அடையும் தன்மையினை பெற்றுள்ளாள்.

ஆனால் ஆண் ஒருவனால் அப்படி இருக்க முடியாது. அவனுடைய காமசக்தியினை உயர்நிலைப்படுத்துவதற்கு ஆழமான தியானம் கட்டாயம் அவசியமான ஒன்றாகும். இப்படி காமசக்தியினை ஆழமான தியானத்தின் மூலம் உயர்சக்தியாக்காமல் ஆணால் பெண்ணிற்கு பின்னால் பைத்தியக்காரத்தனமாக காம இச்சையுடன் அலையாமல் இருக்க முடியாது.

காமம் என்பது ஆணின் மிகப்பெரிய தளை (கட்டுண்ட நிலை). இந்த நிலையினை அவிழ்க்க தியானத்தின் மூலம் முயலவேண்டும். இப்படி முயற்சிக்கும் போது ஆணின் காமசக்தி கீழ்முகமாக வீணாகமல் மேல் நோக்கிச் செல்லத்தொடங்கும். அழகான பெண்ணிற்காக அலையாமல் தியானத்தின் மூலம் அவன் தன்னுள் அழகாக ஆணினைப்படைக்க வேண்டும். ஆனால் இயல்பின் ஆண் பெண்ணை விட முட்டாள்! தன்னுடைய முட்டாள்தனத்தினை மறைக்க, தனது காம சக்தி கீழ்முகமாய் சென்று உலகத்தினை அழிவு நோக்கி செலுத்த ஆரம்பிக்கிறான். அப்படி உருவான பைத்தியக்காரத்தனத்தில் தான் உலக வரலாறு எழுதப்பட்டுள்ளது. உலக யுத்தங்கள், கற்பழிப்புகள், மற்றவரை அழித்தல் என்பவையெல்லாம் ஆணின் காமசக்தி கீழ் நோக்கி செலுத்தப்பட்டதால் வந்த வினைகளே!

ஆகவே தன்னை அறிந்துகொள்ள விளையும் ஒவ்வொருவரும் தமது காமசக்தி செயற்படும் முறையினை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம்!

காம ரகசியம் தொடரும்...

காம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா?


காமத்தின் மீதான வெறுப்பு சரியா?


ஓஷோவிடம் ஒருமுறை ஒரு பெண் " நான் எனது கணவரை மனதார நேசிக்கிறேன், ஆனால் காமத்தினை வெறுக்கிறேன், இதனால் எனக்கும் கணவருக்குமிடையில் முரண்பாடு உண்டாகிறது இது ஏன்?" என வினாவினார், அதற்கு ஓஷோவின் பதில் இவ்வாறு இருந்தது.

நீங்கள் வார்த்தையினால் விளையாடுகிறீர்கள், அது எப்படி உங்கள் கணவரை விரும்பிக்கொண்டு காமத்தினை வெறுக்கமுடியும். முதலில் இதன் அடிப்படையினை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். ஒரு ஆணை விரும்பும் போது நீங்கள் அவனது கையினை பிடித்துக்கொண்டு நடக்க விரும்புகிறீர்கள், அவனை அடிக்கடி காண விரும்புகிறீர்கள், அவனை கட்டியணைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள், அவனது குரலை அடிக்கடி கேட்க விரும்புகிறீர்கள், அதுமட்டுமல்ல அவனை பார்க்கத் தவிக்கிறீர்கள், அவன் தூர இடத்திற்கு செல்லும் போது அவனது குரலை மட்டும் கேட்பதில் திருப்தி இல்லாது அவனைக் கண்டவுடன் மட்டுமே மனம் அமைதி பெறுகிறது.

அவனை தொடுவதன் மூலம், அவன் உங்களை தொடுவதன் மூலம் உங்களுக்கு இன்பம் உண்டாகிறது, அதைவிட முத்தமிடும்போது இன்னும் இன்பம் உண்டாகிறது. ஆக காமம் என்பது இரு எதிர்துருவங்கள் ஆழமாக தமது சக்திகளை கலக்கும் செயல்முறையே ஆகும். காமம் என்பது தனியே ஒருவரின் கையினை கோர்த்துக்கொண்டு உடல்களை இணைக்கும் செயல்முறை மட்டுமல்ல, அது ஒரு ஆழமான சக்திப்பரிமாற்ற நிகழ்வாகும். இத்தகைய உன்னதமான விடயம் எப்படி தவறானதாக இருக்க முடியும்.

உங்களுடைய பிரச்சனை உங்கள் மனதில் உள்ளது, உங்களது மனதிற்கு காமத்தினைப்பற்றி தவறாக பரப்பபட்ட எண்ணங்களினால் அதனை தவறாகவே பார்க்கப் பழகியுள்ளீர்கள். உங்களுடைய மனது உங்கள் மதத்தலைவர்களினால் கட்டமைக்கப்படுகிறது, இந்த மதவாதிகள் முழு மனிதகுலத்தினையும் மதத்தின் பெயரால் நச்சாக்கி உள்ளார்கள்.

அவர்கள் வாழ்வின் வளர்ச்சியின் அடிப்படை உயிர் நாதத்தினை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள். இத்தகைய விஷ எண்ணத்தினை ஏன் நீங்கள் ஏற்றுக்கொண்டு ஏன் காமத்தினை வெறுக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆணை விரும்பினால் அவனுடன் உங்களை முழுமையாக பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் வெறுப்பிற்கு இடம் கொடுக்காதீர்கள். காமத்தினை வெறுக்கிறேன், ஆனால் அவனை நேசிக்கிறேன் என்றால் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள், நான் உனது பணத்தினை நேசிக்கிறேன், உன்னுடைய வீட்டினை நேசிக்கிறேன், உன்னுடைய கார் எனக்கு பிடித்திருக்கிறது, இதன் மூலம் அவனை பயன்படுத்திக்கொள்கிறீர்கள், பின்பு அதனை அன்பு காதல் என மூலாம் பூசுகிறீர்கள்.

நீங்கள் அன்பு செலுத்தும் போது எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வீர்கள், அன்பு செலுத்தும்போது ரகசியங்கள் எதுவும் இருப்பதில்லை, அன்பு செலுத்தும் போது உங்கள் இதயம் முழுமையாக திறந்திருக்கும். நீங்கள் ஒருவர் மீது அன்பு செலுத்தும் போது அந்த நபருடன் நரகத்திற்கும் செல்வதற்கு தயாராக இருப்பீர்கள், ஆனால் நாம் வார்த்தைகளை தந்திரமாக உபயோகிப்போம். நாம் அன்பு செலுத்தவில்லை என்று நேராக கூறமாட்டோம், ஏனெனில் உண்மையான அன்பு மேலே கூறிய பண்புகளை உடையது, அதனை ஏற்க தயாரில்லாமல் அன்பின் வரைவிலக்கணத்தை வார்த்தைகளால் மாற்ற முயற்சிப்போம். அதுபோலான வார்த்தை ஜாலமே நீங்கள் கூறும் "நான் நேசிக்கிறேன் ஆனால் காமத்தினை வெறுக்கிறேன்" என்பது.

காமம் என்பது அன்பு இல்லை என்பது உண்மை, அன்பு காமத்தினை விட மேலான ஒன்று, ஆனால் காமம் அன்பின் அடிப்படைகளில் ஒன்று, ஆம் ஒரு நாளைக்கு காமம் முற்றாக மறைந்து அன்பு மட்டுமே இருக்கப்போகிறது, ஆனால அது காமத்தினை வெறுப்பதினால் நடந்து விடாது.

காமத்தின் மீதான வெறுப்பு என்பது அதனை வலிந்து அடக்கும் ஒரு செயல்முறையாகும். இப்படி அடக்கப்படும் ஒரு விடயம் கட்டாயம் வேறொரு விதத்தில் வெளிப்படவே செய்யும். இந்தப்பயத்தில் துறவினை ஏற்றுக்கொண்டு இறை சேவை செய்கிறேன் என்று பயந்து ஓடாதீர்கள், காமம் என்பது இயல்பானது என்பதினை மனதில் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் நிச்சயமாக காமத்தினை கடந்து செல்லமுடியும் ஆனால் அதனை அடக்குவதால் நிச்சயமாக கடக்க முடியாது. இப்படி அடக்கினால் அது வேறொரு வழியில் வெளிப்பட காத்துக்கொண்டிருக்கும். அப்படி அடக்குவது ஒன்று சமூகத்திற்கு மாறான ஒழுக்க கேட்டினை உருவாக்கும், அல்லது அதன் மீதான் அதீத பைத்தியத்தினை உருவாக்கும். (இது எவ்வளவு பெரிய பேருண்மை இன்று கற்பழிப்புகள் அதிகரிப்பதற்கும், காமம் சார் திரைப்படங்களுக்கான வரவேறுபும் இந்த காரணத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்). நீங்கள் அதனைக்கடந்து செல்ல வேண்டும் என்றால் இயல்பாக அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே அதற்கான முதற் தகுதி!

இங்கு நான் குறிப்பிடும் எதுவும் இயல்புக்குமாறானதல்ல! இதுவே எல்லா தாந்திரிக முறைகளதும் சாராம்சம்! நீங்கள் வானத்திற்கு செல்லவிரும்பினால் முதலில் பூமியில் இயல்பாக இருக்கவேண்டும். அதுபோல் பேரன்பினை அடைய விரும்பினால் முதலில் அதன் அடிப்படையான காமத்தினை சரியான முறையில் அணுகவேண்டும்.

நீங்கள் மரத்தினைப் பார்த்ததில்லையா? அவை வளர்வதற்கு முதலில் நிலத்தில் ஆழமாக வேர்களை செலுத்துகின்றன, அது எவ்வளவு அதிகமாக உயரவேண்டுமோ அவ்வளவு ஆழமாக அது தனது வேர்களை பூமியினுள் செலுத்த வேண்டும். அதுபோல் நீங்கள் இந்த உடலில் உள்ளீர்கள் அதிலிருந்து ஆன்மாவினை உணர முயல்கிறீர்கள், அந்த நிலையில் ஆன்மா அடையக்கூடிய உச்ச நிலை அன்பு, அதனை அடைவதற்கு நீங்கள் ஆழமாக நிலைகொள்ளவேண்டிய வேர் காமம். நீங்கள் காமத்தினை அதிகமாக அன்பாக மாற்ற மாற்ற அது மெதுவாக மறையத்தொடங்க்கும். ஆனால் அதனை வெறுப்பதன் மூலம் அதனை செய்ய முடியாது.

வெறுப்பது என்பதனை எந்தவிதமான உறவிலும் இருக்க கூடாத ஒன்று, வெறுப்பு உண்டாகின்றதென்றால் அதன்மீது அளவுகடந்த விரும்பம் வைத்துள்ளீர்கள் ஆனால் அந்த விடயத்தில் உங்களுக்கு பயம் உள்ளது என்பதே காரணமாகும். இப்படியான நிலையில் காமத்தினை வெறுக்கும் போது உங்களிடைய சக்தி அது செல்லவேண்டிய பாதையிலிருந்து விலகி வேறு இடத்திற்கு செல்லத்தொடங்குகிறது (அதாவது காமத்தினை சரியான முறையில் ஏற்று அதனை அன்பாக மாற்றும் செயல்முறையிலிருந்து உங்கள் சக்தி விலகத்தொடங்கும்). அடிப்படையில் காமம் இறைவனால் கொடுக்கப்பட்ட புனிதமான ஒன்று, அதனை நாம் உயர்ந்த சக்தியினாக மாற்றிக்கொள்ளவேண்டியது எமது கடமை. கடவுளால் கொடுக்கப்பட்ட அனைத்தும் புனிதமானவையே, இங்கு கடவுள் எனும் போது அது குறித்த ஒரு நபரிணையோ, மத நம்பிக்கையினையோ குறிப்பதல்ல! இந்த பிரபஞ்சத்தின் முழு இருப்பையும் குறிக்கும்.காமத்தினை வெல்லவேண்டுமாயின்

காமத்தின் மீதான வெறுப்பினை இல்லாதாக்குங்கள்!

காம ரகசியம் தொடரும்...

5 ஜூலை, 2020

காம ரகசியம் - 02 அடக்கப்பட்ட காமமும் காமத்தின் மீதான வெறுப்பும்




காம ரகசியம் - 02 அடக்கப்பட்ட காமமும் காமத்தின் மீதான வெறுப்பும்

காமம் மிருகத்தனமானது என்ற கருத்து மீதான ஓஷோவின் பார்வை பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்.

மனிதனும் ஒரு மிருக வகையினை சார்ந்தவன் தான், ஆனால் அவனை மிருகம் என்று மட்டும் சொல்லமுடியாது, அவன் ஒரு முடிவான் மிருகம் அல்ல, அவன் மேலும் மிருகமாகவும் முடியும் அல்லது மேல் நோக்கி தெய்வமாகும் வழியிலும் செல்லமுடியும். அவன் எதையும் தேர்வு செய்யும் உரிமையினை பெற்றுள்ளான். நாய் என்பது கடைசிவரை நாய் எனும் மிருகம்தான், ஆனால் மனிதம் புத்தர் என்ற புனிதராகவும் முடியும், ஹிட்லர் என்ற கொடுங்கோலனாகவும் முடியும். அவன் இருபக்க தேர்வு சுதந்திரம் உடையவன்.

இங்கு காமம் மிருகத்தனமானது என்ற கருத்தில் மிருகத்தனம் என்பதனை வரவிலக்கணப்படுத்த வேண்டும், உலக வரலாற்றில் மனிதனைத்தவிர எந்த மிருகங்களூம் அதிகளவு போர் செய்ததில்லை, தமது இனத்தையே கொடுரமாக கொலை செய்ததில்லை, இப்படியிருக்க மிருகத்தனம் என மனிதன் தனது தவறான செய்கைகளுக்கு வரைவிலக்கணப்படுத்துவது மிகவும் தவறானது. மனிதன் தனது தேர்வு செய்யும் உரிமை மூலம் மிருகத்தினை விட அதிகமாகவே முன்னேறிவிட்டான், அதனை சுத்த மிருகத்தனம் என்கின்றான். இதனை புரிய சிறிய குட்டிக்கதை ஒன்றினை பார்ப்போம்.

ஒரு ஹோட்டலில் ஒருவர் தனது நாயுடன் தங்குவதற்கு விரும்பினார், அதற்கான அனுமதியினை முகாமையாளரிடம் கேட்ட போது கீழ்வரும் பதிலினை பெற்றார், அன்புள்ள ஐயா, நான் ஹோட்டல் துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக உள்ளேன், இந்த முப்பது ஆண்டு சேவையில் நான் ஒரு நாயினை வெளியேற்றுவதற்காக ஒருபோதும் பொலிஸினை கூப்பிட்டதில்லை, எந்த ஒரு நாயும் எனக்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்காக செல்லுபடியாகாத காசோலையினை தந்ததில்லை, எந்த ஒரு நாயும் கட்டிலில் உள்ள போர்வையினை சிக்கரட் நாற்றத்தால் நாறடித்ததில்லை, எந்த ஒரு நாயும் தந்து சூட்கேஸில் துவாயினை சுருட்டி எடுத்து சென்றதில்லை, ஆகவே உங்களுடைய நாய் தாராளமாக தங்கலாம் என்றான், இதில் உள்ள நாய் எனும் விலங்கு மிகவும் இயல்பானது, செயற்கைதனம் அற்றது, ஆனால் மனிதன் சூழ்ச்சி நிறைந்தவன், எல்லவற்றிலும் தனது இலாபம் என்ன என்று பார்ப்பவன்.

ஆக மனிதன் எந்த நிலைக்கும் போகும் வாய்ப்பினை உடையவன், தாழ்ந்த நிலைக்கும் செல்லலாம், மேலான நிலைக்கும் செல்லலாம். ஆகவே மனிதனது மிருகத்தனம் என்பது என்னவென்று புரிதல் அவசியம், ஆதலால் காமம் என்பது மிருகத்தனம் அல்ல காமம் மிருகத்தனம் ஆக்கப்படலாம். அதேவேளை அது அன்பாகவும் மாற்றப்படலாம், உயர்ந்த பிரார்த்தனை ஆகலாம், அதனை மிருகத்தனம் ஆக்குவதும் தெய்வீகம் ஆக்குவதும் மனிதனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்லது சுதந்திரமே அன்றி, காமம் மிருகத்தனமோ, பாவமானதோ அல்ல! அதனை அப்படி ஆக்குவது அதனை அணுகியவரின் அணுகுமுறையில் உள்ள தவறே அன்றி காமத்தில் உள்ள தவறு அன்று!

காமம் என்பது இதுதான் என்று கூறக்கூடிய ஒரு திடப்பொருள் அல்ல! து நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றப்படக்கூடிய ஒரு வாய்ப்பு! அவ்வளவே! அது உங்கள் கையில் உள்ளது, காமத்தினை கொண்டு பேரின்பத்தினையும் அடையலாம், யோகம் கூறும் அதி உன்னத நிலையான சமாதியினையும் அடையலாம்! காமத்தினை கடவுளை அடையும் ஒரு பாலமாகவும் பயன் படுத்தலாம்! இந்த சாராம்சமே தாந்திரீகத்தின் சுருக்கமான விளக்கமாகும்!

ஆக காமத்தினைப்பற்றிய புரிதலில் மனிதனது வரைவிலக்கணங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்! இப்படிப்புரிந்து கொள்ளும்போது காமத்தின் மீதான தவறான பார்வைகள் விலக்கப்பட்டு காமத்தினை ஆரோக்கியமாக அணுகும் தன்மை இளைஞர்களின் மனதில் கட்டாயம் உருவாகும், இதன் மூலம் நல்லதொரு ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை!

காம ரகசியம் தொடரும்...