10 அக்., 2025

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் யோகப் பயிற்சி முறைகளை எட்டுப் படிமுறைகளாக வகுத்து அதனை அட்டாங்க யோகம் எனப் பெயரிட்டுள்ளார் அதன் முழுமையான விளக்கம்:

 அட்டாங்க யோகம் – யோகப்பயிற்சி



கடவுளை தன்னுள்ளே தேடும் வழிமுறையே அதாவது பயிற்சியே யோகம் எனப்படும் இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும்.

அட்டாங்க யோகம் (மூன்றாம் தந்திரம்)

 

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
                                                                    திருமந்திரம்.   

விளக்கம்: அட்டாங்க யோகம் பின்வரும் எட்டு படிநிலைகளாக வகுக்கப்படுகிறது. அவையாவன இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டும் அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள் அதாவது எட்டுப் படிமுறைகள் ஆகும்.

  • இயமம்: தீயனவற்றைச் செய்யாது இருத்தல்.
  • நியமம்: நல்லனவற்றைச் செய்தல்.
  • ஆசனம்: ஆசனங்கள் செய்தல்.
  • பிராணாயாமம்: மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்துதல்.
  • பிரத்தியாகாரம்: மனதைக் கட்டுப்படுத்துதல்.
  • தாரணை: ஆதாரங்களில் (சக்கரங்களில்) மனத்தை ஒருமுகப்படுத்துதல்.
  • தியானம்: மனதை உள்முகமாகச் செலுத்துதல்.
  • சமாதி: பரம்பொருளுடன் ஒன்றாதல். சிவனுடன் (ஜோதியுடன்) ஐக்கியமாதல்.

அட்டாங்க யோகத்தில் கூறப்பட்ட எட்டுப் படிமுறைகளையும் வெளிமுகப் படிமுறை மற்றும் உள்முகப் படிமுறை என இரு பகுதிகளாகப் பார்க்கப்படுகிறது. அட்டாங்க யோகமானது இராஜயோகம் என பொதுவாக அழைக்கப்பட்டாலும் முதல் நான்கும் கிரியாயோகம் எனவும், அடுத்த நான்கும் இராஜயோகம் எனவும் அழைக்கப்படுகிறது.

கிரியாயோகம்: வெளிமுகமான நான்கு படிமுறைகளாக இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் எனப்படும். இந்த நான்கினையும் கிரியாயோகம் எனவும் அழைப்பர்.

இராஜயோகம்: உள்முகமான நான்கு படிமுறைகளாக பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனப்படும். இந்த நான்கினையும் இராஜயோகம் எனவும் அழைப்பர்.

முதல் நான்கும் (கிரியா யோகம்) உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். மிகுதி நான்கும் (ராஜயோகம்) மனதை உள்முகத் தேடலுக்கான பயிற்சியாகும்.

அட்டாங்க யோகத்தினில் கூறப்பட்ட எட்டுப் படிமுறைகளையும் ஆரம்பத்திலிருந்து முறைப்படி ஒவ்வொன்றாக கடைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே அடுத்த படிநிலை பயனளிக்கும் என்பது பொருளாகும்.


1. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – இயமம் (விலக்கியன ஒழித்தல்)


கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே. 
                                                                                            – திருமந்திரம்.
விளக்கம்: எந்த உயிரையும் கொல்லாதவன், புலால் உண்ணாதவன். புலன் அடக்கம் உள்ளவன், நீதியான தீர்ப்பு செய்ய வல்லவன், பொய் சொல்லாதவன், திருடாதவன், நற்குணம் உடையவன், கிடைத்த உணவை பகிர்ந்து உண்பவன், குற்றமில்லாதவன், மது அருந்தாதவன் , காம இச்சை இல்லாதவன், ஆகிய தகுதிகளை உடையவனே இயமத்தை கைக்கொள்பவனாவான். கொலை செய்யாமல் இருந்தாலும் புலால் உண்பவன் கொலை செய்பவனுக்குச் சமனாவான்.

2. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – நியமம் (விரும்புவன செய்தல்)


தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.        
                                                                                        – திருமந்திரம்

விளக்கம்: பொறிபுலன்களை அடக்கி, இறை சிந்தனையோடு இருப்பது, தவம் செய்தல். தெய்வ நம்பிக்கையோடு எப்பொழுதும் ஆனந்தமாய் இருப்பது, தான தருமம் செய்தல். சிவபூசை, சிவ விரதங்களை மேற்கொள்ளுதல். ஆன்மீக அறிவோடு இருத்தல் நியமமாகும்.

மனிதர்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளை இந்து மதத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பிரிவுகளாக வகுக்கப் பட்டிருக்கிறது. இவை நாற்பாதங்கள் அல்லது நன்னெறிகள் என அழைக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முதல் இரண்டு படிமுறைகளான சரியையும் கிரியையும் நியமத்தில் அடங்கும்.

சரியை: தூய தெய்வ பக்தியோடு உடலால் செய்யப்படும் தொண்டுகள், இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.

ஆலயங்களில் இறைவனை வழிபடல், திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூப் பறித்தல், பூமாலை தொடுத்தல், சிவனடியார்களுக்குச் சேவை செய்தல், சுவாமி காவுதல் ஆகியவை சரியையில் அடங்கும்.

கிரியை: தூய தெய்வ பக்தியோடு சதா காலமும் இறை சிந்தனையோடு இருந்து பஜனை, தேவாரம் பாடுவது, மந்திரங்களை ஓதி இறைவனை வழிபடுவது, பிரசங்கம் மூலமாக மக்களுக்கு இறை உணர்வை ஏற்படுத்துவது போன்ற இறை தொண்டுகளாகும்.


3. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – ஆசனம்

உடலைப் பக்குவப்படுத்தி, சக்கரங்களைத் தூண்டி அதன்மூலமாக உள்ளே பிராண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்

அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே. 
                                                                                  – திருமந்திரம்.

விளக்கம்: பத்மாசனம் முதலாக ஆசனங்கள் பல உண்டு, அவற்றுள் சிறப்பாக சொல்லத்தக்கவை எட்டு. அவற்றுள் அனைத்து யோகத்தையும் செய்யச் சிறந்த ஆசனம் சுவத்திகாசனம். சுவத்திகாசனத்திலிருந்து யோகம் செய்தால் சிறந்த தலைவனாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. பின்வரும் பத்து ஆசனங்களும் யோகத்திற்கு ஏற்ற ஆசனங்களாகும். அவையாவன பத்திராசனம், குக்குட ஆசனம், சிம்மாதனம், பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சோத்திரம், வீர, சுகாதனம் ஆகும்.


4. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – பிராணாயாமம்:

பிராணாயாமம் என்பது பிராணனை அதாவது மூச்சு அல்லது சுவாசத்தினைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாகும். பிராணாயாமக் கலையை வாசிக்கலை என்றும், மூச்சுக்கலை என்றும் அழைப்பர். உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலையாதலால் சித்தர்கள் இதனை “சரகலை எனவும் கூறுவர்.

நாம் சுவாசிக்கும் சுவாசக் காற்றினை உள்ளே எடுக்கும் வாயுவின் அளவை வைத்து அதாவது அவ்வாயு சுவாசப் பையினை நிரப்பும் அளவை வைத்து பின்வரும் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அவையாவன:

உயர் சுவாசம்.

மத்திம சுவாசம்.
கீழ் சுவாசம்.
முழுமையான சுவாசம்.

 

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.  
                                                                                            திருமந்திரம்.
 

விளக்கம்: ஆன்மா ஐம் பொறிகளின் தலைவன். ஆன்மா உடலுக்கும் தலைவன். அந்த ஆன்மா உய்வதற்கு (கடையேறுவதற்கு) உதவிடவும் மனம் என்னும் குதிரையைக் கட்டுப்படுத்தவும் பிராணன் என்ற ஒன்று உள்ளது. உடலைப் பற்றாமல் பிராணனைப் பற்றி நிற்பவர்களுக்கு (மூச்சினைக் கவனிப்பவர்களுக்கு) அவை (பிராணன்மூச்சு)) வயப்படும். உடலைப் பற்றி நிற்பவர்களுக்கு அவை அகப்படா.

 

ஆரியன் நல்ல குதிரை இரண்டு உள
வீசிப் பிடிக்கும் விரகுஅறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே

விளக்கம்: மனம் என்னும் ஆரியனுக்கு இரு குதிரைகள் உள்ளன அதாவது இரு முக்கிய வாயுக்கள் உள்ளன. அவையாவன பிராணன், அபானன் என்பவை ஆகும். அவற்றைக் கட்டுப்படுத்தும் உபாயத்தை அறிவது மிகவும் கடினம். பிராண ஜெயம் பெற்றுள்ள குருநாதரின் அருள் கிடைத்தால் அவ்விரு வாயுக்களையும் சேர்த்துப் பிடித்து பிராணனைக் கட்டுப்படுத்த மனம் கட்டுப்படும்.

அதாவது வாசியை கட்டுப்படுத்தி மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியை உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து துரியத்தை நோக்கிக் கொண்டுவரும் பயிற்சியே பிராணாயாமம் எனப்படும். குண்டலினி சக்தி துரியத்தை எட்டும்போது சகலவித சித்திகளும் கிட்டும்.



5. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – பிரத்தியாகாரம்.

புலன்கள் வாயிலாக வெளிநோக்கிச் செல்லும் மனதை அடக்கி உள்ளேயே நிறுத்துவது பிரத்தியாகாரம். உணர்ச்சிகளைக்  கட்டுப்படுத்தி மனதை பண்படுத்தும்.

 

கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலு மாமே.

விளக்கம்: வெளியே அலைந்து பழக்கப்பட்டுவிட்ட மனதை உடலின் உள்ளேயே பொருந்தும்படி செய்தால் சிறிதுசிறிதாக அகஇருள் விலகும். தேடப்படும் பரம்பொருளை நம் உடலின் உள்ளேயே நம்மால் உணரமுடியும்.

 

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.  
                                                                                    – திருமந்திரம்.

விளக்கம்: மூலாதாரத்தினை இறுக்கி மனதை அங்கே நிறுத்தி அபான வாயுவை கும்மித்து வெளிப்படாமல் அடக்க, நீர்நிலையில் பெரிய மீனை எதிர்பார்த்து நிற்கும் கொக்கு போல குணடலினி சக்தியானது இடைவாசல் வழியாக அதாவது இடகலை பிங்கலை நாடிகளுக்கு  இடையில் இருக்கும் சுழுமுனை வழியாக ஒவ்வொரு ஆதாரங்களையும் கடந்து மேலெழுந்துவந்து ஜோதியுடன் கலக்கும். இதனால் ஊழிக்காலம் வரை உடலை அழியாமல் வைத்துக்கொள்ள முடியும்.


6. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – தாரணை

தாரணை – உந்தி, இதயம், உச்சி என்னும் மூன்றிடத்தும் மனதை நிலைநிறுத்தல்.அதாவது கட்டுப்படுத்தப்பட்டு எங்கும் அலைபாயாது அசைவற்றிருக்கும் சித்தமே “தாரணை எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளை உருவாக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலை கொள்ளச் செய்யும் செயல் முறைதான் “தாரணை எனப்படும். சித்தத்தில் இருந்துதான் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன, இந்த சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும். இதுவே பொதுவாக தாரணாசக்தி என அழைக்கப்படுகிறது. 12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.

 

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே     
                                    – திருமந்திரம்.

விளக்கம்: ஐம்பொறிகளால் (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஆளப்படும் உடலை ஐம்பூதங்களில் (மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம்) ஒடுக்கவேண்டும். அந்த ஐம்பூதங்களையும் ஐந்து தன்மாத்திரைகளில் (சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம்) அடக்க வேண்டும். ஐந்து தன்மாத்திரைகளையும் நான்கு அந்தக் கரணங்களில் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) ஒடுக்க வேண்டும். நான்கு அந்தக்கரணங்களையும் மாயையில் அடக்க வேண்டும். மாயையை ஆன்மாவில் அடக்கி ஆன்மாவைச் சிவத்தில் ஒடுக்க வேண்டும். ஆன்மா சிவத்துடன் பொருந்தி இருப்பதே தாரணை ஆகும்.

 

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே 
                                    – திருமந்திரம்

விளக்கம்: யாவரிடத்திலும் உள்ள மூலாதாரத்தில் ஒரு பெருஞ் செல்வம் உள்ளது. இருந்தும் அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் (திறக்கும் உபாயம் அறியாதவர்) அச்செல்வத்தை அடையமுடியாது. அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராணவாயுவை, அங்கு கும்பகம் செய்து கும்பித்த அவ்வாயுவின் மூலம் குண்டலினி சக்தியினை சுழுமுனை நாடி வழியாக மேலே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய அச் செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக் கருவூலத்தின் வெளியே (புறத்தே) செலுத்தி மூடர் போல அல்லற்படுவர்.


7. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – தியானம்

உணர்வற்று, உடலற்று, சிந்தனையற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று, பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும். இடையறாது சிவ சிந்தனையோடு இருக்கவேண்டும். அதுவே தியானமாகும்.

 

வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போக மேவல்;
உருவாய சத்தி பரத்தியானம்; உன்னும்
குரு ஆர் சிவத்தியானம் யோகத்தின் கூறே
                                                                                     திருமந்திரம்.

விளக்கம்: தாரணையில் குறிப்பிடடவாறு, பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று, புருடன் ஒன்று`ஆகிய பத்து இச்சைகளிலும் இருந்து மனமானது விடுபட்டு தியானத்தில் நிலைக்கும்போது. அதாவது பொறி புலன்கள் நீங்கி இருப்பது தியானம். உச்சியில் ஒளி வடிவாக இறைவனை தியானிப்பின், அது சக்தி  தியானமாகும். இறைவனை உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இவை இரண்டும் யோகத்தின் இரு கூறுகளே.


8. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் – சமாதி (முக்தி)

ஆன்மா சிவனுடன் ஒன்றுதல் சமாதியாகும்.

 

சமாதிய மாதியில் தான் சொல்லக் கேட்கின்
சமாதிய மாதியில் தான் எட்டும் சித்திக்கும்
சமாதிய மாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதிய மாதி தலைப்படும் தானே
                                                                                             திருமந்திரம்.

விளக்கம்: அட்டாங்க யோகத்தில் குறிப்பிட்டுள்ள இயமம் முதல் சமாதி வரை கூறப்பட்ட முறையைக் கடைப்பிடியுங்கள். இயமம் முதல் சமாதி வரை உள்ள படிமுறைகளை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கே அட்டாங்க யோகத்தின் கடைசிப் படியாகிய சமாதியும் தானே அமையும். யோகம் முற்றுப் பெறும்.

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக