26 அக்., 2025

இயற்கை உணர்வு (Natural Instinct) ஜீவராசிகளிடமும் எவ்வாறு அமைந்துள்ளது? அது செயல்படும் விதம் வியக்கத்தக்கது, மெய்வழி அறிவு (God Consciousness) என்பதைப் பற்றியும் விளக்கம் யாது?

 


இயற்கை உணர்வு செயல்படும் விதம்

 

இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு "Instinct" என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த "Instinct" என்பதற்கு மேலே "Intelligence" அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் "Intelligence" என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த "Intelligence" வந்த பிறகு தான் "அறிவு", "Knowledge" வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது "Intelligence". அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' "Knowledge" என்று சொல்லலாம்.


இறையருள் எந்த சூழ்நிலையில் ஒருவருக்கு கிடைக்கும் விளக்கம்:

 

இந்த "Collective Knowledge" வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் "Intuition" உண்டாகிறது. அதில் இருந்து தான் எல்லாம்வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது.


மனவளக்கலை ஓர் அற்புதம் விளக்கம்:

 

"மனிதன் மனிதனாக வாழ ஏற்ற
    ஒரு சாதனை வழியே மனவளக்கலை".

 

"அகத்தாய்வு என்பது மனத்தூய்மையை
    நாடிச் செல்லும் தெய்வீகப்பயணம்".
 
"வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பது போல
    அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது".

 

"தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து,
    தழைத்துஒரு உடலாகி உலகில் வந்தேன்;
அந்தஈருயிர்வினைகள் அறமோ மற்றோ
    அளித்தபதி வுகள்எல்லாம் என்சொத் தாச்சு.
இந்தஅரும் பிறவியில்முன் வினைய றுத்து,
    எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவ தற்கு,
வந்தஒரு உதவிகுரு உயிரின் சேர்க்கை.
    வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன் !"
                                                வேதாத்திரி மகரிஷி.

மெய்வழி அறிவு (God Consciousness):

 

உயிர் என்னும் இயக்க ஆற்றலுக்கு மூலமாகவும், இயங்க இடமாகவும், முடிவாகவும் இருப்பது சுத்தவெளியே. இதுவே எல்லாம் வல்ல முழுமுதற்பொருள். இதன் இயக்கமே உயிர். உயிரின் படர்க்கையே மனம் என்னும் உண்மை உணர்வே அறிவின் முழுமை.

இவ்வுண்மையைத் தெளிவாக, தவத்தால் தானே அதுவாகி உணர்ந்தால் பேரியக்க மண்டலம் ஒரே ஒரு தொடரியக்கக் களமாகும். அதனினின்று நான் வேறு இல்லை. மற்ற உயிரோ பொருளோ வேறு இல்லை. அந்த முதற் பொருளே தனது இயல்பூக்கச் சிறப்பால் அனைத்துமாக விளங்குகிறது என்ற நிறைபொருள் அறிவு பூக்கும். அவ்விளக்கம் மறவாது உடலோடு உயிர் இயக்கம் நடைபெறும் வரையில், உயிர்கட்கு அறிவாலும், உடலாலும் கடமை செய்து மனிதகுல வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்து நிறைவு பெறுவதே மெய்வழி அறிவாகும்.

மனமே உயிராகி, தெய்வமாகி விரிந்த பேரியக்ககள உண்மையினை உணரும் முழுமையில் அறிவாகிறது. இது தெய்வமே மனித உருவில் அறிவின் முழுமையில் காணும் விளக்கம். இவ்விளக்கம் வேண்டிய மக்கள் அறிந்து கொள்ள விரித்த கருத்துக்களே வேதம். இதை ஓதியவனும் ஓதியதை உணர்ந்து தானானவனும் ஞானி இன்பநிலை எய்த வாரீர்.


"அறிவானது நிறை நிலையை ஆதியாக
    அமைதி நிலையில் உணர்ந்து அதுவாம் போது
அறிவு உயர்ந்தகன்று அமைதிப் பேரின்பத்தில்
    அணுமுதலாய் அண்ட கோடி தானேயாக;
அறிவே அவ்வந் நிலையில் ஒழுங்கியக்க
    அமைப்பாகி முறை பிறழாதியங்கும் மேலாம்
அறிவின் பெருமை யுணர்ந்த இன்பவெள்ளத்
    தானந்தத்தில் திளைக்க வாரீர் வாரீர்.
                                            வேதாத்திரி மகரிஷி.


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக