24 அக்., 2025

மிருகம், மனிதன், மாமனிதன் என்பவனை பற்றிய ஆராய்ச்சியின் விளக்கம் என்ன? மனிதனும், இறைவனும் அறிவால் ஒன்றுதான் தன்னையறிந்தால் தானே கடவுள் தான் என்பதை பற்றி விளக்கம்:

 


மிருகம், மனிதன், மாமனிதன்:

புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.

பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?

மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.


மாமனிதன் என்பவன் யார் விளக்கம்:

அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.


மனிதனும், இறைவனும் அறிவால் ஒன்றே ஆராய்ச்சியின் மூலம் விளக்கம்:

ஒருவழியில் பார்த்தால் மனிதன் இறைவனைவிட ஒரு படி மேலானவன் என்று கொள்ளலாம். அவனிடம் இறைத்தன்மை எல்லாம் இருக்கின்றன (God is omniscient). இறைவன் எல்லா ஆற்றலும் நிறைவாகப் பெற்றவன். அத்தன்மை மனிதனிடம் இருக்கின்றது (God is omniscient). இறைவன் எல்லாம் அறிந்தவன். அத்தன்மையும் மனிதனிடம் இருக்கின்றது. (God is omniscient). இறைவன் எங்கும் இருப்பவன். மனிதனும் அந்நிலையை எய்த முடியும். ஆராய்ச்சியின் மூலமும், யோகத்தின் மூலமும் உள்ளது உள்ளபடியே தன்னுணர்வாக, அகக்காட்சியாகப் பெற்று விட்டால் மனிதன் இறைத்தன்மையை முழுமையாகப் பெறுகிறான்.

மனிதனிடம் கடவுள் எல்லாமே இருப்பதோடு கடவுளை அறிந்து கொள்ளும் பெருமையும் இருக்கிறது. இத்தகைய பெருமை அவனிடம் இருக்க அதனை மறந்து தன் உடல் அளவிலே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையிலேயிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அவன் தன் உயிரைப் பற்றிய அறிவு பெற வேண்டும். உயிரின் தன்மை என்ன? அதன் மூலம் என்ன? பரம்பொருளே, அதன் எழுச்சி நிலையே உயிராக இருக்கிறது. இன்று இந்த உடலில் உயிர் இருந்தாலும் பரம்பொருளின் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது.

உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக் கொண்டு இருந்தாலும் தன் முழுமையை உணர்ந்து கொண்டால் - தன் மூலத்தையும், வியாபகத்தையும் அறிந்து கொண்டால் எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடுகின்றது. சிறுமை, பெருமை, தன்முனைப்பு எல்லாம் நீங்கி விடுகின்றன. இந்த நிலையில் பிறரை மதிக்கவும், ஆதரிக்கவும், பரிவு காட்டவும், மேல்நிலைக்குக் கொணரவுமான பொறுப்புணர்ச்சியைப் பெறுகிறான்.


தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் :

 

"உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
    ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
    தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
    ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க,
    உந்தன் பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்".
                                            வேதாத்திரி மகரிஷி

மிருகம் என்பது புலன்களை மட்டுமே சார்ந்து வாழும் உயிரினத்தைக் குறிக்கிறது, மனிதன் என்பது பகுத்தறிவுடன் வாழும் உயிரினத்தைக் குறிக்கிறது, மாமனிதன் என்பது உதவும் மனப்பான்மையுடன், மனித நேயத்துடன் வாழ்பவரைக் குறிக்கிறதுஇது ஒரு நிலையை அடையாளம் காட்டுகிறது, இதில் மிருகம் என்பது அறிவாற்றலின் ஆரம்ப நிலையையும், மனிதன் அறிவாற்றலின் அடுத்த நிலையையும், மாமனிதன் என்பது உயர்ந்த மனநிலையையும் குறிக்கிறது.

 

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக