18 அக்., 2025

விலங்கினப் பதிவு என்றால் என்ன? அப்பதிவு மனிதனிடம் எவ்வாறு செயல்படுகிறது? விலங்கினப் பதிவிலிருந்து விடுபடுவது எப்படி? வேதாத்திரி மகரிஷி கூற்றின் முழு விளக்கங்கள்:

 



விலங்கினப் பதிவு என்பதன் விளக்கம்:

ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை


விலங்கினப் பதிவு மனிதனிடம் செயல்படும் விதம்:


1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.

2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.

3.மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன் இன்பத்துக்காகவோ பறித்தல்.

இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகாது. அவற்றிற்கு ஒத்தவை, ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால் உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கி சிக்கலின்றி வாழ்வோம்."

பிறவிக் கடல் :

"தன்முனைப்பு, பழிச்செயல்கள் பதிவு, மாயை
    தளை மூன்றும் மனித உயிர் களங்கமாகும்,
வன்முறையில் இவை அறிவைப் புலன்கள் மூலம்
    வழுக்கிப் பிறவிக் கடலை நீள வைக்கும்;
உன்வயமாம் அகத்தவத்தால் அகத்தாராய்வால்
    உண்மையுணர்ந்து அறுகுணத்தைச் சீரமைத்து
இன்முரையில் உயிர்கட்குத் தொண்டு ஆற்றி
    இறைநிறையில் உனை இணைக்கத்தூய்மை உண்டாம்."

 

இயற்கை முறை தவம் - குண்டலினியோகம் :


"ஒன்றிஒன்றி நின்றறிவைப் பழக்கும் போது,
    உறுதிநுட்பம் சக்திஇவை அதிக மாகும்
அன்றுஅன்று அடையும்அனு பவங்கள் எல்லாம்
    அறிவினிலே நிலைத்துவிடும். ஆழ்ந்து ஆய்ந்து
நன்றுஎன்று கண்டபடிச் செயல்க ளாற்றும்
    நற்பண்பு புலன்களுக்கு அமைந்து போகும்.
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
    இயற்கைமுறை சிறப்புடைத்து. இஃதே தவமாம்."
                                            வேதாத்திரி மகரிஷி.


விலங்கினப் பதிவுப் பற்றிய மேலும் விளக்கம்:


மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான குணங்களுடன் இருப்பதை உணர்கிறோம். அவ்வாறு நம்மிடம் உள்ள குணங்கள் விலங்குகளின் குணத்தோடு சம்பந்தமுடையவை என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். குழந்தைகள் விளையாடும் பொழுது பாருங்கள்! சண்டையிட்டு கடித்து வைத்துக் கொள்ளும். இந்தப் பண்பு விலங்கினத்திலிருந்து வந்ததுதான். பெரியோர்களே கூட ஒருசில நேரத்தில் சண்டையிட்டுக் கத்திக் கொள்வர். இதுவும் விலங்கினப் பண்பு தான்.

இரண்டு விதமான விலங்கினங்கள் சந்தர்ப்ப வசமாக ஒன்றுகூடி அதிலே இருந்து முதல் மனிதன் தோன்றி அதன் மூலமாக வளர்ந்ததுதான் உலக சமுதாயம் என்பது விஞ்ஞான முறையிலே உள்ளது. அது மாத்திரமில்லாமல் தசாவதாரம் என்ற முறையிலே உள்ள ஒரு விளக்கம் கூட, அந்தப் பரிணாமத்தைத்தான் கொண்டு வருகிறார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது இரண்டு அறிவுடைய புழு முதற்கொண்டு, ஐந்தறிவுடைய எந்த விலங்கினமானாலும் எப்படி வாழ்கிறது என்று பார்க்கிற பொழுது, பிற உயிரைக் கொன்று, அதனுடைய சதையை உணவாகக் கொண்டு வாழ்கின்றன.

இதற்காகவே அதனுடைய மூளையினுடைய செயல்பாடும், உடல் உறுப்பினுடைய செயல்பாடும், மனதினுடைய செயல்பாடும் அமைந்து, எல்லா ஜீவ இனங்களிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் மனித வர்க்கம் எத்தனை விதமான ஜீவராசிகளைக் கடந்து இன்று மனிதனாகத் தோன்றி, முதல் மனிதன் தோன்றிய அன்றிலிருந்து இன்று வரையிலே விரிந்த நிலையிலே இப்படிச் சமுதாயமாக விரிந்து இருக்கிறதே, அத்தனை மனிதரிடமும் அவ்வளவு ஜீவ ராசிகளின் குணாதிசயங்களும், கருவமைப்பும் பதிவாக அமைந்து, தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.


விலங்கினப் பதிவிலிருந்து விடுபடுவது எப்படி?


இந்தப் பதிவுகளைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்யவில்லையானால் மனித இனம் என்றுமே தூய்மை பெற முடியாது. மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் அவசியம் என்று எல்லோரும் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரே ஒரு வழி, அகத்தவத்தின் மூலமாகவும், பஞ்சேந்திரிய உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டும், மீண்டும் தவறு செய்யாத அளவிலே அந்தக் கட்டுப்பாடு இயல்பாக வரவேண்டும்.

அதற்கும் மேலாக கருவமைப்பின் வழியே வந்த பதிவுகளையெல்லாம் மாற்றி, நல்ல பதிவுகளை மாத்திரம் கொண்டு வாழ்க்கையை தூய்மை செய்து கொள்வதற்கு மூளையிலே உள்ள செல்களையெல்லாம் ஒழுங்கு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பெரியவர்கள் யோகசாதனை என்ற ஒரு முறையை, குண்டலினி யோகம் என்ற முறையை காண்பித்திருக்கிறார்கள். ஆக்கினையிலே உயிர்ச்சக்தியை வைத்து, தவம் செய்து, ஐந்தடக்கி, அதாவது ஒரே ஒரு புலனாக, உணர்வாக, நின்று நிலைக்க, நிலைக்க ஐம்புலன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

அதன்பிறகு மேல்நிலையிலே தியானம் செய்துகொண்டு வரும் பொழுது, இதுவரையிலே எத்தனை விதமான கேடான செயல்களைச் செய்து அந்த மூளையினுடைய செல்கள் சிதைக்கப்பட்டிருக்கிறதோ அந்தச் சிதைவுகளையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டுமானால், உச்சியிலே மூளையிலே மனம் வைத்துத் தியானம் செய்ய வேண்டும். அதைத்தான் துரியம் என்று சொல்வார்கள். அவ்வாறு செய்யும் பொழுது கருவமைப்புப் பதிவாக வந்த எல்லாவிதமான கேடுகளையும் மாற்றியமைத்து மனிதன் தூய்மையடைகிறான்.

அதற்குப் பிறகு எல்லாம் வல்ல இறைநிலையோடு கலப்பதற்கு வான் உணர்வு, தெய்வ உணர்வு என்ற முறையிலே பயிற்சி முறையாக உள்ளது. இந்த பயிற்சியின் மூலமாக மனதையும் ஒழுங்குபடுத்திச் (Streamlining the mind) செயலையும் ஒழுங்குபடுத்தி (Disciplining the deeds) நமது பழக்க வழங்கங்களை மாற்றி, தீய குணங்கள் எழாது செய்தாலொழிய விலங்கினத்தினுடைய பதிவுகள் மாறாது.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கும் எளியமுறை குண்டலினியோகம் மற்றும் உடற்பயிற்சியினை கற்று விலங்கினத்திலிருந்து வந்த பதிவுகளைப் போக்கி வாழ்வின் நோக்கமான முழுமைப்பேறு அடைய வரவேற்கிறோம்!

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக